குறைகளும் நிறைகளும் கலந்துள்ள வரவு செலவுத் திட்டம் ! தமிழ் மக்களது எதிர்பார்ப்புகள் முற்றாக நிறைவேறவில்லை

தமிழர்களின் எதிர்பார்ப்புகளை பட்ஜட் நிறைவேற்றவில்லை. வடக்கு, கிழக்கில் தொழிற்சாலைகளை மீண்டும் நிறுவி, வேலைவாய்ப்புகளை அதிகரிக்க வேண்டும். நாட்டின் அபிவிருத்திக்குப் பொருத்தப்பாடான அரசியலமைப்பை ஏற்படுத்த வேண்டும்

யுத்தம் ஓய்ந்த பின்னர் பாதுகாப்பு செலவின அதிகரிப்பு எதற்கு? பாதுகாப்பு செலவினத்தைக் குறைத்தால் துண்டுவிழும் தொகையும் தானாகக் குறைந்து விடும்

'வரவு செலவுத் திட்டத்தில் பல நன்மைகளும் உள்ளன. சில குறைகளும் இருக்கின்றன.இந்த பட்ஜட் மூலம் தமிழ் மக்களது எதிர்பார்ப்புகள் முற்றாக நிறைவேறவில்லை' என்கிறார் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜீ.ஸ்ரீநேசன்.

"அரச பணியாளர்களுக்கும், ஓய்வூதியக்காரருக்கும் ஒரு கொடை வழங்கப்பட்டிருக்கிறது.ஆனால் துண்டு விழும் தொகை நிற்கவில்லை.வடக்கு கிழக்கில் அழிக்கப்பட்ட,செயலிழந்த தொழிற்சாலைகள் புனர்நிர்மாணம் செய்யப்பட வேண்டும். மட்டக்களப்பு மாவட்டத்தில் சில ஆடைத் தொழிற்சாலைகள் நிறுவப்பட வேண்டும்.தொழில் வாய்ப்புகள் உருவாக வேண்டும்.

வடக்கு,கிழக்கு அபிவிருத்திக்கான நிதி வழங்கலில் முன்னுரிமை வழங்கப்பட வேண்டும். அரசியலமைப்புத் திருத்தம் அவசியமானது. அது ஒருபோதும் ஓரம் கட்டப்படலாகாது" என்றும் அவர் விபரித்தார்.

வரவு செலவுத் திட்டம் தொடர்பாக    வழங்கிய சிறப்புப் பேட்டியொன்றின் போதே ஸ்ரீநேசன் எம்.பி இக்கருத்துகளைத் தெரிவித்தார்.

"தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எப்போதும் சரியானதை சரி என்றும், பிழையானதை பிழை என்றும் சொல்லும். சந்தர்ப்பத்திற்கு ஏற்றவாறு உண்மைக்கு மாறாக எமது அமைப்பு ஒருபோதும் செயற்படாது. இது அதனது வழக்கமான வழித்தடம்.

நாம் தமிழ் மக்களது பிரதிநிதிகள். நாட்டின் அபிவிருத்தியில் கவனம் செலுத்துகின்ற போது, எமது மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதிலும் கரிசனையோடு கருமமாற்றி வருகிறோம். அதில் பல வெற்றியைக் கண்டுள்ளோம். எமது கட்சிக்கு நல்ல பெயர் அனைத்து மக்கள் மத்தியிலும் இருக்கிறது."

வரவு செலவுத் திட்டத்தில் நல்லவைகளும், குறைபாடுகளும் கலந்திருக்கின்றன.

பொதுவாகக் கூறின் ஒரு நாட்டின் வரவு செலவுத் திட்டத்தில் துண்டு விழும் தொகை இருக்கக் கூடாது. அப்படியென்றாலும் அது மிக சொற்பமானதாகவே இருக்க வேண்டும்.685 மில்லியன் ரூபா துண்டு விழுகிறது. தேசிய உற்பத்தியில் அது 4.4 வீதமாக இருக்கிறது. இதனைச் சமாளிக்க கடன்பட்டே ஆக வேண்டும். நமது நாட்டின் குடிமகனின் கடன் தலா ஆறரை இலட்சமாக இருக்கிறது. நாட்டை கடன் சுமையோடு வைத்திருக்கலாகாது. இது தொடர்ந்து வருகின்றது. பிறநாடுகளில் நாம் தங்கியிருக்கும் வரை நாடு காலனித்துவ ஆட்சியின் கீழ் இருப்பது போலவே இருக்கும். நாட்டைப் பொறுத்தவரை இது ஆரோக்கியமானதல்ல.

