முஸ்லிம்களுடன் இணைந்து செயற்படவே கூட்டமைப்பு விரும்புகின்றது

தமிழ், முஸ்லிம் மக்கள் அனைவரும் ஒற்றுமையுடன் வாழ வேண்டும் என்பதையே தமிழ் தேசிய கூட்டமைப்பு விரும்புவதாக கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

வரவு செலவுத்திட்டம் மீதான விவாதத்தில் பங்கேற்று இன்று(திங்கட்கிழமை) நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்

இதன்போது கருத்து வெளியிட்ட அவர், “கல்முனை கல்முனை பிரதேச செயலகம் தொடர்பாக கடந்த நாடாளுமன்ற அமர்வில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் ஒருவர் கருத்து வெளியிட்டார். இதற்கு பதிலளிகாமல் எம்மால் இருக்க முடியாது.

இதன்காரணமாகவே அவருக்கு நாம் பதில் வழங்கினோம். இதன்போது அதற்கு பதில் வழங்கிய குறித்த உறுப்பினர் இதுகுறித்து எம்முடன் பேச வேண்டும் என தெரிவித்தார்.

அவ்வாறு பேசவேண்டுமாக இருந்தால், நாடாளுமன்றத்தில் அதுகுறித்து பேசாமல் இருந்திருக்க வேண்டும். நாம் தமிழ், முஸ்லீம் மக்கள் அனைவரும் ஒற்றுமையுடன் வாழ வேண்டும் என்பதையே விரும்புகின்றோம்“

அரசியலமைப்பின் 19ஆவது திருத்தச் சட்டத்தை மீறி ஜனாதிபதி எடுத்த நடவடிக்கைகள் காரணமாக தமிழ் மக்களின் எதிர்பார்ப்பு இல்லாமல் செய்யப்பட்டது. நாடு நெருக்கடியை சந்தித்தது. ஆனால் இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பாக நாம் இன்னும் நம்பிக்கை இழக்கவில்லை

ஜனாதிபதி அளித்த வாக்குறுதிக்கு அமைய புதிய அரசியல் யாப்பின் ஊடாக இனப்பிரச்சினைக்கான தீர்வு கிடைக்குமென நம்பினோம். பாதிக்கப்பட்ட பிரதேசங்கள் மீளக் கட்டியெழுப்பப்படும் என நம்பினோம். அதனால் வரவு செலவுத் திட்டம் உள்ளிட்ட அரசாங்கத்தின் பல திட்டங்களுக்கு அமைச்சுப் பதவிகளை பெற்றுக்கொள்ளாமலேயே ஆதரவு வழங்கினோம். ஆனால், ஆட்சியை கலைக்க ஜனாதிபதி எடுத்த நடவடிக்கைகள் காரணமாக நாடாளுமன்றில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை இல்லாமல் செய்யப்பட்டது.

தேர்தல் வாக்குறுதியில் மட்டுமன்றி, ஜனாதிபதி வடக்கிற்கு விஜயம் செய்தபோது மற்றும் அவரது பல உரைகளில் புதிய அரசியலமைப்பு மற்றும் இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பாக வாக்குறுதி வழங்கினார். ஆனால் வாக்குறுதிகளை மீறி செயற்பட்டதால், நாடு குறிப்பாக தமிழ் பேசும் மக்களே அதிகமாக பாதிக்கப்பட்டனர்.

எனினும் நாம் நம்பிக்கை இழக்கவில்லை. இனப்பிரச்சினைக்கான தீர்வு குறித்து இறுதிவரை முயற்சிப்போம். அதற்காக ஜனாதிபதி மற்றும் பிரதமரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றோம்” என்றார்.