வழிபாட்டு தலத்தை அகற்றும் அதிகாரம் நீதிமன்றத்துக்கு கிடையாது என அறிவித்தல் விடுத்தும் சிவலிங்க சிலை களவாடப்பட்டுள்ளது.



துறையூர் தாஸன்.

சவளக்கடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பூமரத்தடிச் சந்தியில் அமைந்துள்ள சிவலிங்க ஆலயத்தின் சிலை மற்றும் உண்டியல் இன்று இதிகாலை (20) களவாடப்பட்டுள்ளதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது,

1985 ஆம் ஆண்டு உருவாகிய இவ் ஆலயம்1990 இல் அழிவடைந்து
கடந்த 04 ஆம் திகதி சுயமாக உருவான சிவலிங்கம் உட்பட பிள்ளையார் , காளியம்மன் படங்களும் காணாமல் போயுள்ளதாக சமூக மட்டக் குழுக் களைச் சேர்ந்தவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

இவ் வழிபாட்டு தலம் தொடர்பாக இப்பிரதேசத்திலுள்ள முஸ்லிம் நபர் ஒருவர் அதனை அகற்றுமாறு கோரி கல்முனை நீதவான் நீதிமன்றில் வழக்குதாக்கல் செய்திருந்ததுடன் அவ் வழக்கு நேற்று(19) செவ்வாய்க்கிழமை கல்முனை நீதிமன்றில் இடம்பெற்றபோது இவ் வழிபாட்டு தலத்தை அகற்றும் அதிகாரம் நீதிமன்றுக்கு கிடையாது எனவும் வீதி அபிவிருத்தி அதிகார சபையே இது தொடர்பான அவதானிப்பை கண்காணிக்கவேண்டும் என அறிவித்தல் விடுத்திருந்த நிலையில் இன்று அதிகாலை வேளையிலிருந்தே சிவலிங்கம், சுவாமி படங்கள், உண்டியல் என்பன திருடப்பட்டுள்ளது.

இனந்தெரியாத விசமிகளின் இச்செயற்பாட்டினால் இந்துக்களின் மனம் புண்பட்டுள்ளதுடன் களவாடப்பட்டுள்ள குறித்த ஆலயத்தின் சிவ சின்னங்களை கண்டுபிடிக்க பொலிஸார் நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.