அரசியலமைப்பு சாத்தியமில்லை என ஜனாதிபதி கூறுவதை நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம் ; சுமந்திரன் தெரிவிப்பு




அரசியலமைப்பு சாத்தியமில்லை என ஜனாதிபதி கூறுவதை நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம்.அவர் நாட்டு மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியை மறந்து செயற்பட்டாலும் நாங்கள் அதனைக் கைவிடப் போவதில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் ஊடகப் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு வாகரையில் சனிக்கிழமை (02) மாலை 2.00மணியளவில் நடைபெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பொங்கல் விழாவில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் -

நாங்கள் ஒரு இருண்ட அரசியல் சூழ்நிலைக்குள்ளே சென்று அதிலிருந்து விடுபட்டு ஒரு நல்ல எதிர்காலத்தை எதிர்நோக்கலாம் என்கின்ற சூழ்நிலையிலே தான் இந்தத் தை பிறந்திருக்கின்றது. தை பிறந்ததால் வழி பிறக்கும் என்ற நம்பிக்கை திரும்பவும் துளிர்விடுவதான ஒரு நம்பிக்கை இருக்கின்றது.

எங்களைத் தலைநிமிர்ந்து வாழ விடுங்கள், எங்களையும் சமமாக மதியுங்கள், எங்களுக்கான அரசியல் உரித்துக்களை நாங்கள் எடுத்துக் கொள்ள விடுங்கள். எங்களை நாங்களே ஆள விடுங்கள், அப்படிச் செய்கின்ற போது நீங்களும் இந்த தேசத்திலே சுயமாக, நிம்மதியாக, சமாதானமாக வாழக் கூடிய சூழ்நிலை ஏற்படும் என இந்த நாட்டிலுள்ள அனைவருக்கும் கூற விரும்புகிறோம்.

ஒரு இனம் இன்னுமொரு இனத்தை அடக்குவதனால் அந்தத் தேசத்திலே சமாதானம் ஏற்படாது. அடக்குதல் என்று சொல்லும் போது குண்டு மழை பொழிந்து அடக்குவது மட்டுமல்ல ஜனநாயகத்தின் மூலமாகவும் அடக்கலாம்.

ஆட்சி முறையை மாற்றுங்கள் என்று சொல்லுகின்றோம். அதிகாரத்தைப் பகிர்ந்து கொடுங்கள், ஓரிடத்தில் வைத்திருக்க வேண்டாம் என்று கூறுகின்றோம். அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்படுகின்ற போது முழு நாட்டிலும் எண்ணிக்கையில் சிறுபான்மையினராக இருந்தாலும் கூட வெவ்வேறு இடங்களில் நாங்கள் பெரும்பான்மைப் பலத்தை வைத்து நாங்களே தீர்மானத்தை எடுக்கக் கூடியதாக இருக்கும். அப்டியான ஒரு ஆட்சி முறைக்கு மாற்றுமாறு தான் நாங்கள் கேட்டுக்கொண்டிருக்கின்றோம்.அதற்காக நீண்ட தூரம் வந்தும் இருக்கின்றோம்.

இந்த நாட்டிலே சிறிய கட்சிகள் தங்களுடைய பெறுமதிக்கு மேலாக செல்வாக்கைப் பயன்படுத்துகின்ற போது அது ஒரு நிலையான ஆட்சி இல்லை என்று சொல்லுகின்றார்கள்.

எண்ணிக்கையிலே சிறுபான்மையினத்தவர் தங்கள் வாக்கினால் தங்கள் செல்வாக்கினால் ஆட்சியை நிர்ணயிக்கின்ற போது யார் ஆட்சி செய்வார்கள் என்று அவர்கள் தீர்மானிக்கும் சக்தியாக இருக்கின்ற போது இதனைச் செய்ய முடியாது என்றே சொல்லுகின்றார்.

ஜனாதிபதி தேர்தலிலே வெற்றி பெற்ற போது தீர்மானிக்கும் சக்தியாக இருந்தவர்கள் யார்? ஏன்பதை மறந்து செயற்படக்கூடாது

ஜனாதிபதி அவர்களுக்கு மிகவும் தாழ்மையாக நாங்கள் ஒன்றைக் கூறிக் கொள்ள விரும்புகின்றோம். நீங்கள் அந்தத் தேர்தலிலே வெற்றி பெற்ற காரணத்தினால் தான் இன்று ஜனாதிபதி கதிரையிலே இருக்கின்றீர்கள். ஒரு தடைவ மட்டும் தான் நான் ஜனாதிபதியாக இருப்பேன். இன்னுமொரு தடவை போட்டியிட மாட்டேன் என்று வாக்குறுதி கொடுத்த நீங்கள் இன்றைக்கு இரண்டாம் தரம் ஜனாதிபதியாவதைக் கனவாகக் கொண்டு செயற்படுகின்ற காரணத்தினாலே உங்கள் போக்கு மாறியிருக்கின்றது. அதனைச் சுட்டிக் காட்டுகின்ற உரித்து எங்களிடத்திலே இருக்கின்றது.

