மட்டக்களப்பில் செயற்படும் அனர்த்த முகாமைத்துவ உத்தியோகத்தர்களின் கடமைகளை வலுப்படுத்த நடவடிக்கை




சிஹாராலத்தீப்

மட்டக்களப்பு மாவட்டத்தில் செயல்படும் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் கீழ் பணி புரியும் உத்தியோகத்தர்களின் கடமைகளை வலுப்படுத்தும் விசேட கூட்டம் ஒன்று இன்று (25 )காலை மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

மாவட்ட அரசாங்க அதிபர் மா.உதயகுமார் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் தற்போதைய சூழ்நிலைக்கு ஏற்றவாறு அனர்த்த முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்கள் மாவட்ட மட்டத்தில் 24 மணித்தியாலயமும் மக்களுக்கு அனர்த்தங்களின் போது கடமை புரியக்கூடியவாறு தயார் நிலையில் இருக்க வேண்டும் என அரசாங்க அதிபரால் அறிவுறுத்தல் செய்யப்பட்டது.

அனர்த்தங்கள் பற்றிய தகவல்களை முன் கூட்டியே சேகரிப்பதிலும் மக்களுக்கு முடிந்தளவு சேவைகளை பணி புரிய பிரதேச மட்ட, கிராம மட்ட அனர்த்த நிவாரண சேவைகள் உத்தியோகத்தர்கள் செயல்பட வேண்டும் எனவும் இதற்கென பிரதேச மட்டத்தில் உருவாக்கப்பட்டுள்ள அனர்த்த நிவாரண குழுக்களையும் பலப்படுத்தி உசார் நிலையில் வைக்குமாறும் அரசாங்க அதிபர் இங்கு கேட்டுக் கொண்டார்.

மேலும் மக்களுக்கு அவசர அனர்த்தங்கள் ஏற்படும் வேளையில் முன்னின்று பணியாற்ற வேண்டியது அனர்த்த நிவாரண சேவை பணியாளர்களின் பொறுப்பான கடமை என்பதை உணர்ந்து செயல்பட  வேண்டுமெனவும்; அவசர கால நிலைமை தொடர்பாக மக்கள் விழிப்புணர்வை ஏற்படுத்தவும்,வதந்திகளை தடுத்தல், மற்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல உதவிகளை  வழங்கவும் முயற்சிக்க  வேண்டும்.என்றும் அரசாங்க அதிபர் கேட்டுக்கொண்டார்.   

இந்த விசேட கூட்டத்தில் மாவட்ட  மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்சினி ஸ்ரீகாந் ,மாவட்ட அனர்த்த முகாமைத்துவ சேவைகள் உதவிப்பணிப்பாளர் எ.எஸ்.எம்.சியாட்,உதவி மாவட்ட செயலாளர் அ.நவேஸ்வரன் ,நிர்வாக உத்தியோகத்தர் கே.தயாபரன்,மற்றும் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உத்தியோகத்தர்கள், பலரும் பிரசன்னமாயிருந்தனர்.