சமூகமயமாக்கல் முகவராக பாடசாலை இணைப்பாடவிதான செயற்பாடுகள்

சமூகமயமாக்கல் என்பது ஒரு தொடர்ச்சியான கருமத்தொடராகும். இதன் மூலம் ஒருவர் தனிப்பட்ட அடையாளத்தைப் பெற்றுக்கொள்வதுடன் தம்மைச் சூழவுள்ள கலாசாரத்தின் நம்பிக்கைகளையும் அச் சமூகத்தில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் எனவும் கற்றுக் கொள்கின்றான். மேலும் சமூகமயமாக்கல் என்பது ஒரு நபர் தனது சமூகச் சூழலிலுள்ள நிலமைக்கு ஏற்ப இசைவாக்கம் அடையும் செயற்பாடாகவும், ஒரு நபர் சமூகத்தில்  ஏற்றுக் கொள்ளப்படுவதற்கு செய்ய வேண்டியவைகள், செய்யக்கூடாதவைகள்  அறிய வேண்டியவைகள் எவை என்பன பற்றி கற்றுக்கொள்ளும் செயற்பாடாகவும் உள்ளது.ஒரு சந்ததியிலிருந்து இன்னொரு சந்ததிக்கு கலாசாரங்கள் இடமாற்றப்படுவது சமூகமயமாக்கல் மூலமாகவே ஆகும்.ஆகவே ஒரு மனிதன் சமூகத்தில் வாழ்வதற்கு சமூகமயமாக்கப்படுவது அவசியமாகும்.

பிள்ளைப் பருவத்திலிருந்தே சமூகமயமாக்கல் ஒருவரிடத்தே ஏற்படுத்தப்பட வேண்டும். இச் சமூகமயமாக்கல் முகவர்களாக குடும்பம், பாடசாலை, பல்கலைக்கழகங்கள், சமூக கலாசார நிறுவனங்கள் என்பன தொழிற்பட வேண்டியது அவசியமாகின்றது. அந்த வகையில் குடும்பத்திற்கு அடுத்ததாக பாடசாலையே சமூகமயமாக்கல் நிறுவனமாகத் தொழிற்படுகின்றது. குடும்பத்திலிருந்து நேரடியாக பாடசாலைக்குச் செல்லும் பிள்ளையை சமூகமயமாக்கல் செயற்பாட்டில் ஈடுபடுத்தும் செயற்பாடுகளாக பாடசாலை இணைப்பாடவிதான செயற்பாடுகள் தொழிற்படுகின்றன.
இன்றைய பாடசாலைச் செயற்பாடுகளை எடுத்து நோக்கின் கற்றல், கற்பித்தல் செயற்பாடுகளைப் போன்றே இணைப்பாடச் செயற்பாடுகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றது.

இணைபாடச்செயற்பாடு என்ற வரையறைக்குள் பாடசாலைக்கலைத்திட்டத்தில் கற்றல், கற்பித்தல் செயற்பாடுகளைத் தவிர்ந்த அனைத்துச் செயற்பாடுகளும் உள்ளடங்குகின்றது. அதாவது இல்ல விளையாட்டுப்போட்டி, கோட்ட, வலய, மாகாண, தேசிய பாடசாலைகளுக்கிடையிலான விளையாட்டுப்போட்டி, தமிழ்த்தினப்போட்டிகள், ஆங்கில, விஞ்ஞான, கணித வினாடிவினாப் போட்டிகள், வாணிவிழா, மீலாத்விழா ,ஒளிவிழா, ஆசிரியர்தினம், பாடசாலைத்தினம், அறிஞர்களின் நினைவுதினம், கல்விச் சுற்றுலா, சாரணர் நிகழ்வுகள், மாணவர் தலைவர் சின்னம் சூட்டும் நிகழ்வுகள், பாடசாலைக் கண்காட்சி கலைவிழா, வெளிக்களச்செயற்பாடுகள்  இசை நாடக நடன சித்திர போட்டிகள் என  அனைத்துச் செயற்பாடுகளும் இணைப்பாட விதானச் செயற்பாடுகளில் அடங்கும். இவ்வாறான இணைப்பாடச் செயற்பாடுகளில் பாடசாலை மாணவர்கள் விரும்பியோ, விரும்பாமலோ கலந்து கொள்ள வேண்டிய கட்டாயம் உள்ளது. இதனால் பிள்ளை தானாகவே சமூகமயமாக்கலுக்கு இட்டுச் செல்லப்படுகின்றது.