பாதுகாப்புச் செலவினம் கடந்த ஆண்டிலிருந்து 32 வீத அதிகரிப்பைக் காட்டுகிறது. 'குண்டு விழும் தொகை' நின்ற போதும், 'துண்டு விழும் தொகை' நிற்கவில்லை. யுத்தம் இல்லாத போது பாதுகாப்புச் செலவினத்தைக் குறைத்திருக்க வேண்டும். அதனால் துண்டு விழும் தொகை குறைந்திருக்கும். பாதுகாப்புச் செலவினம் அதிகரிக்கப்படுவதன் காரணம் என்ன?

அரச உத்தியோகத்தர்களின் சம்பளத்திலும், ஓய்வூதியம் பெறுவோரது கொடுப்பனவிலும் அதிகரிப்பை ஏற்படுத்த முன்மொழியப்பட்டுள்ளது. அது வரவேற்கத்தக்கது.அதேநேரத்தில் பொருட்களினதும் சேவைகளினதும் விலை அதிகரிப்பு மிஞ்சி விடாதிருக்க வேண்டும்.

பாடசாலை மாணவர்களுக்கு ஒரு கிளாஸ் பால் கொடுப்பது வரவேற்கத்தக்கது. அது ஒரு கலப்படமில்லாததாக இருக்க வேண்டும். பாடசாலை நிர்வாகம் அதில் கொள்ளை இலாபம் அடித்து விடாது பார்த்துக் கொள்ளவும் வேண்டும்.

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அபிவிருத்திக்கென விசேடமாக 5000 மில்லியன் ரூபா ஒதுக்க முன்மொழியப்பட்டுள்ளது. இத்தொகை போதாது. இது இன்னுமொரு மடங்கால் அதிகரிக்கப்பட வேண்டும்.



நீர்ப்பாசனத் திட்டங்கள், தானியக் களஞ்சியசாலைகள், விவசாயப் பூங்காக்கள் அமைக்கும் முன்மொழிவுகள் நன்மதிப்பைப் பெறும். 10இலட்சம் மக்களுக்கு மலசலகூட வசதிகள் வழங்குவது வரவேற்கத்தக்க அம்சம்.

விசேட தேவையுடையோருக்கான கொடுப்பனவு அதிகரிப்படுவது வரவேற்கத்தக்கது. உண்மையில் 5000 ரூபா வழங்க உத்தேசித்திருப்பது இப்போதைய காலத்தில் அவர்களுக்குப் போதுமானதல்ல.

சிறுநீரக நோயாளர்களுக்குரிய சிகிச்சை வசதிகளை அதிகரிக்க அரசு அக்கறை காட்ட இருக்கிறது. இது பாராட்டத்தக்கது. வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அரசு 15000 கல்வீட்டுத் திட்டத்தை அமுல்படுத்த எடுக்கும் முயற்சிக்கு நாம் ஆதரவு வழங்குவோம். அங்கு தேவை அதிகம் உள்ளது. ஆதலால் இத்தொகை இன்னும் அதிகரிக்கப்படுவது வரவேற்கத்தக்கது.

க.பொ.த உயர்தர பரீட்சையில் கணித,விஞ்ஞானப் பிரிவுகளில் அதீத தேர்வு மட்டத்தை அடைந்த மாணவர்களுக்கு 'ஒக்ஸ்போட்','கேம்பிறிட்ஜ்' பல்கலைக்கழகங்களில் உயர்கல்வி கற்க வாய்ப்பளிக்கும் அரசின் திட்டம் வரவேற்கத்தக்கது. அதனால் மாணவர்களின் அடைவு மட்டம் அதிகரிக்கும்.

