நியூஸிலாந் துப்பாக்கிச்சூடு தாக்குதல் ! இதுவரை 49 பேர் உயிரிழந்துள்ளனர்


நியூஸிலாந்தில் நடந்த துப்பாக்கிச்சூடு தாக்குதல், ஒட்டுமொத்த உலகத்தின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. தனி நபர்களால் நடத்தப்பட்ட தாக்குதலில், இதுவரை 49 பேர் உயிரிழந்துள்ளனர்

சென்ற ஆண்டு நடந்த ஆய்வின்படி, உலகில் உள்ள மிகவும் அமைதியான நாடுகளில் நியூஸிலாந்து இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. அவ்வளவு அமைதி மிக்க நாடு, இன்று அமைதி இழந்து பெரும் பதற்றத்துடன் காணப்படுகிறது.

நியூஸிலாந்து நாட்டின் தெற்குப் பகுதியில் உள்ள கிறிஸ்ட் சர்ச் என்ற நகரில் உள்ள இரு மசூதிகளில், அந்நாட்டு நேரப்படி வெள்ளிக்கிழமை பிற்பகல் துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தப்பட்டது. அல் நூர் ( al Noor) மற்றும் டீன்ஸ் ஏவ் (Deans Ave) ஆகிய இரு மசூதிகளிலும் நடந்த தாக்குதலில், இதுவரை 40 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 20 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும், அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுபற்றி பேசிய நியூஸிலாந்து பிரதமர் ஜாகின்டா அர்டெர்ன் (jacinda Ardern), ‘ இன்று நடந்த துப்பாக்கிச்சூடு தாக்குதல், நியூஸிலாந்துக்கு ஒரு கறுப்பு நாள். இந்தத் தாக்குதலில் ஈடுபட்ட ஒரு பெண் உள்பட, மூன்று பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அல் நூர் மசூதியில் 10 பேரும், டீன்ஸ் ஏவ் மசூதியில் 30 பேரும் உயிரிழந்துள்ளனர். கைதுசெய்யப்பட்டவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்றுவருகிறது. இது ஒரு தீவிரவாதத் தாக்குதல் என்று நன்றாகத் தெரிகிறது. மிகவும் திட்டமிட்டு நடத்தப்பட்டுள்ளது. தாக்குதல் நடத்த வந்தவரின் காரில் இரண்டு வெடிகுண்டுகள் பொருத்தப்பட்டிருந்தன. தற்போது அது, செயலிழக்கப்பட்டுள்ளது’ எனத் தெரிவித்துள்ளார்.

ஒரு மசூதியில் தாக்குதல் நடத்திய ப்ரெண்டன் டர்ரெண்ட் (BrentonTarrant) என்பவன், தான் காரில் இருப்பதில் தொடங்கி, அங்கிருந்து இறங்கி மசூதிக்குள் சென்று, உள்ளே இருப்பவர்களைத் துப்பாக்கியால் சுடுவது வரை அனைத்தையும் ஃபேஸ்புக்கில் லைவ் செய்துள்ளான். சுமார் 17 நிமிடங்கள் வரை தாக்குதல் நடந்துள்ளது. தாக்குதல் நடத்தியவன் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்தவன் என்பது அவனது சமூக வலைதளப் பக்கம் மூலம் தெரியவந்துள்ளது. அதில் குறிப்பிடப்பட்டுள்ள பெயர் மற்றும் விவரங்கள் உண்மையானதா என்ற தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.


சம்பவத்தை நேரில் பார்த்த சிலர், அதுபற்றிக் கூறும்போது, ‘ துப்பாக்கிச்சூடு நடக்கும்போது நான் மசூதியில் உள்ள கழிவறையில் இருந்தேன். நான் கதவைத் திறந்து வெளியில் செல்ல முற்படும்போது, தோட்டாக்கள் வெடிக்கும் சத்தம் கேட்டது. உடனடியாக நான் செய்வதறியாது வெளியில் செல்லாமல் இருந்தேன். இருந்தும், தொடர்ந்து துப்பாக்கிச் சத்தம் கேட்டுக்கொண்டிருந்தது. சுமார் 15 நிமிடங்கள் வரை நான் உள்ளே இருந்திருப்பேன் அதுவரை சத்தம் தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருந்தது. பிறகு, கழிவறையின் பின்னால் உள்ள கண்ணாடி ஜன்னலை உடைத்துக்கொண்டு நான் அங்கிருந்து தப்பிவிட்டேன்’ எனக் கூறியுள்ளார்.

இதுபற்றி பேசிய மற்றொருவர், ‘ ஒருவன் இரண்டு துப்பாக்கிகளுடன் மசூதிக்குள் நுழைந்தான். அவன், தன் கண்ணில் பட்ட அனைவரையும் சரமாரியாகச் சுட்டு வீழ்த்தினான். இரண்டு துப்பாக்கிகளிலும் உள்ள தோட்டாக்கள் அனைத்தும் தீர்ந்துவிட்டன. பிறகு, அவன் வெளியில் சென்று தன் காரில் இருந்த மற்றொரு துப்பாக்கியைக் கொண்டுவந்து, மீண்டும் சுடத்தொடங்கினான்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.