இணைப்பாடச் செயற்பாடுகளில் ஒன்றான இல்ல விளையாட்டுப்போட்டியை எடுத்துக் கொண்டால்விளையாட்டுப் பிள்ளையிடம் நற்பண்புகளை வளர்ப்பதுடன், விட்டுக்கொடுப்பு, வெற்றி தோல்விகளை சமமாக ஏற்றுக் கொள்ளல், தலைமைக்கு கட்டுப்படும் பண்பு விதிகளைக் கடைபிடித்தல், சட்டதிட்டங்களை மீறாமை, உடலைக் கட்டாகப் பேணுதல், வெற்றிக்காகப் போராடும் முயற்சியை வளர்த்தல் போன்ற சமூகமயமாக்கல் பண்புகள் வளர்க்கப்படுகின்றன. இதனால் எதிர்காலத்தில் வாழ்க்கையில் வரும் தோல்விகளை தாங்கிக் கொள்வதற்கும், தற்கொலை போன்ற விடயங்களில் ஈடுபடாமல் இருப்பதற்கும்  மேலும் குற்றச் செயல்களான கொலை, மதுப்பாவனை போன்றவற்றில் ஈடுபடாமல் இருப்பதற்கும் விளையாட்டுச் செயற்பாடுகள் உதவுகின்றன. மேலும் கோட்ட, வலய, மாகாண, தேசிய ரீதியில் விளையாட்டுப் போட்டியில் ஈடுபடும் போதுகிணற்றுத் தவளையாக இல்லாமல்சமூக விழிப்பு ஏற்பட்டு சமூகமயமாக்கல் தோற்றம் பெறுகின்றது அத்துடன் பிறரின் திறமைகளுடன் ஒப்பிடும்; போதுதான் எந்த நிலையில் உள்ளேன் என்பதையும்இன்னும் எவற்றை வளர்க்க வேண்டும் என்றும் அறிவதுடன் மத, இன, சாதி, பேதங்களை மதிக்கும் தன்மையும், நட்புறவுடன் செயற்படும் ஆற்றலும் வளர்த்தெடுக்கப்படுகின்றது.

மேலும் பாடசாலைத் தமிழ்த்தினப் போட்டி, ஆங்கில தினப் போட்டி போன்ற போட்டிகளில் ஈடுபடுவதால் மாணவர்களின் அறிவு மேம்படுவதுடன், போட்டி போட்டு செயற்படும் விதத்தை அறிந்து கொள்ளல்சமூகத்தில் பிற மாணவர்களுடன் சேர்ந்து பழகும் வாய்ப்பு, நட்புறவுகளை வளர்த்துக் கொள்ளல், தோல்வியை ஏற்றுக் கொண்டு வெற்றி பெற்றவர்களைப் பாராட்டும் பண்பு என சமூகமயமாக்கல் பண்புகள் வளர்க்கப்படுகின்றன.

எதிர்காலத்தில் வாழ்க்கையில் வரும் தோல்விகளை தாங்கிக் கொள்வதற்கும், தற்கொலை போன்ற விடயங்களில் ஈடுபடாமல் இருப்பதற்கும்  மேலும் குற்றச் செயல்களான கொலை, மதுப்பாவனை போன்றவற்றில் ஈடுபடாமல் இருப்பதற்கும் விளையாட்டுச் செயற்பாடுகளே உதவுகின்றன.

மாணவர் தலைவர் பதவிகள் மற்றும் பயிற்சிப் பாசறைகள் போன்றவைகள் மூலம் தலைமைத்துவப்பண்பு வளர்க்கப்படுவதுடன் வாழ்வில் ஒரு செயலை பொறுப்பெடுத்து சரியாகத் திட்டமிட்டு நடாத்துதல், அதன் போது வரும் முரண்பாடுகளைத் தீர்த்தல், எந்த விடயத்தையும் துணிந்து செய்ய முற்படல், பிறரை தன் கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருத்தல், சமூக சேவைகளில் ஈடுபடல் போன்ற சமூகமயமாக்கல் பண்புகள் வளர்க்கப்படுகின்றன.

வாணிவிழா, மீலாத்விழா, ஒளிவிழா போன்ற சமய விழாக்களை பாடசாலை நடாத்துவதன் மூலம் மதங்களை மதித்து நடப்பதற்கு இது உறுதுணை புரிகின்றது. மற்றும் சமூகத்தில் இன, மத, ஒற்றுமைக்கும் இது வழி சமைக்கின்றது. மேலும் இனக்கலவரங்கள் குறைவடைவதற்கும் இதுவே காரணமாகும்.

