ஒருவர் காணாமல் போயுள்ளார். ! சந்தேகத்தில் மூவர் கைது.

(கே. கிலசன்)

வயல்நிலத்திற்குச் சென்ற விவசாயி ஒருவர் நேற்று மாலை 5 மணியிலிருந்து  காணாமல் போயுள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி பிரதேச செயலக பிரிவிலுள்ள  ராணமடு மாலையர்கட்டு கிராமங்களை இணைக்கும் 16ம் கிராமம் அணைக்கட்டுப் பாதையில் வைத்தே 64 வயதுடைய கணபதிப்பிள்ளை திருநாவுக்கரசு எனும் 11ம் கிராமத்தில் வசிக்கும் விவசாயி ஒருவர் நேற்று (10.03.2019) ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணி முதல் காணாமல் போயுள்ளார்.


இவர் தனது வயல் நிலத்திற்குச் சென்று திரும்பி வரும் வழியிலேயே இச்சம்பவம் நடந்துள்ளது. இன்று திங்கட்கிழமை காலை வரை வீடு திரும்பாத நிலையில் வெல்லாவெளி பொலிஸ் நிலையத்தில்  உறவினர்களால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனடிப்படையில் குறித்த இடத்திற்கு விரைந்த பொலிஸாரும் பொதுமக்களும் இணைந்து தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்ட போது அணைக்கட்டுப் பகுதியை அண்டிய காட்டுப் பகுதியிலிருந்து மோட்டார் சைக்கிள், கெல்மட் மற்றும் பாதணிகள் கண்டெடுக்கப்பட்டு அவை குறித்த நபருடையதென உறவினர்களால் உறுதிப்படுத்தப்பட்டது.

குறித்த நபருக்கு வயல் காணி தொடர்பான ஒரு தகராறு ஒரு குடும்பத்துடன்  இருந்ததாகவும் குறித்த குடும்ப நபர்கள்  நேற்று மாலை காணாமல் போயுள்ளவரை தாக்க முயன்றதாகவும் உறவினர்கள் வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில் சந்தேக நபர்கள் மூவரில் இருவர் வெல்லாவெளி பொலிஸாரினாலும் ஒருவர் மத்தியமுகாம் பொலிஸாரினாலும் கைது செய்யப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதன் பின்னர் விசாரணைகளைத் துரிதப்படுத்திய வெல்லாவெளி பொலிஸார் மாலை 5 மணி முதல் 6.15 மணி வரை மோப்ப நாயின் உதவியுடன் குறித்த காட்டுப் பகுதியில் தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபட்ட போதும் எதுவித தடயங்களும்  கிடைக்கவில்லை.

காணமல் போனவரின் உறவினர்கள் கண்டுபிடித்துத் தருமாறு கதறி அழுததுடன் பொதுமக்களும் அவ்விடத்தை விட்டுச் செல்ல மறுத்தனர். இதன்போது தாம் தொடர்ந்தும் தேடுதலில் ஈடுபடுவதாகவும், சந்தேக நபர்களிடம் துரித விசாரணைகளை மேற்கொண்டு நாளை காலை நல்லதோர் பதில் தருவதாகவும் வெல்லாவெளி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உறுதியளித்ததையடுத்து பொதுமக்களும் உறவினர்களும் அவ்விடத்தை விட்டு கலைந்து சென்றுள்ளனர்.