கிழக்கு கல்வியில் பாரிய வீழ்ச்சி !

கல்வித் துறைக்குள் அரசியல் செல்வாக்கு உட்புகுவதால் ஏற்படும் வீண் விபரீதங்கள்!

சில கல்வி வலயங்களில் ஆசிரியர்களுக்கு அதிக பற்றாக்குறை; பல வலயங்களில் தேவைக்கு அதிகமாக ஆசிரியர்கள். அரசியல் தலையீடு இல்லாத நீதியான இடமாற்றம் மூலமே சிக்கலுக்குத் தீர்வு கிட்டும்



பதினேழு கல்வி வலயங்களைக் கொண்டது கிழக்கு மாகாணம். திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய 3மாவட்டங்களிலும் 3,82,786மூவின மாணவர்கள் கற்கின்றனர். 14335தமிழ்மொழி மூல ஆசிரியர்களையும், 5468சிங்கள மொழிமூலஆசிரியர்களையும் கொண்ட 1108பாடசாலைகள் இம்மாகாணத்தில் உள்ளன.
இங்குள்ள 17கல்வி வலயங்களிலும் சீரான ஆசிரியர் பரம்பல் இருப்பதாகக் கொள்ள முடியாது. ஒரு வலயத்தில் அங்கீகரிக்கப்பட்ட ஆளணிக்கு மேலதிகமாகவும் மற்றுமொரு வலயத்தில் குறைவாகவும் காணப்படுகிறது. 
இதனை ஒரு சாராருக்கு கல்வி கற்பதற்கான உரிமை மறுக்கப்படுவதுடன் அவர்களுக்கு இழைக்கப்படும் அநீதியாகவும் கருதலாம்.இந்த ஆசிரியர் சமமின்மையை சமப்படுத்துவது யார்? மாகாண கல்வித் திணைக்களம் இச்செயற்பாட்டை காலாகாலமாக அவ்வப்போது முன்னெடுத்து வந்ததுண்டு. ஆனால் அது நீதியாக முன்னெடுக்கப்படவில்லையென்ற குற்றசாட்டும் எழாமலில்லை. அரசியல் செல்வாக்குள்ளவர்கள் சொந்த இடங்களுக்கு மாற்றலாகி வருவதும் ஏனையோர் முடியாமல் அங்கேயே விரக்தியுடன் காலத்தைக் கடத்தியதும் அறிந்த விடயமே. 
ஆசிரியர் பரம்பலை குறிப்பாக தமிழ்மொழிமூல வலயங்களை எடுத்து நோக்கினால் அநீதிகளும் அர்த்தங்களும் விளங்கும். இது இவ்வாறிருக்க, இலங்கையிலுள்ள 9மாகாணங்களுள் பொதுப்பரீட்சைகளைப் பொறுத்தவரை தொடர்ந்து கிழக்கு மாகாணம் 9வது இடத்திலேயேதான் உள்ளது என்பது கசப்பான உண்மை. அதற்குப் பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும் அடிப்படையில் மாணவருடன் வகுப்பறையுடன் நேரடியாகத் தொடர்புபடும் ஆசிரியரே முதற்காரணம் எனலாம்.  
இலங்கை பொதுச்சேவை ஆணைக்குழுவின் உறுப்பினர் கே.மொகமட்தம்பி கூறுகையில் "கல்வி வீழ்ச்சிக்கு ஆசிரியர் பரம்பலும் ஒரு மறுக்க முடியாத காரணம்தான். அதேபோன்று இலங்கையின் வறுமைத் தரத்தில் முதலிடத்தில் கிழக்கு மாகாணம்தான் உள்ளது. கல்வி வீழ்ச்சிக்கு அதுவும் ஒருகாரணமாக அமைகிறது" என்றார். 
