தமிழ் சிங்கள புதுவருடப் பிறப்பை முன்னிட்டு மட்டக்களப்பு றோட்டறிக் கழகத்தினால் அன்பளிப்புப் பொருட்கள்


(சிவம்)

தமிழ் சிங்கள புதுவருடப் பிறப்பை முன்னிட்டு மட்டக்களப்பு றோட்டறிக் கழகத்தினால் வயோதிபர்கள், மாணவர்கள் மற்றும் விசேட தேவையுடைய மாணவர்களுக்கு புத்தாடைகள், ஒருநாள் உணவுகளுக்கான பணம் மற்றும் சிற்றூண்டிகள் வழங்கும் நிகழ்வு இன்று (17) இடம்பெற்றது.

மட்டக்களப்பு றோட்டறிக் கழகத்தின் முன்னாள் தலைவர் றோட்டறியன் ஏ.ராஜேந்திரனின் அனுசரணையில் நொச்சிமுனை விசேட தேவையுடைய மாணவர்களைப் பராமரிக்கும் தரிசனம் விழிப்புலனற்றோர் பாடசாலை, கல்லடி ஹரி சிறுவர் இல்ல மாணவர்கள் மற்றும் கல்லடி சுவாமி விபுலானந்தா முதியோர் இல்ல வயோதிபர்களுக்கு வழங்கப்பட்டன.

உலக மாந்தர்களின் அன்னையராக விளங்கிய அன்னை திரேசா சமூகத்தில் கைவிடப்பட்ட ஒருவரின் புன்னகையில் இருந்து தான் கடவுளைக் காண்பதாகத் தெரிவித்தார். அதற்கிணங்க கவனிப்பாரற்று இல்லங்களில் பாராமரிக்கப்படும் ஆதரவற்ற வயோதிபர்கள் மற்றும் மாணவர்களுக்கு உதவுவதில்தான் ஆத்ம திருப்தி அடைவதாகத் தெரிவித்தார்.

அதற்கிணங்க ஜேசுபாலனின் பிறப்பைச் சித்தரிக்கும் கிறிஸ்மஸ் தினத்தை முன்னிட்டு ஒவ்வோரு வருடமும் டிசம்பர் மாதத்தில் சத்துருக்கொண்டான் விசேட தேவையுடைய ஓசாணம் இல்லப் பிள்ளைகளுக்கு உதவுவதாகவும் ஏ.ஆர். மேலும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் மட்டக்களப்பு றோட்டறிக் கழகத்தின் எதிர்வரும் ஆண்டுக்காக தெரிவு செய்யப்பட்ட  தலைவர் றோட்டறியன் கலாநிதி கே.பிரேம்குமார், முன்னைநாள் தலைவர்களான றோட்டறியன் எஸ்.சங்கரலிங்கம், றோட்டறியன் எம்.விநாயகமூர்த்தி மற்றும் தமயந்தி ராஜேந்திரன், அபர்ணா பிரேம்குமார் ஆகியோர் கலந்து கொண்டு அன்பளிப்புக்களை வழங்கி வைத்தனர்.