மட்டக்களப்பு புதுக்குடியிருப்பில் தொடர் திருட்டுச்சம்பவங்களால் மக்கள் அச்சத்தில்


(செ.துஜியந்தன்)
மண்முனைப்பற்று புதுக்குடியிருப்பு கிராமத்தில் கடந்த சில தினங்களாக திருடர்களின் நடமாட்டமும் திருட்டச்சம்பவங்களும் அதிகரித்துள்ளது. இதனால் அம் மக்கள் மிகுந்த அச்சமடைந்துள்ளனர்.



காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புதுக்குடியிருப்பில் கடந்த புதன்,வியாழன், வெள்ளி, சனி ஆகிய தினங்களில் இரவு வேளையில் திருடர்கள் வீடுபுகுந்து அங்குள்ளவர்களைத் தாக்கிவிட்டு தங்கநகை, நெல்மூடைகள் உட்பட பல்வேறு பொருட்களைத் திருடிச் சென்றுள்ளனர்.
இரவு நேரத்தில் வீட்டிற்குள் நுழையும் முகமூடி அணிந்த திருடர்கள் தூக்கத்தில் இருக்கும் வீட்டாரை தாக்கியும், கை கால்களை கட்டிவிட்டும் பெறுமதியான பொருட்களை களவாடிச் செல்கின்றனர். அத்துடன் இங்குள்ள மக்கள் கஷ்டப்பட்டு விவசாயம் செய்து தற்போது அறுவடை செய்த நெல்மூடைகளை வீடுகளில் விற்பனைக்காக அடுக்கிவைத்திருக்கும் விவாசாயிகளின் வீட்டிற்குள் நுழைந்து நெல்மூடைகளை தூக்கிச் செல்கின்றனர். இவ்வாறான சம்பவங்கள் புதுக்குடியிப்பில் பரவலாக நடைபெற்றுவருகின்றன.

திருடர்களினால் தாக்கப்ட்டவர்கள் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றும் வருகின்றனர். வியாழக்கிழமை கடற்கரைவீதியிலும், வெள்ளிக்கிழமை பிரதானவீதியிலும் வீட்டிற்குள் நுழைந்தவர்கள் அங்கிருந்த பெண் ஒருவரையும், இளைஙர் ஒருவரையும் தாக்கியுள்ளனர். சனிக்கிழமை இரவு புதுக்குடியிருப்பு வீட்டுத்திட்டம் பகுதியிலும் பெண்ணொருவரை தாக்கி தங்கநகையை அபகரித்துச் சென்றுள்ளனர்.

புதுக்குடியிருப்பில் இரவு 10 மணிக்குப் பின்னர் நடைபெற்றுவரும் தொடர் திருட்டுச் சம்பவங்களால் கிராமமக்கள் மிகுந்த அச்சத்தில் உறைந்துபோயுள்ளனர். இரவுவேளையில் காத்தான்குடி பொலிஸார் இக் க்pராமத்தில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டு திருட்டுச் சம்பவங்களில் ஈடுபடும் நபர்களை கைது செய்வதற்க்கு நடவடிக்கை எடுக்கவேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.