நிலக்கீழ் நீர் மாசுபடுதலை தடுக்கும் சமூகநலப் பணி




நிலம் சார்ந்த நீர் மாசுபடுதலைத் தடுக்கும் பணியில் அர்த்தஸர்யா அறக்கட்டளையின் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 26 வருடங்களில் இதன் ஊழியர்கள், நலிந்த மற்றும் புறக்கணிக்கப்பட்டுள்ள சமூகத்தின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்காக பணியாற்றி வருகின்றனர்.


அர்த்தஸர்யா அமைப்பு பாதிக்கப்பட்ட சமூகத்தின் பல குழுக்கள் மீது கவனம் செலுத்துகின்றது. உலர் வலயத்தின் மனாவாரி விவசாயிகள், யுத்தத்தினால் இடம்பெயர்ந்தவர்கள், குடிசன நெருக்கடிக்குள் வாழ்வோர் மற்றும் நிலமற்றவர்கள், கரையோர மீன்பிடி சமூகங்கள், நகர்ப்புற சேரிவாசிகள் மற்றும் தோட்டத்துறை சமூகங்கள்,தோட்டங்களின் சுற்றுவட்டத்தில் உள்ள பாரம்பரிய கிராமத்தினர் போன்றவர்களுக்கு இந்த அமைப்பு பணி புரிகின்றது.

இந்த அமைப்பின் புதிய திட்டமானது விவசாய நிலத்தடிநீர் மாசுபடுதலைத் தடுத்தலாகும். இலங்கை உட்பட உலகெங்கும் காணப்பட்ட தேவையினைக் இனங்கண்டு இந்த திட்டத்தினை இவர்கள் மேற்கொண்டு வருகின்றார்கள். தற்பொழுது உலகின் கவனம் நாம் பாவிக்கின்ற நீரின் மீது கவனம் செலுத்துகின்றது.நீர்ப் பற்றாக்குறையானது படிப்படியாக நீரின் தரம் மோசமடைவதன் விளைவாகும். நீர் பயன்பாட்டு செயல்திறன், ஒதுக்கீடுகளில் காணப்படும் சிக்கல்கள், மோசமான கழிவு முகாமைத்துவம்,விவசாய நடைமுறைகள் போன்றனவெல்லாம் நீரின் தரம் பாதிக்கப்படுவதற்குக் காரணிகளாகும்.

80 சதவீத நோய்கள் நீர் சார்ந்ததாக இருப்பதால் நீரின் தரம் கண்காணிக்கப்பட வேண்டியுள்ளது. மோசமான, தரமற்ற நீரைப் பயன்படுத்துவது ஒட்டுமொத்த மனித ஆரோக்கியத்தின் மீது எதிர்மறையான விளைவுகளைத் தருகின்றது. வயிற்றுப்போக்கு, வாந்தி, குமட்டல் போன்ற உடனடி சுகாதாரப் பிரச்சினைகள் ஏற்படுவதுடன் பலவீனமான நோய் எதிர்ப்பு சக்தி, சுவாச நோய்கள், புற்றுநோய் மற்றும் இருதய நோய்கள் போன்ற நீண்ட கால சிக்கல்களும் ஏற்படுவதற்கு இடமுண்டு.

சிறுநீரக செயலிழப்பு, கல்லீரல் இழைநார் வளர்ச்சி, முடி இழப்பு மற்றும் மரணம் கூட தரம் குறைந்த நீரின் விளைவுகளாகும். தரமான குடிநீரைப் பெறுவதில் சிக்கல்கள் உள்ளன. அதேநேரம் நீர் சார்ந்த நோய்களுக்கு நலிந்த சமூகங்கள் அதிகம் உள்ளாகின்றன.

வறுமை,புறக்கணித்தல், நீர் மற்றும் கழிவுப் பொருட்கள் முகாமைத்துவ பராமரிப்பு போன்றவற்றில் விழிப்புணர்வு இல்லாத காரணத்தினால் நலிந்த சமூகங்களின் மத்தியில் நீண்ட கால நோய்கள் ஏற்படுகின்றன. இதனால் அவர்கள் மீண்டும் வறுமை நிலைக்கு செல்கின்றனர்.எனவே இப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பது அவசியம்.