அம்பாறை மாவட்டம்: 
அம்பாறை மாவட்டத்தை எடுத்துநோக்கும் போது தமிழ்மொழிமூல வலயங்களாக அக்கரைப்பற்று, திருக்கோவில், கல்முனை, சம்மாந்துறை ஆகிய 4வலயங்களுள்ளன. இந்த 4வலயங்களையும் சேர்த்து கல்முனைக் கல்வி மாவட்டம் என அழைப்பதுண்டு. அம்பாறை மேற்கே சிங்களப் பிரதேசங்களில் அம்பாறை, மகாஓயா, தெஹியத்தக்கண்டிய ஆகிய 3வலயங்கள் உள்ளன. அங்கு 439ஆசிரியர்க்கும் 34அதிபர்களுக்கும் தட்டுப்பாடு நிலவுகின்றன. 
மேற்படி 4தமிழ்மொழி மூல வலயங்களில் அங்கீகரிக்கப்பட்ட ஆளணியின்படி மொத்தமாக 4878ஆசிரியர்கள் இருக்க வேண்டும். ஆனால் தற்போது 5249ஆசிரியர்கள் உள்ளனர். அதாவது 371பேர் மேலதிகமாகவுள்ளனர். அதேபோல 363அதிபர்கள் இருக்க வேண்டியஇடத்தில் 319அதிபர்களே உள்ளனர்.அதாவது 44அதிபர்கள் தட்டுப்பாடு. மொத்தத்தில் 5241அதிபர், ஆசிரியர்கள் இருக்கவேண்டிய மேற்படி 4வலயங்களிலும் 5568பேருள்ளனர். மேலதிகமாக 327பேருள்ளனர் என்பது தரவாகும். 
வலயங்களை மேலோட்டமாகப் பார்த்தால் அக்கரைப்பற்று வலயத்தில் 1373ஆசிரியர்கள் தேவை. ஆனால் அங்கிருப்பதோ 1322. அதாவது 51ஆசிரியர்க்குத் தட்டுப்பாடு நிலவுகிறது. அதேபோல திருக்கோவில் வலயத்தில் 664ஆசிரியர்கள் தேவை. ஆனால் அங்கிருப்பதோ 660. அதாவது 04ஆசிரியர்க்குத் தட்டுப்பாடு நிலவுகிறது. 
மாறாக கல்முனை வலயத்தில் 1608ஆசிரியர்கள் தேவை. ஆனால் அங்கிருப்பது 1786. அதாவது 178ஆசிரியர்கள் மேலதிகமாக உள்ளனர். அதேபோல சம்மாந்துறை வலயத்தில் 1233ஆசிரியர்கள் தேவை. ஆனால் அங்கிருப்பது 1479. அதாவது 246ஆசிரியர்கள் மேலதிகமாகும். 
சுருக்கமாகப் பார்த்தால் கல்முனை, சம்மாந்துறை வலயங்களில் 424ஆசிரியர்கள் தேவைக்கு அதிகமாகக் காணப்பட அக்கரைப்பற்று, திருக்கோவில் வலயங்களில் 55ஆசிரியர்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதைக் காணலாம்.  
இந்த 424மேலதிக ஆசிரியர்களில் 55ஆசிரியர்களை இருவருட ஒப்பந்தஅடிப்படையில் தட்டுப்பாடு நிலவுகின்ற அக்கரைப்பற்று திருக்கோவில் வலயங்களுக்கு அனுப்புவதில் உள்ள தடங்கல் என்ன? ஒரு மாவட்டத்திற்குள்ளேயே ஆசிரியர் சமமின்மையை சமப்படுத்தினால் ஆசிரியர்களும் பிறமாவட்டத்திற்கு செல்ல வேண்டியேற்படாது, சமப்படுத்தலும் நடைபெறும். மொத்தத்தில் இந்தவலயங்களில் 371ஆசிரியர்கள் மேலதிகமாகவுள்ளனர். 
மட்டக்களப்பு மாவட்டம்: 
மட்டக்களப்பு மாவட்டத்தை எடுத்துநோக்கும்போது தமிழ்மொழிமூல வலயங்களாக மட்டக்களப்பு, மட்டக்களப்பு மத்தி, மட்டக்களப்பு மேற்கு, கல்குடா, பட்டிருப்பு ஆகிய 5வலயங்களுள்ளன.  
