காணாமல்போன எவருக்கும் இதுவரை மரணச்சான்றிதழ் வழங்கப்படவில்லை



காணாமல் போனதாகக் கருதப்படும் எந்தவொரு நபருக்கும் இதுவரை மரணச் சான்றிதழ்கள் வழங்கப்படவில்லையென உள்ளக, உள்நாட்டு அலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.

பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற வாய்மூல விடைக்கான வினா நேரத்தின்போது முஹம்மது நசீர் எம்.பி.யினால் உள்ளக, உள்நாட்டு அலுவல்கள் ,மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகள் அமைச்சர் வஜிர அபேவர்தனவிடம் காணாமல் போனோர் சார்பாக பிறப்பு மற்றும் இறப்பு பதிவு விசேட ஏற்பாடுகள் சட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ள மரணச் சான்றிதழ்களின் எண்ணிக்கை ஒவ்வொரு மாவட்ட ரீதியாக எத்தனையுள்ளதெனக் கேள்வி எழுப்பியிருந்தார். 

எனினும் முஹம்மது நசீர் எம்.பி சபையில் இருக்காததன் காரணமாக அரசு தரப்பு பிரதம கொறடாவான அமைச்சர் கயந்த கருணாதிலக்க, உள்ளக உள்நாட்டு அலுவல்கள்,மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகள் அமைச்சர் வஜிர அபேவர்தன சார்பில் பதிலை சபா பீடத்தில் சமர்ப்பித்தார்.

அந்தப் பதிலிலேயே காணாமல் போனதாகக்கருதப்படும் எந்தவொரு நபருக்கும் இதுவரையில் மரணச் சான்றிதழ் வழங்கப்படவில்லை எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.