மேலும் இணைப்பாடவிதானச் செயற்பாடுகளில் அடங்கும் கண்காட்சி, புத்தாக்கப்போட்டி, சஞ்சிகை நாவல் வெளியீடு என்பவற்றின் பிள்ளையின் அறிவு தூண்டப்படுவதுடன் சமூகத்திற்கு இன்றைய நிலையில் எது தேவைஎன்று அறியவும் முடிகின்றது. மேலும்   morning assemply, massprayer  என்பவற்றின் மூலம் நேர முகாமைத்துவம், கலாசாரம் என்பவற்றை எதிர்காலத்தில்  சமூகத்திற்குள் நுழையும் பிள்ளை கற்றுக் கொள்கின்றது.

மேலும் பாடசாலையில் செயற்படுத்தப்படும் ஒப்படை, ஆக்கச் செயற்பாடுகள் வெளிக்களச் செயற்பாடுகள் மூலம் கூட்டாக பிறருடன் ஒத்துளைத்துச் செயற்படும் தன்மை வளர்க்கப்படுகிறது. இது எதிர்காலத்தில் சமூகத்திற்குள் செல்லும் பிள்ளை பிறருடன் எவ்வாறு இணைந்து செயற்பாடுகளை செய்ய வேண்டும். சமூகத்தடன் ஒத்துழைத்தச் செயற்படுவது எப்படி எனவும் கற்றுக் கொள்கின்றது.

அது மட்டுமன்றி விவாதப்போட்டி, இசை, நடனம், நாடக போட்டிகள், நிகழ்வுகளில் மாணவர்களை ஈடுபடுத்துவதால் அவர்களது கூச்ச சுபாவம் அற்றுப் போவதுடன் எதிர் காலத்தில் பிறர் முன் ஒரு விடயத்தை பயமின்றி கூறவும், முன்வந்து செயற்படவும், பின்வாங்குதலை தவிர்த்துக் கொள்ளவும் முடியும்.

அத்துடன் சுற்றுலா, களப்பயணங்களில் பாடசாலை மாணவர்களை ஈடுபடுத்தும் பொது பல்வேறு சமூக கலாச்சாரங்களை உணரவும், சூழலுக்கு ஏற்ப இசைவாக்கம் அடைவது எப்படி என அறிந்து கொள்ளவும் முடிகிறது. மேலும் குழுச் செயற்பாடுகள், Presentation போன்றவை மூலம் உளவிருத்தி, தன்னம்பிக்கை தலைமைதாங்கும் பண்பு என்பன வளர்க்கப்பட்டு பின்காலத்தில் சமூகத்தில் செல்லும் பிள்ளைக்கு அவை சமூகத்தில் முன்மாதிரியாக வாழ, சமூகமயமாக்கலுக்கு வித்திடுகின்றது. மேலும் இவ்வாறான செயற்பாடுகள் மூலம் பயந்து பிறருடன் பேசாமல் ஒதுங்கி இருக்கும் பிள்ளை துணிந்து பிறருடன் சகஜமாக பேச முற்படுகின்றது. மேலம் இணைப்பாடச் செயற்பாடுகள் மாணவனை சமூக மயமாக்கலுக்கு உட்படுத்துவது மட்டுமன்றி பாடசாலை வரவையும் அதிகரித்து கற்றலின் சலிப்புத்தன்மையை குறைக்கின்றது. இதனால் பிள்ளைக்கு நல்லது எது தீயது எது என பகுத்துத் தெரிந்து கொள்ளும்அறிவுவளர்க்கப்படும். இவ்வாறே நேரடியாகவும் மறைமுகமாவும் இணைப்பாடவிதானச் செயற்பாடுகள் சமூக மயமாக்கலை ஏற்படுத்துகின்றது. எனவே பாடசாலையில் ஆசிரியர்களும் அதிபரும் கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளுக்கு அளிக்கும் முக்கியத்துவத்தை இணைப்பாடச் செயற்படுகளுக்கும் அளிப்பதன் மூலம் பிள்ளைகளிடத்தில் சமூக மயமாக்கலை ஏற்படுத்தி சமூகத்தில்  நாட்டில் நற்பிரஜைகளை உருவாக்கும் தேசிய  இலக்கை அடைய முடியும்.

மோஜிதா பாலு,
விடுகை வருடம்,
கல்வி பிள்ளை நலத்துறை,
கலை கலாசாரபீடம்,
கிழக்குபல்கலைக்கழகம்.