சிலிண்டர் வெடித்தமையால் பாடசாலை மாணவி உயிரிழப்பு !!

வீட்டின் சமயலறையில் இருந்த காஸ் அடுப்பில் தீ பரவியமையால் 16 வயதுடைய பாடசாலை மாணவியொருவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையின் அதி தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டிருந்தார். அவர் இன்று காலை சிகிச்சை பயனின்றி உயிரிழந்தார்.

வவுனியா மடுக்கந்தை மயிலங்குளம் பகுதியில் கடந்த சனிக்கிழமை மாலை, வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் குறித்த பாடசாலை மாணவி சமைப்பதற்காக சமயலறைக்கு சென்று காஸ் அடுப்பைப் போட்டுள்ளார்.

காஸ் சிலிண்டர் வெடித்தமையால், பலத்த எரிகாயமடைந்த மாணவி உடனடியாக அயலவர்களின் உதவியுடன் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார்.

எனினும் சிகிச்சை பயனின்றி இன்று காலை குறித்த மாணவி உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவத்தில் மயிலங்குளத்தைச் சேர்ந்த மாணவியே உயிரிழந்தார்.

சிலிண்டர் விபத்து நடப்பதற்கு முக்கிய காரணங்கள் என்னென்ன?
‘‘தினமும் தூங்கப் போவதற்கு முன்னால் ரெகுலரேட்டரை ஆஃப் செய்துவிட வேண்டும். நிறையபேர் அதைப் பின்பற்றுவதில்லை. ரெகுலேட்டரில் இருந்து கேஸ் கசிவதால்தான் பெரும்பாலான விபத்துகள் நடக்கின்றன. கேஸ் சிலிண்டரின் உள்ளே இருக்கும் புரோப்பேன் (Propane), பூட்டேன்   (Butane) ஆகியவை திரவ வடிவில்தான் இருக்கும். அதுதான் அடுப்பு வழியாக நமக்கு வாயு வடிவில் வருகிறது. சிலிண்டரில் இருந்து கேஸ் லீக் ஆகும்போது எளிதில் உணர்ந்து கொள்ள உதவியாக எத்தில் மெர்கேப்டன் (Ethyl Mercaptan) என்ற கெமிக்கல் சேர்க்கப்பட்டிருக்கும். இந்த கெமிக்கல்தான் கேஸ் லீக்காவதை முதலில் எச்சரிக்கை செய்யும். அந்த வாசனையை உணர்ந்ததும் உடனடியாக உஷாராகி செயல்பட வேண்டும். இல்லையென்றால் சிலிண்டரில் இருந்து வெளிவரும் திரவம் தரையில் பரவிவிடும். சின்ன தீப்பொறி  ஏற்பட்டாலோ, எலெக்ட்ரிக்கல் ஸ்விட்சை ஆன் செய்தாலோ பெரிய விபத்து ஏற்பட்டுவிடும். இப்படித்தான் சிலிண்டர் விபத்து நடக்கிறது.
சிலர் அடுப்பில் பால் பாத்திரத்தை வைத்துவிட்டு வேறு வேலையைப் பார்க்கப் போய்விடுவார்கள். அந்த இடைவெளியில் பால் பொங்கி வழிந்து அடுப்பை அணைத்துவிடும். திரும்ப அடுக்களைக்குள் வருபவர்கள், அடுப்புதான் அணைந்துவிட்டதே என்று நினைப்பார்கள். அல்லது அடுப்பை தாங்கள் அணைக்கவில்லை என்பதை மறந்து போய்விடுவார்கள். ஆனால், சிலிண்டரில் இருந்து கேஸ் வெளியேறிக் கொண்டிருக்கும். அப்படியே கொஞ்சம் கொஞ்சமாக பரவி, வீடு முழுவதும் நிரம்பி விபத்துகளை உருவாக்கிவிடும். எனவே, அடுப்பில் எதையாவது வைத்திருந்தால் பக்கத்தில் இருந்து கவனித்துக்கொள்ள வேண்டியது அவசியம்.
சில வீடுகளில் கிச்சனோடு பூஜையறையும் சேர்ந்தே இருக்கும். விளக்கேற்றுவது அல்லது ஊதுவத்தி கொளுத்துவது போன்றவற்றை செய்துவிட்டு, வீட்டை பூட்டிவிட்டு வெளியே போய்விடுவார்கள். இந்த மாதிரியான நேரங்களில் சிலிண்டரில் இருந்து கேஸ் லீக் ஆனாலும் விபத்து நடக்க வாய்ப்பு இருக்கிறது.
சிலர் கிச்சனிலேயே ஃப்ரிட்ஜ், மைக்ரோவேவ் அவன் போன்ற மின்னணு சாதனங்களை வைத்திருப்பார்கள். சிலிண்டர் லீக்ஆகும் நேரத்தில் இவற்றுக்கு மின்சாரம் வரும் ஸ்விட்ச் போர்டில் இருந்து சின்ன ஸ்பார்க் வந்தாலும் எளிதில் தீ பற்றிக் கொள்ளும். எனவே, கிச்சனில் மின்னணு சாதனங்களைப் பயன்படுத்துவதை தவிர்ப்பது நல்லது.
மாடுலர்கிச்சன் என்ற பெயரில் சிலர் சிலிண்டரை மர கப்போர்டுகளால் பூட்டி வைத்துவிடுவார்கள். இதனால் கேஸ் லீக் ஆனால் கூட ஆரம்பத்திலேயே தெரியாமல் போய்விடும். எந்த மாடல் கிச்சனாக இருந்தாலும் சிலிண்டரை வெளியில், காற்றோட்டமான இடத்தில் வைத்திருக்க வேண்டும்.
சிலர் ஜன்னலுக்கு அருகில் கேஸ் அடுப்பை வைத்திருப்பார்கள். அதிகமான காற்று அடிக்கும் நேரங்களில் அடுப்பு அணைந்து போய்விடும். வேறு வேலைகளில் பிஸியாக இருந்தால், அது கவனத்துக்கு வராமலே போய்விடும். இப்படி லீக் ஆகும் கேஸ் ஆபத்தைக் கொண்டு வந்து சேர்க்கும்.
முன்பெல்லாம் அடுப்பைப் பற்ற வைக்க தீக்குச்சிகளைப் பயன்படுத்தினோம். இப்போது லைட்டர் கருவி வந்து விட்டது. இது எளிதாக இருப்பதாக பலரும் நினைக்கிறார்கள். அப்படி இல்லை.உண்மையை சொல்லப் போனால் லைட்டர்களாலும் விபத்துகள் நடக்கின்றன. கையில் வைத்து ‘டக்டக்’ என்று தட்டிக் கொண்டிருக்கும் போது கேஸ் லீக் ஆகி, கவனிக்காமல் விட்டுவிட்டால் குப்பென உடலிலேயே நெருப்பு பற்றிக் கொள்ளும் ஆபத்தும் இருக்கிறது. எனவே, இந்த விஷயத்தில் அலட்சியம் கூடாது. அடுப்பை ஆன் செய்த அடுத்த சில விநாடிகளுக்குள் நெருப்பை பற்ற வைப்பது ரொம்ப முக்கியம்’’.