கவனிப்பாரற்றிருக்கும் மாவடிமுன்மாரி - தாந்தாமலை பிரதான வீதி




மாவடிமுன்மாரி - தாந்தாமலை பிரதான வீதியே இது. மாவடிமுன்மாரி, நாற்பதுவட்டை, கச்சக்கொடி சுவாமிமலை பாடசாலைகளைச் சேர்ந்த மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் விவசாயிகள், வியாபாரிகள் எனப்பலரும் தினமும் இந்த வீதியினையே பயன்படுத்துகின்றனர்.

பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட இந்த வீதியானது வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்குரியது.

வெயில் காலங்களிலே இவ்வாறெனின் மழை காலங்களில் சொல்லவேண்டியதில்லை.

இவ்விடயமாக பல முறை ஊடகங்கள் வாயிலாகவும் கடிதங்கள் மூலமாகவும் அதிகாரிகளுக்கும் அரசியல் பிரதிநிதிகளுக்கும் எடுத்துக்கூறியும் இதுவரை ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எடுக்காமை தம்மை ஒரு பொருட்டாக கருதவில்லை என்பதனையே எடுத்துக்காட்டுவதாக இப்பிரதேச மக்கள் அங்கலாய்க்கின்றனர்.

இங்குள்ள நோயாளிகளை மகிழடித்தீவிலுள்ள வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதெனின் இந்த வீதியினூடாக சுமார் 20km தூரம் பயணிக்கவேண்டியுள்ளதாகவும் இரவு வேளைகளில் அவசரமாக நோயாளிகளை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும்வேளைகளில் உரிய நேரத்திற்கு சேர்ப்பிக்காமை காரணமாக சில மரணங்களும் சம்பவித்ததாக அவர்கள் கூறுகின்றனர்.

ஈழத்திலே பிரசித்திபெற்ற ஒரு ஆலயமாகவும் தேசத்துக் கோயிலாகவும் உற்சவ காலங்களில் பல இலட்சம் அடியார்கள் வழிபட்டுச் செல்கின்ற இடமாகவுமுள்ள தாந்தாமலை ஆலயத்திற்கான பிரதான வீதியும் இதுவே.

எனவே பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் இவ்விடயத்தினை ஆராய்ந்து தீர்வினைப் பெற்றுத்தருமாறு இப்பிரதேச மக்கள் கோரிக்கைவிடுக்கின்றனர்.