கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் நடமாடும் சேவை



அகமட் எஸ். முகைடீன்

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் கீழ் இயங்கும் வைத்தியசாலைகள் மற்றும் சுகாதார சேவை நிலையங்களில் கடமையாற்றும் உத்தியோகத்தர்கள், ஊழியர்களின் குறைபாடுகளை அவர்களுக்கு அண்மித்த சேவை நிலையத்திற்குச் சென்று இலகுவில் நிவர்த்திப்பதற்கு ஏதுவாக குறித்த பணிமனையின் நடமாடும் சேவை செவ்வாய்க்கிழமை (19) சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் நடைபெற்றது.

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஏ.எல். அலாவுத்தீனின் நிர்வாக திட்டமிடலின் சிறப்பம்சமாக அவரது தலைமையில் நடைபெற்ற இந்நடமாடும் சேவையில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் வைத்திய அதிகாரிகள், உள்ளிட்ட உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டு தமது சேவையினை வழங்கினர்.

சம்மாந்துறை ஆதார வைத்தியசாலை, சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம், பிராந்திய மார்புநோய் தடுப்பு பிரிவு, மல்வத்தை மற்றும் சென்னெல் கிராமம் ஆரம்ப வைத்திய பராமரிப்பு நிலையங்கள் ஆகியவற்றில் கடமையாற்றும் உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள் இந்நடமாடும் சேவையில் கலந்துகொண்டு தமது குறைபாடுகளை நிவர்த்தி செய்து கொண்டனர்.

இந்நடமாடும் சேவையில் சம்பள நிலுவைக் கொடுப்பனவு, பதவிஉயர்வு, இடமாற்றம், சம்பள முரண்பாடு மற்றும் சுயவிபரக் கோவையிலுள்ள குறைபாடுகள் போன்றவற்றுக்கான தீர்வுகள் அவ்விடத்திலேயே வழங்கிவைக்கப்பட்டன.

இதன்போது சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் இலத்திரனியல் வரவேற்பு (ஈ - றிசப்சன்) பிரிவு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஏ.எல். அலாவுத்தீனால் திறந்துவைக்கப்பட்டதோடு இயன் மருத்துவப் பிரிவுக்கான வைத்திய உபகரணங்களும் வழங்கிவைக்கப்பட்டன.