அரச, அரச சார்பற்ற நிறுவனங்களால் மாத்திரம் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையினை மேற்கொள்ள முடியாது.





(க. விஜயரெத்தினம்)

அரச, அரச சார்பற்ற நிறுவனங்களால் மாத்திரம் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையினை மேற்கொள்ள முடியாது. அனைவரும் இணைந்து செயற்படுகின்ற போது மாத்திரமே நாட்டில் போதைப்பொருளை பாவனையினை தடுக்க முடியுமென மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் மேலதிக அரச அதிபர் திருமதி.சுதர்ஷினி ஸ்ரீகாந் தெரிவித்தார்.

நாட்டின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் "போதைப்பொருளை கட்டுப்படுத்தி நாட்டிலே போதையற்ற சமூகமாக உருவாக்குவோம்" எனும் செயற்றிட்டம் நாடளாவியரீதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.இதனை மட்டக்களப்பு மாவட்டத்தில் முழுமையாக அமுல்படுத்தும் வேலைத்திட்டம் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.இது சம்பந்தமான முன்னேற்ற கலந்துரையாடல் கூட்டமானது மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் மேலதிக அரசாங்க அதிபர் திருமதி. சுதர்ஷினி ஸ்ரீகாந் தலைமையில் இன்று(14)காலை 11.00 மணியளவில் நடைபெற்றது.

இக்கலந்துரையாடல் கூட்டத்தில் மாவட்ட செயலக உத்தியோகஸ்தர்கள் ,பிரதேச செயலாளர்கள்,மட்டக்களப்பு மாவட்ட உதவி பொலிஸ் அத்தியட்சகர் எல்.ஆர்.குமாரசிறி,மட்டக்களப்பு சிறைச்சாலை அத்தியட்சகர் கே.எம்.யூ.எச்.அக்பர்,கலால் திணைக்கள உத்தியோகஸ்தர்கள்,வைத்திய அதிகாரிகள்,சமுதாய சீர்திருத்த உத்தியோகஸ்தர்கள்,மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டார்கள்.

மேலதிக அரசாங்க அதிபர் மேலும் கருத்து தெரிவிக்கையில்:-

போதைப்பொருள் தடுப்பு தொடர்பாக போதையற்ற நாடு என்ற அடிப்படையிலே அதிமேதகு ஜனாதிபதி அவர்களுடைய பணிப்புரையை அடிப்படையாக கொண்ட செயற்திட்டங்கள் கடந்த மூன்று வருடங்களாக செயற்படுத்தப்படுகின்றது.மாவட்ட மட்டத்தில் போதைப்பொருள் தடுப்பு மாவட்ட மட்ட குழு அவ்வாறாக பிரதேச மட்டத்தில் பிரதேச செயலக ரீதியாக போதைப்பொருள் தடுப்பு தொடர்பான பிரதேச மட்ட குழு ,கிராம மட்ட குழு,என ஒரு கட்டமைப்பின் கீழ் இந்த செயற்பாடுகள் இடம்பெற்றுக் கொண்டு இருக்கின்றன.

அவ்வாறாக கல்வி திணைக்களம் மற்றும் அரச திணைக்களங்களிலும் இந்த அமைப்புக்கள் செயற்பட்டுக்கொண்டு வருகின்றன.பாடசாலைகளில் போதைப்பொருள் தடுப்பு தொடர்பாக செயற்பாட்டுக்குழுக்கள் அமைக்கப்பட்டு இயங்கிக்கொண்டு இருக்கின்றன.இருந்த போதும் இந்த விடயங்கள் தொடர்பாக ஒரு மீளாய்வு கடந்த வருடத்தை விட நாங்கள் இந்த வருடம் செய்ய இருக்கின்ற திட்டங்கள் தொடர்பான மீளாய்வை செய்து இங்கு காணப்படுகின்ற அரச , அரச சார்பற்ற நிறுவனங்களுடைய பிரதிநிதிகள் நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்கின்ற துரித செயற்திட்டத்தை நாங்கள் செயற்படுத்த வேண்டும் .

