கிழக்கின் கல்வி மேம்பாட்டிற்கான அமைப்பு



மு.கோகிலன்

கிழக்கின் கல்வி மேம்பாட்டிற்கான கனடா அமைப்பினர் மட்டக்களப்பு வாகரை பிரதேசம் மற்றும் திருகோணமலை மூதுர் பிரதேசங்களில் உள்ள மிகவும் பின்தள்ளப்பட்ட பாடசாலைகளுக்கு கள விஜயமொன்றினை மேற்கொண்டிருந்தனர்.

இதன்போது மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்கு தடையாகவுள்ள காரணிகளை அடையாளம் கண்டு அவற்றினை நிவர்த்தி செய்யும் செயற்பாடுகளை குறித்த பாடசாலை அதிபர்கள்,ஆசிரியர்கள் மற்றும் பாடசாலைஅபிவிருத்தி குழுவுடன் இணைந்து கலந்துரையாடினர்.


அத்துடன் அடையாளம் காணப்பட்ட விடயங்களை செயற்படுத்துவதற்கான திட்டங்களையும் தயாரித்தனர்.

மாணவர்களின் கல்வியை மேலும் விருத்தி செய்வதற்கு பிரத்தியேக வகுப்புக்களை ஏற்பாடு செய்தல் ,மாணவர்களின் உடல் உள ஆரோக்கியத்திற்கான விளையாட்டுக்களை நடாத்துவதற்கான செயற்பாடுகள் ஏற்படுத்துதல்,ஆசிரியர் தட்டுப்பாடுகளை நிவர்த்தி செய்வதற்கு திறமையான ஆசிரியர்களை வெளியிடங்களில் இருந்து வரவழைத்து கற்பித்தல் நடவடிக்கைகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்தல் மாணவர்களுக்கான பாயிற்சி நூல்கள் மற்றும் கற்றல் உபகரணங்களை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளவது தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.

இதேவேளை மூதுர் கல்வி வலயத்தில் உள்ள பாடசாலைகளில் ஒன்றான,எதிர்காலத்தில் மூடப்படும் நிலையில் காணப்படும் முன்னம்போடிவெட்டை அரசினர் தமிழ் கலவன் பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டது.

அத்துடன் அப்பாடசாலையை மூடவிடாமல் தடுப்பதற்கான எதிர்கால திட்டங்கள் தொடர்பாகவும் கலந்தாலோசிக்கப்பட்டது.

அத்துடன் மூதூர் முன்னம்போடி வெட்டை அரசினர் தமிழ்கலவன் பாடசாலை மற்றும் வாகரை கட்டுமுறிவு பாடசாலைகளுக்கான விளையாட்டு உபகரணங்கள் கொள்வனவு செய்வதற்கு நிதி உதவி வழங்கப்பட்டது.

இந் நிகழ்வுகளில் கிழக்கின் கல்வி மேம்பாட்டிற்கான கனடா அமைப்பின் இஸ்தாபகர் எஸ்.யோகா, மட்டக்களப்பு தேசிய கல்விக் கல்லுரி விரிவுரையாளர் ஆ.சிறிஹரன்,ஆசிரியர் எஸ்.மங்களதர்ஷன் அழகுக் கலை நிபுணர் திருமதி சியானி மரியதாஸ் மற்றும் தோப்பூர் நண்பர்கள் அமைப்பு ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.