இங்கு அங்கீகரிக்கப்பட்ட ஆளணியின்படி மொத்தமாக 6493ஆசிரியர்கள் இருக்க வேண்டும். ஆனால் தற்போது 6233ஆசிரியர்கள் உள்ளனர். அதாவது 260பேர் குறைவாக உள்ளனர். அதேபோல 487அதிபர்கள் இருக்க வேண்டியஇடத்தில் 300அதிபர்களே உள்ளனர்.அதாவது 187அதிபர்கள் தட்டுப்பாடு. மொத்தத்தில் 6980அதிபர், ஆசிரியர்கள் இருக்க வேண்டிய மேற்படி 5வலயங்களிலும் 6533பேருள்ளனர். அதாவது 447பேருக்குத் தட்டுப்பாடு நிலவுகின்றது என்பது தரவாகும். 
வலயங்களை மேலோட்டமாகப்பார்த்தால்...மட்டக்களப்பு வலயத்தில் 1221ஆசிரியர்கள் தேவை. ஆனால் அங்கிருப்பது 1381. அதாவது 160ஆசிரியர்கள் மேலதிகமாகவுள்ளனர். அதேபோல பட்டிருப்பு வலயத்தில் 1189ஆசிரியர்கள் தேவை. ஆனால் அங்கிருப்பது 1306. அதாவது 117ஆசிரியர்கள் மேலதிகமாகவுள்ளனர். 
மாறாக மட்டக்களப்பு மத்தி வலயத்தில் 1472ஆசிரியர்கள் தேவை. ஆனால் அங்கிருப்பதோ 1307. அதாவது 165ஆசிரியர்க்குத் தட்டுப்பாடு நிலவுகிறது. மட்டக்களப்பு மேற்கு வலயத்தில் 1023ஆசிரியர்கள் தேவை. ஆனால் அங்கிருப்பதோ 899. அதாவது 124ஆசிரியர்க்குத் தட்டுப்பாடு நிலவுகிறது. கல்குடா வலயத்தில் 1588ஆசிரியர்கள் தேவை. ஆனால் அங்கிருப்பதோ 1340.
அதாவது 248ஆசிரியர்க்குத் தட்டுப்பாடு நிலவுகிறது. 
சுருக்கமாகப் பார்த்தால் மட்டக்களப்பு, பட்டிருப்பு வலயங்களில் 277ஆசிரியர்கள் தேவைக்கு அதிகமாகக் காணப்பட மட்டு.மத்தி, மட்டு மேற்கு, கல்குடா ஆகிய வலயங்களில் 537ஆசிரியர்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதைக் காணலாம்.  
இந்த 277மேலதிக ஆசிரியர்களை இருவருட ஒப்பந்தஅடிப்படையில் தட்டுப்பாடு நிலவுகின்ற ஏனைய வலயங்களுக்கு அனுப்புவதில் உள்ள தடங்கல் என்ன?  
ஆக, 260ஆசிரியர்களே மட்டு மாவட்டத்திற்குத் தேவையெனக் கருத இடமுண்டு. அதுவும் கல்குடா வலயத்தில் மட்டும் 248பேர் தேவையென்பது வேதனைக்குரியது. மொத்தத்தில் இந்தவலயங்களில் 260ஆசிரியர்கள் தட்டுப்பாடாக உள்ளனர். 
திருகோணமலை மாவட்டம்: 
திருகோணமலை மாவட்டத்தை எடுத்துநோக்கும் போது தமிழ்மொழிமூல வலயங்களாக கந்தளாய், கிண்ணியா, மூதூர், திருகோணமலை, திருகோணமலை வடக்கு ஆகிய 5வலயங்களுள்ளன.  
