அழிந்து போகும் சிற்பக்கலையினை பாதுகாத்து கின்னஸ் சாதனையினை நிலைநாட்டுவதே என்னுடைய நோக்கமே. சிற்பக்கலைஞர் -ஜனாசுகிர்தன்


(நேர்காணல் - சா.நடனசபேசன் )
இலங்கைத் திருநாட்டில் மரச் சிற்பங்கள் பண்டைய காலத்தில் பாதுகாக்கப்பட்டு வந்தாலும் இன்று இவ்வாறான கலை அம்சங்கள்  எமது சமூகத்தின் மத்தியில் இருந்து அழிந்து போகும் நிலையினைக் காணக்கூடியதாக இருக்கின்றது. இந்த நிலையினை மாற்றி  மரச்சிற்பக்கலையினை பாதுகாக்கும் நோக்குடனும் கின்னஸ் சாதனையினை நிலைநாட்டும்  நோக்குடனும் பல்வேறு வகையான மரச்சிற்பங்களை வடித்துவருகின்ற கல்முனை மாநகர சபைக்குட்பட்ட துரைவந்தியமேட்டுக்கிராமத்தில் வசிக்கும் சிற்பக் கலைஞர்  சுந்தரம் ஜனாசுகிர்தன் எனும் சிற்பக்கலைஞர் அவர்கள் ஞாயிறு தினக்குரலுக்கு அவரால் வழங்கப்பட்ட செவ்வி  பின்வருமாறு 
1.உங்களைப் பற்றி சிறிது அறிமுகம் செய்யமுடியுமா?
எனது பெயர் சுந்தரம் ஜனாசுகிர்தன்  மட்டக்களப்பு ஆரையம்பதியினைப் பிறப்பிடமாகவும் மட்டக்களப்பு சின்ன ஊறணியில் வசித்துவந்த நான் அம்பாரை மாவட்டத்தின் துரைவந்தியமேட்டுக்; கிராமத்தில் திருமணம் செய்து வசித்துவருகின்றேன். ஆரையம்பதியில் கல்வி கற்று பின்னர் திருகோணமலை விபுலானந்தாக்கல்லூரியிலும் கற்றேன்.இன்று கலையினைப்பாதுகாக்க வேண்டும் என்பதற்காக பல்வேறுபட்ட நுட்பமான முறையில் சிற்பங்களை வடித்துவருகின்றேன்.
2.சிற்ப வேலைப்பாடுகளில் எவ்வளவு காலமாக செயற்பட்டு வருகின்றீர்கள்?
நான் படிக்கும் காலத்தில் அதிகாமாக சிற்பக்கலையில் நாட்டம் இருந்து வந்ததுடன் எம்பக்கதேவலாயம் மற்றும் இந்தியாவில் இருக்கின்ற ஆலயங்களில் இருக்கும் சிற்பங்களை ரசித்து அதனை விட மேலாக மரச்சிற்பத்தினை வடிக்கவேண்டும் என்ற எண்ணம் எனது மனதிலே சுமார் 13 வருடங்களாக வாஞ்சை கொண்டிருந்தது
3.மரச்சிற்ப வேலைப்பாடுகளில்  மிகவும் ஆர்வமாக நீங்கள் ஈடுபட்டமைக்கான காரணம் ஏதுவாக இருந்தது.
நல்லதோர் கேள்வியைக் கேட்டு எனது மனதில் இருக்கும் அனைத்தையும் வெளியில் கொண்டுவருவதற்காக முயற்சித்த உங்களுக்கும் உங்களது நிறுவனத்திற்கும் முதலில் நன்றி தெரிவிக்கவேண்டும் அதாவது சிற்பங்கள் பண்டைய காலத்தில் மரத்தினால் செய்யப்பட்டு வழிபடப்பட்டன. மரத்தினால் தெய்வ உருவினை வடித்து வணங்குதல் தொல் மரபாகும். மரமே தெய்வமாக வணங்கப்படும் சமூகத்தில் மரத்தினால் சமைக்கப்பட்ட தெய்வ உரு உயர்வானதாகக் கருதப்பட்டது. சங்க காலத்தில் மரச்சிற்பங்கள் மாளிகைகளில் இருந்தமை குறிப்பிடப்படுகின்றது. மரச்சிற்பங்கள் முழு உருவத்தில் தனிச்சிற்பங்களாகவும், மரப்பலகையில் புடைப்புச் சிற்பங்களாகவும் செதுக்கி வடிக்கப்படும்.

