தமிழ் தேசிய கூட்டமைப்பை அரசுடன் இணையுமாறு அழைப்பு

தமிழ் மக்களின் அபிவிருத்தியை முன்னெடுக்க தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசுடன் இணைய வேண்டுமென அமைச்சர் சம்பிக்க ரணவக்க அழைப்புவிடுத்துள்ளதுடன், அரசியல் வாதிகள் அணுசரணை அரசியல் நடத்துகின்றார்களே தவிர, திட்டமிட்ட வகையில் அரசியலை நடத்தவில்லை என்றும் குற்றஞ்சாட்டினார்.

யாழ்ப்பாணத்தில் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை நேற்று  (21) ஆரம்பித்து வைத்த அமைச்சர் சம்பிக்க ரணவக்க, யாழ்ப்பாணம் புல்லுக்குளம் பகுதியில் தூர சேவை பஸ்தரிப்பிட கண்காணிப்பு நிலையத்திற்கான அடிக்கல்லை நாட்டி வைத்து உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் உரையாற்றுகையில், யாழ்.மாவட்ட அபிவிருத்தியை இங்குள்ள பிரதிநிதிகளையும் இணைத்துக்கொண்டு அபிவிருத்தித் திட்டங்களை முறையாக செயற்படுத்தவுள்ளோம். குறிப்பாக நகரங்களை அபிவிருத்தி செய்யும் போது, சாதாரணமாக எமது நிதியைக் கொண்டு அபிவிருத்தி செய்வதை விட சில சந்தர்ப்பங்களில் வெளிநாட்டு நிதியைப் பெற்று மூலோபாய நகரமாக அபிவிருத்தி செய்ய வேண்டிய தேவைகள் இருக்கின்றன. அவ்வாறு அபிவிருத்தி செய்யும் போது, அதற்குப் பெருந்தொகையான நிதி தேவை. அதற்கு வெளிநாட்டு உதவிகளை நாடி நிற்கின்றோம்.

தற்போது இணங்கண்டுள்ள மூலோபாய அபிவிருத்தித் திட்டங்களில் யாழ்ப்பாணமும் இணைக்கப்பட்டுள்ளது. ஆகவே, மூலோபாய நகர அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் யாழ்ப்பாண நகரமும் அபிவிருத்தி அடையுமென்று உறுதியளித்தார்.

எதிர்வரும் காலங்களில் மூலோபாய நகர அபிவிருத்தி திட்டங்களின் போது, ஏனைய நகரங்களையும் இணைத்துக்கொள்ள எதிர்பார்க்கின்றோம். அந்த சந்தர்ப்பத்தில் திருகோணமலை மற்றும் மன்னார் மாவட்டமும் உள்ளடங்கும்.

எமக்குப் பல்வேறு விதமாக பௌதீக ரீதியிலான பிரச்சினைகள் இருக்கின்றன. மழைநீர் வழிந்தோடும் வடிகால்கள் எவ்வாறு உள்ளன என்பது பற்றித் தெரியாது, அவை மிக முக்கியமானவை. அதைவிட மிக முக்கியமாக குறிப்பிட வேண்டிய ஒன்று உள்ளது. மின்சாரமும் மிக முக்கியமான விடயம். நான் மின்சார அமைச்சராக இருந்த போது, யாழ்ப்பாணத்தில் பல இடங்களில் மின்சாரம் இருக்கவில்லை. பல சிரமமான நிலையில் பல பிரதேசங்கள் இருந்தன. உத்துரு ஜனனி என்ற திட்டத்தின் கீழ் இந்தப் பிரதேசங்களுக்கு முழுமையான மின்சாரத்தைப் பெற்றுக்கொடுக்கும் நடவடிக்கையையும் மேற்கொண்டோம். அதேபோன்று, கழிவு முகாமைத்தும் மிக முக்கியமானது. விசேடமாக, திண்மக்கழிவு முகாமைத்துவம் மிக முக்கியமானது. அதற்கான நடவடிக்கையும் முன்னெடுக்கப்படும்.

சில அடிப்படை வசதிகள் அரசாங்கத்தினால் செய்யப்பட வேண்டும். அந்த வசதிகளை திட்டமிட்ட வகையில் செய்து தருவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளுவோம் என்றும் உறுதியளித்தார்.

அதேநேரம், இன்னுமொரு முக்கிய விடயத்தை குறிப்பிட வேண்டும். 1968 ஆம் ஆண்டில் நீலன் திருச்செல்வம் அரசியலில் நீரோட்டத்தில் இணைந்து அமைச்சராக இருந்து இந்தப் பிரதேசத்தை அபிவிருத்தி செய்யும் நடவடிக்கையை முன்னெடுத்தார். அதற்குப் பிறகு, பல அரசியல் கட்சிகள் இருந்து அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு அமைச்சர்கள் இருக்கவில்லை. ஆகவே, தான் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனிடம் ஒன்றைக் கூறி வைக்க விரும்புகின்றேன்.

இன்று அரசாங்கத்துடன் கைகோர்த்துக்கொண்டு இருப்பது போன்றே, எதிர்காலத்தில் அரசாங்கத்தில் இணைந்துகொண்டு, இந்தப் பிரதேச மக்களின் அபிவிருத்திக்காக எங்களுடன் இணையுங்கள். அப்போது, இந்த மக்களின் தேவையான சேவைகளைச் செய்ய வாய்ப்புக் கிடைக்கும் என்று வேண்டுகோள் விடுத்தார்.

இந்த மக்களுக்குத் தேவையான அபிவிருத்திகள் முன்னெடுக்க வேண்டும். அந்த வகையில், நாம் திட்டமிட்டவாறு அபிவிருத்தி நடவடிக்கை முன்னெடுக்க வேண்டும். அரசியல்வாதிகள், அணுசரணை அரசியல் செய்துகொண்டிருக்கின்றார்கள். திட்டமிட்டவகையில் அரசியலை முன்னெடுக்கவில்லை. ஆனால், அவர்களின் பிரதேசத்தை மட்டுமே அபிவிருத்தி செய்கின்றார்களே தவிர, பொதுவான எண்ணக்கருவுடன் செயற்படுத்த வேண்டுமென்ற சிந்தனையுடன் செயற்படுவதில்லை.

இந்தக் குறைபாடுகளை களைந்து, எதிர்காலத்தில் திட்டமிட்டவாறு இந்தப் பிரதேசத்தை அபிவிருத்தி செய்வோம். அதற்கான ஒத்துழைப்பு வழங்க வேண்டும். அதேநேரம், மக்களின் ஒத்துழைப்புடனும், மக்கள் பிரதிநிதிகளின் ஒத்துழைப்புடனும், இந்தப் பிரதேசத்தை அபிவிருத்தி செய்ய எங்களுடன் கைகோர்த்து செய்பட முன்வருமாறு அமைச்சர் சம்பிக்க அழைப்பு விடுத்தார்