இங்கு அங்கீகரிக்கப்பட்ட ஆளணியின்படி மொத்தமாக 4014ஆசிரியர்கள் இருக்க வேண்டும். ஆனால் தற்போது 3638ஆசிரியர்கள் உள்ளனர். அதாவது 376பேர் குறைவாகவுள்ளனர். அதேபோல 303அதிபர்கள் இருக்க வேண்டியஇடத்தில் 202அதிபர்களே உள்ளனர்.அதாவது 101அதிபர்கள் தட்டுப்பாடு. மொத்தத்தில் 4317அதிபர், ஆசிரியர்கள் இருக்க வேண்டிய மேற்படி 5வலயங்களிலும் 3840பேருள்ளனர். அதாவது 477பேருக்குத் தட்டுப்பாடு நிலவுகின்றது என்பது தரவாகும். 
வலயங்களை மேலோட்டமாகப்பார்த்தால்...கந்தளாய் வலயத்தில் 155ஆசிரியர்கள் தேவை. ஆனால் அங்கிருப்பதோ 128. அதாவது 27ஆசிரியர்க்குத் தட்டுப்பாடு நிலவுகிறது. கிண்ணியா வலயத்தில் 1279ஆசிரியர்கள் தேவை. ஆனால் அங்கிருப்பதோ 1166. அதாவது 113ஆசிரியர்க்குத் தட்டுப்பாடு நிலவுகிறது.  
மூதூர் வலயத்தில் 1285ஆசிரியர்கள் தேவை. ஆனால் அங்கிருப்பதோ 1173. அதாவது 112ஆசிரியர்க்குத் தட்டுப்பாடு நிலவுகிறது. திருகோணமலை வலயத்தில் 1223ஆசிரியர்கள் தேவை. ஆனால் அங்கிருப்பதோ 1120. அதாவது 103ஆசிரியர்க்குத் தட்டுப்பாடு நிலவுகிறது. திருகோணமலை வடக்கு வலயத்தில் 72ஆசிரியர்கள் தேவை. ஆனால் அங்கிருப்பதோ 51. அதாவது 21ஆசிரியர்க்குத் தட்டுப்பாடு நிலவுகிறது. 
சுருக்கமாகப் பார்த்தால் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டநிலைமையை விட திருகோணமலை மாவட்டத்தில் அனைத்து வலயங்களிலும் ஆசிரியர் தட்டுப்பாடு நிலவுவதைப் பார்க்கலாம். 
மொத்தத்தில் இந்தவலயங்களில் 376தமிழ்மொழிமூல ஆசிரியர்களுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. கிழக்கு மாகாணத்தில் ஆகக்கூடிய ஆசிரியர் தட்டுப்பாடு அதாவது 248ஆசிரியர்கள் தட்டுப்பாடாக இருப்பது கல்குடா வலயத்தில் என்பதும் தேவைக்கதிகமான ஆசிரியர்கள் இருப்பது சம்மாந்துறையில் அதாவது 246ஆசிரியர்கள் மேலதிகமாக உள்ளனர் என்ற தரவும் மேற்படி புள்ளிவிபரங்களில் தெரியவருகிறது. 
புதிய ஆளுநரின் சிபார்சுக்கமைவாக சொந்த மாவட்ட ஆசிரியர்களை அவரவர் மாவட்டத்திற்கு இடமாற்றம் செய்கின்ற வேளை எழும் வெற்றிடங்களை நிரப்ப புதிதாக ஆசிரியர்களை சேர்த்துக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்படுகின்றமை வரவேற்புக்குரியது. 
இதன்போது திருமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் சேவையாற்றும் அம்பாறை கரையோர ஆசிரியர்கள் சொந்த இடத்திற்கு திரும்பும் போது கல்முனை மற்றும் சம்மாந்துறை போன்ற வலயங்களில் ஏற்கனவே மேலதிகமாகவுள்ள ஆசிரியர்களுடன் வருகின்றவர்களும் சேர்ந்தால் மேலதிகம் பண்மடங்காக வாய்ப்புண்டு. இவர்களுக்கு பாடசாலை வழங்குவது தொடக்கம் சம்பளம் வழங்குவது வரையில் கணக்காய்வாளர்களின் கவனம் திரும்பலாம். 
