இலங்கையில் மழையை உருவாக்கும் திட்டத்தை அமுல்படுத்த நடவடிக்கை



இலங்கையில் வறட்சியுடனான காலநிலை சில பகுதிகளில் தொடர்வதை அடுத்து, சுமார் 10,800க்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வறட்சியுடனான காலநிலையினால் மிக முக்கியமான பல நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் வெகுவாக குறைவடைந்துள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவிக்கின்றது.

நீர்த்தேக்கங்களின் நீர்மட்டங்கள் குறைவடைந்துள்ளமையினால், இலங்கையில் நீர் மின் உற்பத்தியும் தற்போது வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளதாக மின்வலு, சக்திவலு அமைச்சு குறிப்பிடுகின்றது.

இந்த நிலையில், வறட்சியுடனான காலநிலை நிலவும் தருணங்களில் செயற்கையான முறையில் மழையை உருவாக்கும் திட்டமொன்றை ஆரம்பிக்கின்றமை தொடர்பில் இலங்கை அரசாங்கம் தற்போது கவனம் செலுத்தியுள்ளது.




தாய்லாந்து நிறுவனமொன்றின் ஒத்துழைப்புடன் இந்த திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக மின்வலு, சக்திவலு அமைச்சின் ஊடகப் பேச்சாளர் சுலக்ஷன ஜயவர்தன தெரிவித்தார்.

இதன்படி, சோடியம் குளோரைட், கெல்சியம் குளோரைட், கெல்சியம் ஒக்சைட் மற்றும் ஐஸ் கட்டிகளை பயன்படுத்தி, மழையை உருவாக்கும் தொழில்நுட்பம் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

வறட்சியுடனான காலநிலை நிலவும் தருணங்களில் வானில் காணப்படுகின்ற மேகக்கூட்டங்களுக்குள், இவ்வாறான இரசாயண பதார்த்தங்களை செலுத்தி, மழை உருவாக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்தும் நோக்குடன், மழையை உருவாக்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்தும் தாய்லாந்து நாட்டின் நிபுணர்கள் சிலர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இலங்கைக்கு வருகைத் தந்து விடயங்களை ஆராய்ந்துள்ளனர்.



இவ்வாறு நடத்தப்பட்ட ஆய்வுகளின் பிரகாரம், இலங்கையில் மழையை உருவாக்கும் திட்டத்தை அமுல்படுத்த முடியும் என கூறப்பட்டுள்ளது.

இதன்படி, தாய்லாந்து நிபுணர்கள் எதிர்வரும் சில தினங்களில் இலங்கைக்கு மீண்டும் வருகை தரவுள்ளதாகவும், அவர்களின் வருகையின் பின்னர் இந்த மழையை உருவாக்கும் திட்டம் செயற்படுத்தப்படவுள்ளதாகவும் அமைச்சின் ஊடகப் பேச்சாளர் சுலக்ஷன ஜயவர்தன கூறினார்.

இதன் முதற்கட்ட நடவடிக்கைகள் மலையகத்தின் காசல்ரீ மற்றும் மவுசாகலை ஆகிய நீர்த்தேக்கங்களை அண்மித்த பகுதிகளை மையப்படுத்தி முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

விமானத்தின் மூலம் ரசாயண பதார்த்தங்கள் வானிற்கு கொண்டு செல்லப்பட்டு, அவை மேகக்கூட்டங்களுக்குள் செலுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனூடாக மேலும் மேகக்கூட்டங்களை அதிகரிக்கச் செய்து, மழையை உருவாக்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக மின்வலு அமைச்சின் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.

இந்த திட்டத்திற்காக இலங்கை விமானப்படை, இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம், இலங்கை மகாவளி அதிகார சபை, மத்திய சுற்றாடல் அதிகார சபை மற்றும் இலங்கை மின்சார சபை ஆகியன ஒத்துழைப்புக்களை வழங்குகின்றன.

இலங்கையில் வறட்சியுடனான காலநிலை தொடரும் தருணங்களில் நீர்மின் உற்பத்தியை வழமை போன்று உற்பத்தி செய்யும் நோக்குடனேயே இந்த திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.