பொத்துவில் ஆதார வைத்தியசாலையில் வைத்தியரை இடமாற்றக் கோரி ஆர்ப்பாட்டம் !




பொத்துவில் ஆதார வைத்தியசாலையில் பணியாற்றும் வைத்தியரொருவர் வைத்தியசாலையின் நிர்வாகத்திற்கு முரணாகச் செயற்பட்டு வருவதோடு, அவரை இடமாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்குமாறு கோரி அவ்வைத்தியசாலை பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மும்மொழிகளிலும் பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட சுலோக அட்டைகளுடன் வைத்தியசாலைக்கு முன்பாக இன்று (22) பகல் ஒன்றுகூடிய 30இற்கும் மேற்பட்ட பணியாளர்கள், குறித்த வைத்தியருக்கு எதிராக கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த விடயம் தொடர்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் தெரிவிக்கையில், 'பொத்துவில் ஆதார வைத்தியசாலையின் நிர்வாகச் செயற்பாடுகள் மற்றும் சுகாதாரப் பணிகளுக்கு குந்தகமாக வைத்தியரொருவர் தொடர்ந்து செயற்பட்டு வருகின்றார்.

மேற்படி வைத்தியசாலையின்; வைத்திய அத்தியட்கரின் நிர்வாகச் செயற்பாடுகளுக்கே முரணாக குறிந்த வைத்தியர் தொடர்ந்து செயற்பட்டு வருகின்றார். இதன் காரணமாக நோயாளர்களுக்கான வைத்திய சேவைகளை, வைத்தியசாலைப் பணிகளை உரிய முறையில் முன்னெடுக்க முடியாது காணப்படுகின்றது.

எனவே, பொத்துவில் ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகரின் நிர்வாகச் செயற்பாடுகளுக்கு முட்டுக்கட்டையாகச் செயற்பட்டுவரும் குறிந்த வைத்தியரை இடமாற்றம் செய்யுமாறு கோருகின்றோம்'என்றனர்.


இந்த விடயம் தொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு சுகாதாரத் திணைக்களத்தின் பிராந்திய மற்றும் மாகாண அதிகாரிகளை கேட்டுக்கொள்வதாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் தெரிவித்தனர்.

இதேவேளை, இந்த விடயம் தொடர்பாக பொத்துவில் ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகரிடம் கேட்டபோது, மேலதிகாரிகளின் அனுமதியின்றி தன்னால் ஊடகங்களுக்கு கருத்து வழங்க முடியாது' என்றார்.

இதற்கிடையில், குறித்த வைத்தியரின் கருத்தை பெற்றுக்கொள்வதற்காக முயற்சித்தபோதும, அது பலனளிக்கவில்லை.