ஆகவே இதிலே குறிப்பாக பிரதேச மட்டத்தில் இருக்கின்ற விடயங்களுக்காக நாங்கள் எங்களுடைய சமுதாய சீர்திருத்த உத்தியோகத்தர்கள் ஒவ்வொரு பிரதேச ரீதியிலும் செயற்பட்டுக்கொண்டு இருக்கிறார்கள்.அதற்குரிய மாவட்ட உத்தியோகத்தர்களும் மாவட்ட குழுவில் அங்கம் வகிக்கின்றனர்.ஆகவே எங்களுக்கு ஒவ்வொரு பிரதேச பிரிவுகளிலும் உள்ள சமுதாய சீர்திருத்த உத்தியோகத்தர்கள் ஊடாக அவர்களை வைத்துக்கொண்டு இந்த செயற்பாட்டை சிறந்த முறையில் செய்ய முடியும். குறிப்பாக மாவட்ட செயலகம் பிரதேச செயலகம், பொலிஸ் திணைக்களம் , கவல் திணைக்களம் ,அரச சார்பற்ற நிறுவனம் ,சுகாதார திணைக்களம் அல்லாமல் நாங்கள் அனைவரும் இணைந்து செயற்படுகின்ற போது மாத்திரமே போதைப்பொருள் பாவனையினை தடுக்க முடியும்.ஒவ்வொரு நாளும் இந்த போதை பொருள் தடுப்பு பற்றி பேசிக்கொண்டு இருக்கின்றோம்.இந்த விடயங்களை விமர்சிக்கின்றோம். கதைத்துக்கொண்டிருக்கின்றோம்.ஆனால் அதற்கான எங்களுடைய செயற்பாடுகளை நாம் உத்வேக படுத்த வேண்டும் என்கின்ற தேவை இப்பொழுது காணப்படுகின்றது என்பதை நங்கள் உணர்கின்றோம்.

ஆகவே இவ்விடயத்தில் அனைத்து திணைக்களங்களும் மிகவும் உற்சாகமாக செயற்பட வேண்டும். பிரதேச மட்டத்தில் இருக்கின்ற அந்த அமைப்பை நாம் பலப்படுத்துகின்ற போது சிறந்த ஒரு தொகுதி நமக்கு உருவாகும்.ஒவ்வொரு பிரதேச மட்டத்திலும் இந்த போதைப்பொருள் தடுப்பு தொடர்பாக 2 மாதங்களுக்கு ஒரு முறை கூட்டங்களை நடாத்தி மீளாய்வு செய்யப்பட்டு செயற்பாடுகளை நாம் செய்கின்ற போது மாவட்டத்திலே அது ஒரு இலகுவான ஒரு நடைமுறையை கொண்டு வரமுடியும்.

ஆகவே இந்த விடயங்கள் தொடர்பாக நாங்கள் கடந்த 2018 ஆம் ஆண்டு பல செயற்பாடுகளை செய்துள்ளோம்.ஜனாதிபதி செயலகத்தின் மூலம் எமக்கு அதற்காக நிதிகள் பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்புகள் காணப்படுகின்றது. எங்களுடைய திட்ட வரைபுகளை சமர்பிக்கின்ற போது அதற்கான நிதிகளை பெற்று கிராம மட்ட செயற்பாடுகளை செய்யக்கூடியதாக இருக்கின்றது .அவ்வாறான திட்டங்களையும்,2019 ஆண்டுக்கான திட்டங்களையும் ,மாவட்ட செயலகத்திற்கு சமர்ப்பிக்கும் பட்சத்தில் நாங்கள் அதையும் துரிதமாக செயற்படுத்த கூடியதாக இருக்கும்.ஆகவே இந்த வகையில் இதனை தொடர்ந்து நாங்கள் கடந்த வருடம் என்னென்ன விடயங்களை போதைப்பொருள் தடுப்பு தொடர்பாக செயற்பாடுகளை செய்தோமோ அவற்றுக்கான மீளாய்வுகளை செய்து இவ்வருடமும் சென்ற வருடத்தை போன்று அவற்றை நடைமுறைப்படுத்த நடவடிக்கைகளை எடுப்போம் என கருத்துரை வழங்கினார்.