ஜனாதிபதியின் பதவிக்காலம் சுதந்திரக்கட்சிக்குள் இருவேறு நிலைப்பாடு



அரசியலமைப்பின் 19ஆவது திருத்தச் சட்டத்தின் பிரகாரம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பதவிக்காலம் தொடர்பில் உயர்நீதிமன்றத்தின் விளக்கத்தை பெற்றுக்கொள்வதில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்குள் இருவேறு நிலைப்பாடுகள் காணப்படுகின்றன.

19ஆவது திருத்தச் சட்டத்தின் பிரகாரம் இலங்கை ஜனாதிபதி ஒருவரின் பதவிக்காலம் ஐந்து ஆண்டுகளாக குறைக்கப்பட்டது. 2015ஆம் ஆண்டு ஜுலை மாதம் 21ஆம் திகதி 19ஆவது திருத்தச்சட்டத்தில் சபாநாயகர் கையொப்பமிட்டிருந்தார். அந்த வகையில் ஜனாதிபதியின் பதவிக்காலம் 2020ஆம் ஆண்டு ஜுலை மாதம் 21ஆம் திகதியுடன்தான் முடிவடையுமென கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடகச்சந்திப்பொன்றில் சு.கவின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்திருந்தார். அத்துடன், இது குறித்து இம்மாத இறுதியில் உயர்நீதிமன்றத்திடம் விளக்கத்தைப் பெற்றுக்ெகாள்வது தொடர்பில் ஆலோசித்து வருவதாகவும் கூறியிருந்தார்.

இந்நிலையில், நேற்று கொழும்பு டார்லி வீதியில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் சாந்த பண்டார,ஜனாதிபதியின் பதவிக்காலம் குறித்து உயர்நீதிமன்றத்தின் விளக்கத்தைப் பெறுவது தொடர்பில் கட்சிக்குள் இதுவரை எவ்வித கலந்துரையாடலும் இடம்பெறவில்லை.

கட்சி ஆதரவாளர்களின் கருத்தையே தயாசிறி ஜயசேகர வெளிப்படுத்தியிருந்தார். கட்சிக்குள் இதுகுறித்து கலந்துரையாடல்கள் நடைபெற்று ஜனாதிபதி இணக்கம் வெளியிட்டால் மாத்திரமே உயர்நீதிமன்றம் செல்வோம். ஆனால், ஜனாதிபதி அதற்கு இணக்கம் தெரிவிக்கக் கூடிய வாய்ப்பு குறைவாகவே உள்ளது.

நிறைவேற்று அதிகாரத்தை ஒழிப்பதற்கு பூரண ஆதரவை வழங்க நாங்கள் தயாராக உள்ளோம். அதிகாரத்தை அதிகரித்துக்கொள்ளும் நபர் மைத்திரிபால சிறிசேன அல்ல. உலகில் எந்தவொரு தலைவரும் செய்யாத விடயத்தை 19ஆவது திருத்தச்சட்டத்தில் ஜனாதிபதி செய்திருந்தார். நிறைவேற்று அதிகாரத்தை ஒழிப்பது பாராளுமன்றத்தின் செயற்பாடாகவுள்ளது.

1987ஆம் நிறைவேற்றப்பட்ட 13ஆவது திருத்தச்சட்டத்தின் பிரகாரம் நிறைவேற்று அதிகாரத்தை ஒழித்தால் ஒற்றையாட்சித் தொடர்பில் சில கேள்விகள் எழும். ஒற்றையாட்சியை உறுதிச்செய்யும் சட்டத்திருந்தங்களை செய்துவிட்டு நிறைவேற்று அதிகாரத்தை ஒழிப்பதற்கான 20ஆவது திருத்தச்சட்டத்தை கொண்டுவந்தால் அதற்கு பூரண ஆதரவை வழங்க நாங்கள் தயாராக உள்ளோம். ஆகவேதான் ஜனாதிபதி தமது பதவிக்காலத்தை அதிகரித்துக்கொள்ள விரும்புபவர் அல்ல என்றார்.

இதேவேளை, 19ஆவது திருத்தச்சட்டத்தின் பிரகாரம் ஜனாதிபதி ஒருவருக்கு ஐந்து ஆண்டுகள் மாத்திரமே பதவி வகிக்க முடியும் என்று கூறியுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஜனாதிபதியின் பதவிக்காலம் குறித்து உயர்நீதிமன்றத்தின் வியாக்கியானத்தைப் பெற்றுக்கொள்ளவுள்ளதாக சு.கவின் பொதுச் செயலாளர் வெளியிட்டிருந்த கருத்துக்கு கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளமையும் சுட்டிக்காட்டத்தக்கது.