நாடு பூராகவும் கடந்த ஐந்து நாட்களில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் 42 பேர் மரணம்



நாடளாவிய ரீதியில் கடந்த சனிக்கிழமையிலிருந்து இன்று காலை 6மணி வரையான காலப்பகுதியில் 31 வாகன விபத்துக்கள் இடம் பெற்றுள்ளதுடன்அவற்றில் 42 பேர் உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர்,பொலிஸ் அத்தியட்சகர் ருவான் குணசேகர தெரிவித்தார்.

பொலிஸ் தலைமையகத்தில் இன்று புதன் கிழமை இடம் பெற்ற ஊடகசந்திப்பின் போது இதனை தெரிவித்த அவர் புத்தாண்டு காலப்பகுதி சம்பவங்கள் குறித்து தகவல்கள் தருகையில் மேலும் கூறியதாவது,

புத்தாண்டு காலமான 13 ஆம் திகதி தொடக்கம் இன்று முற்பகல் 6 மணிவரையிலான காலப்பகுதியில் மாத்திரம் 31 வீதி விபத்துக்கள் பதிவாகியுள்ளதுடன் 42 பேர் வரையில் விபத்துக்களில் சிக்கி உயிரிழந்துள்ளனர்.

அதிகளவில் விபத்துக்கள் பதிவாகும் மாதமாக கருதப்படும் இம்மாதத்தில் வீதிவிபத்துக்களை கட்டுப்படுத்துவதற்காக விசேட சோதனை நடவடிக்கைகள் இடம் பெற்று வருகின்றன.

இந்த நிலையில் கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது இவ்வருடத்தின் பண்டிகை காலத்தில் விபத்துக்களின் அளவு குறைந்த மட்டடத்தில் பதிவாகியுள்ளமையை காணக்கூடியதாகவுள்ளது.

கடந்த 11 ஆம் திகதியிலிருந்து முன்னெடுக்கப்பட்டு வரும் மதுபோதையில் வாகனம் செலுத்துவோரை கைது செய்யும் விசேட நடவடிக்கை எதிர்வரும் 20 ஆம் திகதிவரை தொடரவுள்ளது.

அத்துடன் கடந்த 11 ஆம் திகதியிலிருந்து இதுவரையான காலப்பகுதியில் மாத்திரம் சுமார் 1536 பேர் வரையல் மதுபோதையில் வாகனம் செலுத்தியமை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளதுடன் 42114 போக்குவரத்து வழக்குகள் பதிவாகியுள்ளன.

இதே வேளை நேற்று முற்பகல் 6 மணி தொடக்கம் இன்று முற்பகல் 6 மணியுடன் நிறைவடைந்த 24 மணிநேரத்திற்குள் மாத்திரம் மதுபோதையில் வாகனம் செலுத்தியமை தொடர்பில் 266 பேர் கைது செய்யப்பட்டுள்ளர்.

அத்துடன் 7134 போக்குவரத்து வழக்குகள் பதிவாகியள்ளது. மேலும் பண்டிகை காலங்களில் அதிகளவிலான விபத்துக்கள் மதுபோதையில் வாகனம் செலுத்துகின்றமையின் காரணமாக இடம் பெற்றுள்ளது .

அதனை கருத்தில் கொண்டு வாகனவிபத்துக்களை கட்டுப்படுத்தும் நோக்கிலேயே இத்தகைய விசேட சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இவ்வாறான வாகன விபத்துக்களை கட்டுப்படுத்தல் தொடர்பில் சாரதிகளின் ஒத்துழைப்பும் அவசியமாக காணப்படுகினறது. போக்குவரத்திற்கு இடையூறை ஏற்படுத்தும் வகையில் வீதியோரங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனத்தை நிறுத்தி வைத்துள்ள சாரதிகளுக்கு எதிராக போக்குவரத்து சட்டத்திற்கு அமைவாக சட்டநடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.