தமிழர்களுக்கு தீர்வு எட்டுமா? – ஐ.நா. வை சந்திக்கிறது இலங்கை


இலங்கை குறித்து மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம் தயாரித்த அறிக்கை, ஐக்கிய நாடுகளின் 40ஆவது மனித உரிமைகள் மாநாட்டில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இன்று (புதன்கிழமை) இந்த அறிக்கை பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

2015 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி இலங்கை தொடர்பாக அமெரிக்கா தலைமையிலான நாடுகள் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் தீர்மானமொன்றை முன்வைத்தன.

இந்த தீர்மானத்திற்கு இலங்கையும் இணை அனுசரணை வழங்கியது.

இந்த தீர்மானத்தில் உள்ளடக்கப்பட்டிருந்த விடயங்களை நடைமுறைப்படுத்துவதற்கான கால அவகாசம் 2017 ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்ற மனித உரிமைகள் பேரவையின்போது இரண்டு வருடங்களால் நீடிக்கப்பட்டது.

இதற்கமையே, இந்த தீர்மானம் நடைமுறைப்படுத்தப்பட்டதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் தொடர்பாக மனித உரிமைகள் ஆணையாளர் இன்று முழுமையான அறிக்கையொன்றை வௌியிடவுள்ளார்.

இந்த அறிக்கைக்கு அமைவாக, இலங்கை குறித்த ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம் முன்னெடுக்கவுள்ள நடவடிக்கைகள் தீர்மானிக்கப்படவுள்ளன.

இதேவேளை இலங்கை அரசாங்கம் சார்பாக வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன தலைமையிலான குழு ஒன்று நேற்று ஜெனீவா சென்றது.

இந்த குழு இன்றையதினம், மனித உரிமைகள் பேரவை இலங்கை குறித்து வெளிப்படுத்தியுள்ள நிலைப்பாட்டுக்கு அரசாங்கத்தின் பதில் நிலைப்பாடு மற்றும் அதிகாரப்பூர்வ அறிக்கையை மாநாட்டில் முன்வைக்கும் என கூறப்படுகின்றது.

மேலும் இலங்கைக்கு கால அவகாசம் வழங்கக்கூடாது, இலங்கையை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்து தமிழர் தாயக பகுதிகளெங்கும் பல போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டதோடு, மக்கள் பிரதிநிதிகள் மற்றும் சில கட்சிகளும் இந்த விடயம் தொடர்பாக வலியுறுத்தியுள்ளன.

எனவே இன்றைய ஜெனீவா அமர்வுகள் இலங்கை மக்களுக்கு குறிப்பாக தமிழர்களுக்கு பதில் கிடைக்கும் வகையில் அமையுமென எதிர்பார்க்கப்படுகின்றது.