இந்த வேளையில் வேலையில்லாப் பட்டதாரிகள் அந்த ஆசிரிய நியமனங்களை தமக்கு வழங்க வேண்டுமென போர்க்கொடி தூக்கியுள்ளனர். 
வெளிமாவட்டங்களில் பணியாற்றும் ஆசிரியர்களுள் பெரும்பாலானவர்கள் பட்டதாரிகளும் கல்விக் கல்லூரி ஆசிரியர்களும் ஆவர். எனவே இவர்களது வெற்றிடங்களை நிரப்புவதானால் பட்டதாரிகளைக் கொண்டு நிரப்புவது பொருத்தமாகவிருக்கலாம் என்பதும் கருத்திற் கொள்ளப்பட வேண்டியதே. 
ஆசிரியர்சேவை பிரமாணக்குறிப்பின்படி பார்த்தால் டிப்ளோமாதாரிகளையும் பட்டதாரிகளையும் மாகாண நிருவாகம் நியமிப்பதற்கு அதிகாரமுள்ளது. ஆனால் உயர்தர சித்தி பெற்றவர்களை ஆசிரியர்களாக நியமிப்பது மத்திய அரசுதான் என்று குறிப்பிடப்படுகிறது. 
ஆனால் ஆங்கிலம், கணிதம், விஞ்ஞானம் போன்ற பாடங்களுக்கு பட்டதாரிகள் மிகவும் அரிதாகவே காணப்படுகின்றார்கள். எனவே அந்த பாடங்களுக்கு உயர்தரம் சித்தியடைந்தவர்களை நியமிக்கலாம். 
ஆனால் கிழக்கில் மாகாணத்துக்குரிய 13வது திருத்தத்தின் பிரகாரம் உரிய ஆசிரியர்களை நியமிக்க முடியாது போனாலும் ஆசிரிய உதவியாளர் என்ற அடிப்படையில் நியமிக்க அதிகாரமுள்ளதென்பதையும் மறுக்க முடியாது என்று கூறப்படுகிறது. 
எது எப்படியோ, மாணவர்களுக்கு ஆசிரியர்கள் நீதியான முறையில் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும். ஒரு பாடசாலையில் அல்லது ஒருவலயத்தில் தேவைக்கு அதிகமாக ஆசிரியர்கள் குவிந்து கிடப்பதும் மாறாக இன்னும் சில பாடசாலைகளில் வலயங்களில் மிகக்குறைவாக இருப்பதும் ஏற்றுக் கொள்ள முடியாதது.  
இது மாணவரின் கல்வியில் பாதிப்பை நிச்சயம் ஏற்படுத்தும் என்பதோடு மாகாணத்தின் கல்வித் தரத்திலும் வீழ்ச்சியை ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை. 
எனவே முதலில் ஆசிரியர் சமமின்மையை சமப்படுத்த வருட ஆரம்பத்திலேயே முறைப்படி அரசியல் தலையீடின்றி இடமாற்றம் நீதியாக மேற்கொள்ளப்பட்டால் அதுவே முதல் வெற்றியாகும். வெற்றிடமாகும் இடங்களுக்கு புதிய ஆசிரியர்களை நியமிப்பதும் பொருத்தமாகும். 
முறையான ஆசிரியர் இடமாற்றத் திட்டமில்லாமல் எதுவுமே சாத்தியமாகாது. முறைப்படி இயங்கினால் ஆசிரியர் சமமின்மை ஏற்பட வாய்ப்பில்லை. எதற்கும் ஆளுநர் மற்றும் கல்வித்துறையினர் அரசியலை மையப்படுத்தாது மாணவர் கல்வி கருதி உறுதியான இடமாற்றக் கொள்கையை அமுல்படுத்த முன்வர வேண்டும்.