 அத்தி, தேவதாரு போன்ற மரங்கள் தெய்வ வடிவங்கள் செய்வதற்கு பொதுவாக பயன்படுகின்றன. மரச்சிற்பங்கள் தெய்வ உருவங்களாகவும்இ புராணக் காட்சிகளாகவும் வடிக்கப்பட்டு தேர்களில் பொருத்தப்படுகின்றன. மரச்சிற்பங்கள் அதிக அளவினவாக தேர்ச்சிற்பங்களாகவே காணப்படுகின்றன. மேலும் கோயில்களின் வாயிற்கதவுகளில் உள்ள சிற்பங்கள், பல்லக்குகள், வாகனங்கள் ஆகியன மரத்தினால் செய்யப்படுகின்றன. மரச்சிற்பங்கள் அழகுடைய வடிவுடையனவாக செதுக்கப்பட்டு பல நிற வண்ணங்களினால் செழுமைப் படுத்தப்படுகின்றன. மரச்சிற்பங்கள் இயற்கைச் சூழலுக்கேற்பவும்இ பராமரிக்கப்படும் தன்மைக்கேற்பவும் மெருகு குலையாமல் கலை வடிவை காட்டி நிற்கின்றன.
இதற்கு மேலாக எனது சிற்பங்கள் அமைய வேண்டும் என்பது எனது ஆசையாக இருக்கின்றது எனக்குப் பொதுவாக சிற்பக்கலையினை  ரசிக்கும் ஆர்வம் அதிகம் உள்ளது ஓவியங்கள் வரையும் பழக்கம் உள்ளது ஒரு மரக்கிளையினைக் கண்டால்  அதனை ஒரு கலை நயமாகவே பார்த்து ரசிப்பேன் அதற்கு மேலாக எனது சித்தப்பா சகாயராஜன் மரச்சிற்ப வேலை செய்து வந்தவர் அவர் மூலமாகவும் எனது ஆர்வம் சிற்ப வேலைகளில் அதிக ஈடுபட வைத்தது
4.இதுவரை காலமும்  எவ்வகையான செதுக்கல் வேலைகளைச் செய்துள்ளீர்கள் எனக் கூறமுடியுமா?
வட இந்தியாவைப் போன்றே, தமிழகத்திலும் பல்லவ, பாண்டிய சோழர்களின் ஆட்சிக் காலத்தில் கோயில் வாயிலின் நிலைகளின் மேற்பகுதியில் சிற்பங்கள் அமைக்கும் வழக்கம் பின்பற்றப்பட்டது. நிலைக்காலின் இரண்டு பக்கங்களிலும் வளமையைக் காட்டும் செடி கொடிகளின் உருவங்கள் செதுக்கப்பட்டன. விசய நகர நாயக்கர் காலத்தில் இம்மரபு மாற்றமடைந்தது. கோயில் வாயிற் கதவுகளில் சிற்பங்கள் செதுக்கப்பட்டன. இவை பொதுவாகத் தனியாகச் செய்து கதவுகளில் பொருத்தி வைக்கப்பட்டுள்ளன. இதற்கான கருத்துகளைப் புராணங்களிலிருந்தும், இராமாயணம், மகாபாரதம் ஆகியவற்றிலிருந்தும் எடுத்துக் கொண்டனர். இதுபோல் சிற்பங்களுடன் அமைக்கப்பட்ட கதவுகள் தமிழகத்தில் பல கோயில்களில் காணப்படுகின்றன.இச்சிற்பங்களை ஒத்ததாகவே  என்னால் அமைக்கப்பட்ட கோயில் கதவுகளின் சிற்பங்களும் கோயில் தேர் வேலைப்பாடுகளும் அத்தோடு சுவர் ஓவியங்களும் எனது சிற்ப வேலைப்பாடுகளில் முதன்மை பெறுகின்றன இது தவிர வீடுகளுக்கான கதவு அலங்காரங்கள் ,மரத்திலான விருதுகள்,மரப்பலகையினை நெருப்பினால் சுட்டு எரிப்பதன் மூலமாக அலங்காரங்களைச் செய்து வருகின்றேன். இந்த கலை அம்சமானது எமது நாட்டில் அரிதாக இருப்பதுடன் இவ் சிற்பங்களுக்கு மேலேத்தேய நாடுகளில் அதிக வரவேற்பு காணப்படுகிறது
5.உங்களால் மிகவும் சிறிய அளவிலான பிள்ளையார் சிலை ஒன்று வடிவமைக்கப்பட்டு இருப்பதாக அறிய முடிகின்றது இதுபற்றி சொல்லமுடியுமா?
ஆம்
 எனது அவா எனது செதுக்கல் வேலைப்பாடுகள் வரலாற்றுச்சாதனை படைக்கவேண்டும் என்பதற்காக பல்வேறு வகையான சிற்பங்கள் செதுக்கப்பட்டு இருக்கின்றன அதிலும் முதல் முறையாக மரத்தினால் ஆன 1.2 சென்றிமீற்றர் உடைய மிகவும் சித்திர வேலைப்பாடுகளுடனான பிள்ளையார் சிலையினை செதுக்கியுள்ளேன் இவ்வளவு சிறிதாக எந்தக் கலைஞரும் வடித்ததாக நான் அறியவில்லை இது வரலாற்றுச் சாதனை படைக்கும் என நம்புகின்றேன். இதனை வெளியுலகிற்குக் கொண்டுவருவதற்கு ஊடகங்களும் அதன் பிரதானிகளும் எனக்கு உதவ வேண்டும்
6.உங்களது திறமை மேலும் வளர்ச்சியடைவதற்கு யாராவது உதவிகள்செய்துள்ளார்களா?

அவ்வாறு இதுவரைக்கும் யாரும் உதவிகள் செய்யவில்லை என்னைப் பொறுத்தமட்டில் தற்போது எவ்வித வசதிகளற்ற வெள்ளகாலத்தில் போக்குவரத்து முற்றாகத்துண்டிக்கப்படும்  கிராமமாக இருக்கின்ற கல்முனை மாநகரசபைக்குட்பட்ட துரைவந்தியமேட்டில் வசித்துக்கொண்டு இருக்கின்றேன் .யாராவது எனக்கு உதவிகளை மேற்கொள்வதுடன் எனது திறமையினை வெளி உலகிற்கு எடுத்துக்காட்ட உதவிகள் செய்யவேண்டும் எனத் தெரிவித்தார்