ஐக்கிய நாடுகள் சபை அனைத்து தரப்பினருக்கும் சுத்தமான நீரை வழங்கும் கொள்கையைக் கொண்டுள்ளது.

உலகளாவிய ரீதியல் நடத்தப்பட்ட ஆய்வுகளின்படி போதிய அறிவு இல்லாமை போன்ற பல காரணங்கள் நீர் மாசுபடுதலுக்கான காரணங்களாக கண்டறியப்பட்டுள்ளன. நீர் மாசுபடுதலை தேசிய நிகழ்ச்சி நிரலில் செல்வாக்கு செலுத்தும் வகையில் கொண்டுவர வேண்டுமென ஆர்த்தஸர்யா அறக்கட்டளை நம்புகின்றது. இலங்கையில் நீர் தொடர்பான 20க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் உள்ளன. இவ்வாறான அனைத்து நிறுவனங்களும் நீர் தொடர்பான கொள்கையினைக் கொண்டுள்ளன.

ஆனால் முறையான ஒருங்கிணைப்பு மற்றும் சீரான தன்மை அவற்றுக்கிடையே இல்லை. நீர் மாசுபடுதலை கட்டுப்படுத்துவதற்கான ஒருங்கிணைந்த முயற்சியை யாரும் முன் வைக்கவில்லை. இந்த இடைவெளியினை நிரப்புவதை அர்த்தஸர்யா அறக்கட்டளை நோக்கமாகக் கொண்டுள்ளது. இதற்கென விரிவான மற்றும் திறமையான கொள்கையினை உருவாக்க வேண்டும். இவ்வாறான கொள்கையானது நீர் முகாமைத்துவத்தில் ஈடுபடும் நிறுவனங்களுக்கு இடையில் ஒழுங்கான ஒருங்கிணைப்பினை உருவாக்குவதுடன் சீரான அணுகுமுறையினையும் உருவாக்கும்.

இந்த திட்டத்திற்காக பலவகையான பங்குதாரர்களின் ஆதரவினை அறக்கட்டளை திரட்டியுள்ளது. இந்தத் திட்டத்திற்கான குறிப்பிடத்தக்க அர்ப்பணிப்புகளையும் அவர்கள் வழங்கியுள்ளனர். இந்த திட்டத்திற்கு பல்வேறு வழிகளில் ஆதரவினை வழங்கிய பின்வரும் பங்குதாரர்களை அர்த்தஸர்யா அறக்கட்டளை நன்றியுடன் ஏற்றுக் கொள்கின்றது. விவசாய அமைச்சு, ஐக்கிய நாடுகளின் உணவு மற்றம் விவசாய அமைப்பு , வயம்ப, றுகுணு, ரஜரட்டை மற்றும் ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகங்கள்,விவசாயத் திணைக்களம், சர்வதேச நீர் முகாமைத்துவ நிறுவனம், மாகாண ,விவசாய அமைச்சுகள்,சில அரச சார்பற்ற நிறுவனங்கள் இவையாகும்.

இந்தத் திட்டத்திற்கான ஆளணியும் ஒரு ஆலோசகரும் நியமிக்கப்பட்டுள்ளனர். 2020ஆம் ஆண்டு மார்கழி மாதம் வரை இத்திட்டமானது நீடிக்கும். இத்திட்டத்தின் இறுதி நோக்கமானது, நிலத்தடி நீர் மாசுபடுதல் சம்பந்தமான ஒரு கொள்கைக்கு செல்வாக்கு செலுத்தும் வகையில் கழிவுநீர் முகாமைத்துவத்தின் செயற்பாட்டினை அதிக செயல்திறன் மிக்கதாகவும் சீரானதாகவும் செயற்படுத்துவதாகும்.

இந்த மூன்று வருட திட்டம் இந்தியா, நேபாளம், வங்காளதேசம், பூட்டான் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில்மேற்கொள்ளப்படுகிறது.சுவிற்சர்லாந்தின் முக்கிய பங்காளியாக கரிடாஸ் இணைந்துள்ளது.இந்தத் திட்டம் நாடு முழுவதிற்குமுரிய முயற்சியாக இருந்தாலும், அதற்கு அமெரிக்க அரசு மற்றும் கரிடாஸ் சுவிற்சர்லாந்து ஆகியவை நிதியுதவி அளிக்கின்றன.