உங்களை ஜனாதிபதியாக்குகின்ற போது எமது இனப் பிரச்சனைக்கான தீர்வை எழுத்திலே கொடுக்கத் தயாராக இருந்தீர்கள். அதற்கு நானே சாட்சி. இன்னும் பலபேர் அங்கே இருந்தோம். ஆனால் நீங்கள் வெற்றிபெற வேண்டும் என்பதற்காக அதனை எழுத்திலே நாங்கள் கேட்கவில்லை. பின்னர் நீங்களும் அதனை ஊர்ஜிதம் செய்திருக்கின்றீர்கள். கொடுத்த வாக்குறுதிகளை தவறாமல் நிறைவேற்ற வேண்டிய தார்மிகப் பொறுப்பு இன்னமும் உங்களிடம் இருக்கின்றது.

இந்த அரசலமைப்புப் பேரவை உருவாக்கப்பட்ட அன்று அதற்கான முன்மொழிவு பாராளுமன்றத்திலே 2016ம் ஆண்டு ஜனவரி மாதம் 09ம் திகதி சமர்ப்பிக்கப்பட்ட போது நீங்கள் ஆற்றிய உரையை மீண்டும் ஒருமுறை செவிமடுத்துப் பாருங்கள்.

ஏன் இந்த நாட்டுக்கு ஒரு அரசியலமைப்புத் தேவை என்பதை நீங்கள் சொல்லியிருக்கின்றீர்கள். பண்டா செல்வா, டட்லி செல்வா ஒப்பந்தங்கள் நிறைவேற்றப்பட்டிருந்தால் இந்த நாட்டில் ஒரு இரத்தக் களரி ஏற்பட்டிருக்காது நானும் அந்த வேளையிலே தவறாக அதனை விமர்சித்தேன் என்று சொன்னீர்கள். இந்திய இலங்கை ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டிருந்தால் கூட இந்த நாட்டில் பிரச்சினை ஏற்பட்டிருக்காது என்று நீங்கள் அன்று சொன்னீர்கள்.

தெற்கில் இருக்கின்றவர்களுக்கு சமஷ்டி என்றால் பயம் ஏற்படுகிறது. வடக்கில் இருப்பவர்களுக்கு ஒற்றையாட்சி என்று சொன்னால் பீதி ஏற்படுகின்றது. நாட்டு மக்கள் பாhத்துப் பயப்படுகின்ற ஒரு விடயமாக அரசியலமைப்புச் சட்டம் இருக்கக் கூடாது என்று நீங்கள் தான் சொன்னீர்கள். இந்தச் சொற்களையெல்லாம் விடுத்து நாங்கள் ஒரு நவீன அரசியலமைப்பை உருவாக்க வேண்டும் என்று சொன்னீர்களா இல்லையா? எங்கே சென்றது இந்த வாக்குறுதிகள்.

ஒரு விடயத்தை நாங்கள் சொல்லி வைக்க விரும்புகின்றோம். ஜனாதிபதி அவர்கள் தன்னுடைய முழு நாட்டுக்கும் கொடுத்த வாக்குறுதியை மறந்து செயற்பட்டாலும் கூட நாங்கள் அதனைக் கைவிடப்போவதில்லை. ஒக்டோபர் 26ல் அவர் சதிப் புரட்சி வலைக்குள்ளே சிக்கி செயற்பட்ட போதும் கூட நாங்கள் அவரைச் சந்தித்து அவரது முகத்திற்கு நேரே சில உண்மைகளை மரியாதையோடு சொல்லி வைத்தோம்.

நீங்கள் அரசியலமைப்பை மீறியிருக்கினறீர்கள், இது ஜனநாயகத்திற்கு விரோதமானது, சட்டத்திற்குப் புறம்பானது நாங்கள் உங்களை ஆதரிக்க முடியாது என்று நேரடியாகவே அவரிடம் சொன்னோம். அதனை மாற்றியமைப்பதற்காக மற்றவர்களோடு சேர்ந்து செயற்பட்டோம். நிலைமை மாற்றப்பட்டது.

புதியதொரு அரசியலமைப்பு உருவாக்க்பட வேண்டும். இதுவரை தமிழ் மக்கள் ஏற்றுக் கொண்ட அரசியலமைப்பு இந்த நாட்டிலே கிடையாது. அது ஒரு உண்மையான சமூக ஒப்பந்தமாக இருக்க வேண்டும் என்றார்.