கிராமிய வீதி அபிவிருத்திக்கு 10 மில்லியன் ரூபா ஒதுக்கியிருப்பது வரவேற்கத்தக்க அம்சம்.இந்த நாட்டின் கிராமங்களின் வசதிகள் அதிகரிக்கப்பட வேண்டும்.இலஞ்ச ஊழல் ஒழிப்பு நடவடிக்கைகளை விஸ்தரிப்பதற்கு அரசு உறுதி பூண்டிருக்கிறது. இது நல்லதொரு செயற்பாடு. இதில் 'குஞ்சு'களை விட 'பெரிய' மீன்களே பிடிபட வேண்டும்

ஊரக எழுச்சித் திட்டத்திற்கு(கம்பெறலிய) 4800 மில். ரூபா ஒதுக்கப்பட முன்மொழியப்பட்டுள்ளமை வரவேற்கத்தக்க அம்சம். யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களின் தேவைகளை விசேடமாகக் கவனிக்க வேண்டும். அவர்களது தேவைகள்,அபிவிருத்தி ஆகியவற்றில் அதிமுக்கியத்துவம் காட்ட வேண்டும். நிலையான அபிவிருத்திக்கு வடக்கு,கிழக்கில் மட்டுமல்ல நாடு பூராவும் தொழிற்சாலைகள் அமைக்கப்பட வேண்டும். வறுமையை விரட்ட இது பயனுள்ள வழியாகும்.

காணாமல் போனவர்களும்,காணாமல் ஆக்கப்பட்டவர்களும் கண்டறியப்படவில்லை. இது முற்றுப் பெறாத கதையாக இருந்து வருகிறது. இதற்கு முடிவு கட்டப்பட வேண்டும். தவறான அரசியல் போக்கால் இந்த நாட்டில் யுத்த நிலைமை உருவாக்கப்பட்டது. இளைஞர்கள் பாதிக்கப்பட்டு பல தசாப்த காலங்களாக சிறையில் வாடுகிறார்கள். பாகிஸ்தானுக்குள் அத்துமீறிப் புகுந்து அந்த நாட்டில் குண்டு போட முற்பட்ட விமானி அபிநந்தனை சிறைப்பிடித்தது பாகிஸ்தான். அந்நாட்டின் பிரதமர் இம்ரான்கான் அவரை விடுதலை செய்துள்ளார். இதிலிருந்து நம் நாட்டுத் தலைவர்கள் பாடம் படிக்க வேண்டும். இது ஒரு அரசியல் யுக்தி.

வடக்கு,கிழக்கு மாகாணங்களின் நிலையான அபிவிருத்திக்கு அங்கு அழிந்து போயுள்ள தொழிற்சாலைகள் புனருத்தாரணம் பெற வேண்டும். உற்பத்திகள் பெருக வேண்டும். தொழில்வாயப்புக்கள் உருவாக வேண்டும். வடக்கும் கிழக்கும் கட்டியெழுப்பப்பட வேண்டும்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டக்களப்பு வாவி பிரித்து வைத்திருக்கும் படுவான்கரையையும் எழுவான்கரையையும் சேர்த்து வைக்கும் ஓடத்துறைகளில் பாலங்கள் நிர்மாணிக்கப்பட்டு படுவான்,- எழுவான் பகுதிகள் ஒன்று சேர்க்கப்பட்டு அபிவிருத்தி காண வேண்டும். அது அன்னமலைத் துறையிலிருந்து ஆரம்பமாக வேண்டும். இதற்கென விசேட நிதி ஒதுக்கீடு அவசியம்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் 'வளப் பயிர்களின் பயிர்ச் செய்கை' நவீனத்துவத்தோடும் இயந்திராதிகளின் உதவியோடும் இடம்பெற வேண்டும். அவர்களது வறுமையை கருத்திலெடுத்து உள்ளீடுகளும் இயந்திராதிகளும் மானிய அடிப்படையில் வழங்கப்பட வேண்டும். மட்டக்களப்பு மாட்டத்திற்கு வழங்கப்படும் மானியங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட வேண்டும்.

ஒரு நாட்டின் அபிவிருத்திக்கும் ஸ்திரமான ஆட்சிக்கும் பொருத்தப்பாடான அரசியலமைப்பு அவசியமானது. அது பலலின, பல மொழி,பல மதங்கள் கொண்ட நாட்டில் அனைவரது மனங்களும் இசைவுறும் வண்ணம் நிறைவேற்றப்பட வேண்டும். இது ஓரம் கட்டப்படலாகாது.

வரவு செலவுத் திட்டத்தில் நன்மைகள் விரிவுபடுத்தப்படுவதோடு,குறைகள் களையப்பட வேண்டும். தமிழ் மக்களது எதிர்பார்ப்புகள் முற்றாக நிறைவேறவில்லை என்பது உண்மை". இவ்வாறு ஸ்ரீநேசன் எம்.பி எமக்களித்த விசேட பேட்டியில் தெரிவித்தார்.