மூதூர் ஆயுள்வேத மத்திய மருந்தகத்திற்கு கிழக்கு மாகாண ஆளுநர் விஜயம்




(எம்.எஸ்.எம்.ஸாகிர்)     

மூதூர் ஆயுள்வேத மத்திய மருந்தகத்தை தரமுயர்த்துவது தொடர்பாக நடைபெற்றுவரும் நடவடிக்கைகளைப் பார்வையிடுவதற்காக கிழக்கு மாகாண ஆளுனர் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் சுகாதார அமைச்சின் உயர் அதிகாரிகள் சகிதம் திடீர் விஜயமொன்றை மேற்கொண்டு அங்கு காணப்படும் தேவைகள் குறித்து கண்டறிந்து கொண்டார். இதன் போது கிழக்கு மாகாண சுதேச வைத்திய ஆணையாளர் டாக்டர் சிறீதரனும் சமூகமளித்திருந்தார்.

இவ்விஜயத்தின் போது மூதூர் மத்திய மருந்தக பொறுப்பதிகாரி டாக்டர் எச்.எம். ஹாரிஸ் தலைமையில் கலந்துரையாடல் ஒன்று ஆளுநர் உள்ளிட்ட குழுவினருடன் இடம்பெற்றது. இதில் கருத்து தெரிவித்த மாகாண ஆணையாளர், இம்மருந்தகத்தை கிராமிய வைத்தியசாலையாக தரமுயர்த்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் பூர்த்தியடைந்திருப்பதாகவும் அதற்கான அனுமதி விரைவில் கிடைக்குமென்றும் குறிப்பிட்டார். வைத்தியசாலை அபிவிருத்திக் குழு சார்பாக மூதூர் அனைத்து பள்ளிவாயல்கள் சம்மேளனத் தலைவர் எஸ்.எச். தஸ்ரிக் கருத்துத் தெரிவித்தார். அதில் அவர், மூதூர் மத்திய மருந்தகம் ஆரம்பிக்கப்பட்டு 23 வருடங்கள் நிறைவடைகின்ற போதும் எவ்வித தரமுயர்தலுமின்றி தொடர்ந்து புறக்கணிப்புக்குள்ளாகி வந்திருப்பதால் இதனை சகல வசதிகளையும் கொண்ட மாவட்ட வைத்தியசாலையாக தரமுயர்த்தித் தருமாறு ஆளுநரை கேட்டுக் கொண்டதோடு, அதற்கான நியாயமான காரணங்களையும் முன் வைத்தார்.

அனைவரது கருத்துக்களையும் செவிமடுத்த கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், இது தொடர்பாக சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்வதற்கு உடனடி நடவடிக்கை எடுப்பதாக குறிப்பிட்டார்.

இதில் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் மற்றும் மாகாண சுகாதார பணிப்பாளர் உயர் அதிகாரிகள் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் பலரும் பங்கேற்றனர்.

இவ்விஜயத்துக்கான ஏற்பாடுகளை ஜனாதிபதியின் மூதூர் இணைப்பாளர் இத்ரிஸ் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.