மாகாண சபை தேர்தல் சட்ட மாஅதிபருடன் ஆலோசிக்க கட்சி தலைவர்கள் முடிவு



மாகாண சபைத்தேர்தலை துரிதமாக நடத்துவது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் பேச்சு நடத்தவும் அதன் பின்னர் சட்ட மாஅதிபரை அழைத்து சட்ட ரீதியான இடையூறுகள் குறித்து ஆராயவும் நேற்று நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கட்சித் தலைவர்களின் கூட்டம் சபாநாயகர் கரு ஜயசூரியவின் தலைமையில் சபாநாயகரின் உத்தியோகபூர்வ அறையில் நடைபெற்றது.இதன் போது மாகாண சபைத்தேர்தல் தொடர்பில் முக்கியமாக ஆராயப்பட்டது. இச் சந்திப்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க,எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ, உட்பட கட்சித் தலைவர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

மாகாண சபைத்தேர்தலை துரிதமாக நடத்துவதன் அவசியத்தை கட்சித் தலைவர்கள் அனைவரும் வலியுறுத்தியதுடன் இது தொடர்பில் ஆழமாக ஆராயப்பட்டதாக சபாநாயகர் அலுவலகம் தெரிவித்தது. சிறு கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளுக்குள்ள பிரச்சினைகள் தொடர்பாக ஜனாதிபதியுடன் பேச்சு நடத்த அந்த கட்சிகள் முடிவு செய்துள்ளன.

ஜனாதிபதியுடன் நடத்தும் பேச்சு வார்த்தையின் பின்னர் சட்டமா அதிபரை அழைத்து அவரின் அபிப்பிராயத்தை பெற்று அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பதற்கு கட்சித் தலைவர் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

6 மாகாண சபைகளின் பதவிக்காலம் நிறைவடைந்துள்ளதோடு 3 மாகாண சபைகளே தற்பொழுது இயங்கி வருகின்றன. எஞ்சிய மாகாண சபைகளின் காலமும் சில காலங்களில் நிறைவடைய உள்ளமை தெரிந்ததே.