அடையாள அட்டை, கடவுச்சீட்டு இனி பிரதேச செயலகங்களிலும் பெற்றுக்கொள்ளலாம்

ஆட்பதிவு திணைக்களத்தினால் வழங்கப்படும் இலத்திரனியல் தேசிய அடையாள அட்டைகளை பிரதேச செயலகங்கள் மூலமாக வழங்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஆட்பதிவு திணைக்கள ஆணையாளர் நாயகம் அறிவித்துள்ளார்.

நாடளாவிய ரீதியில் உள்ள 331 பிரதேச செயலகங்களில் அமைக்கப்பட்டுள்ள ஆட்பதிவு திணைக்கள கிளைக் காரியாலயங்களுக்கு ஒப்படைக்கப்படும் விண்ணப்பங்கள் ஒன்லைன் மூலமாக கொழும்பில் உள்ள தலைமைக் காரியாலயத்திற்கு அனுப்பி வைக்கப்படுவதன் மூலம் மீண்டும் பிரதேச செயலகம் மூலம் இவ்வடையாள அட்டை விநியோகிக்கப்படும்.

தேசிய அடையாள அட்டைகளைப் பெறுவதற்காக கொழும்புக்கு வருவதனை குறைக்கும் நோக்கிலேயே பிரதேச மட்டத்தில் இந்நடவடிக்கை பரவலாக்கப்படுகிறது என ஆட்பதிவுத் திணைக்களம் அறிவித்துள்ளது.

பிரதேச செயலகம் மூலம் இலத்திரனியல் தேசிய அடையாள அட்டை வழங்கப்படுதலை இலகுபடுத்தும் நோக்குடன் மாகாண காரியாலயங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்படவுள்ளது. தற்போது வடக்கு, கிழக்கு மாகாணங்களில் மட்டும் மாகாண காரியாலயங்கள் இயங்குகின்றன.

இதேவேளை, கடவுச்சீட்டு வழங்கும் நடவடிக்கைகளை மாவட்டச் செயலகங்கள் ஊடாக வழங்கும் நடவடிக்கைகள் இவ்வருடம் ஜூன் மாதம் முதல் நடைமுறைப்படுத்தப்படுமென குடிவரவு, குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது.

கடவுச்சீட்டை பெறுவதற்காக மக்கள் கொழும்பிற்கு சமுகமளித்து அலைவதை தடுக்கும் நோக்குடன் மாவட்ட மட்டத்தில் குடிவரவு, குடியகல்வு திணைக்கள கிளைக் காரியாலயங்களை அமைத்து ஒன்லைன் மூலமாக கொழும்பில் உள்ள தலைமை காரியாலயத்துக்கு அனுப்பி வைப்பதன் மூலம் மாவட்டச் செயலகங்கள் மூலம் கடவுச்சீட்டுக்கள் வழங்கப்படவுள்ளன.

தற்போது சகல நாடுகளுக்குமான கடவுச்சீட்டுக்கள் மட்டும் குடிவரவு, குடியகல்வு திணைக்களத்தால் வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை உடனுக்குடன் WhatsApp இல்  தெரிந்துகொள்ள 
  0771660248 இந்த இலக்கத்தை உங்கள் தொலைபேசியில் Battinews என Save பண்ணுங்கள் 
 உங்கள் WhatsApp இருந்து JOIN என மேலே குறிப்பிட்ட எமது இலக்கத்துக்கு ஒரு மெசேஜ் அனுப்புங்கள்