வவுணதீவு பிரதேசத்திலுள்ள நெடியமடு கிராமத்துக்குள் புகுந்த காட்டு யானைகள் ; விவசாயிகள் அச்சம்



மட்டக்களப்பு – வவுணதீவு பிரதேசத்திலுள்ள நெடியமடு கிராமத்துக்குள் புகுந்த காட்டு யானைகள் தென்னந்தோட்டம் ஒன்றினை துவம்சம் செய்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

விவசாயக் கிராமத்திற்குள் நேற்று (திங்கட்கிழமை) ஊடுருவிய காட்டு யானைகள், அங்குள்ள தென்னந்தோப்பிலிருந்த சுமார் 36 தென்னை மரங்களை அழித்துள்ளதாக அத்தோப்பின் உரிமையாளர் ஆனந்தி ரவிச்சந்திரன் தெரிவித்தார்.

இதற்கு முன்னதாகவும் கடந்த வருடம் தனது தோட்டத்திலிருந்த 20 தென்னை மரங்கள் காட்டு யானைகளால் அழிக்கப்பட்டதாகவும் அவர் மேலும் கூறினார். இதனால் தமது பொருளாதாரத்திற்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகவும் ஆனந்தி கவலை வெளியிட்டார்.

மேலும், நெடியமடு, உன்னிச்சை, ஆயித்தியமலை போன்ற பிரதேசங்களில் யானை தடுப்பு மின்சார வேலி இருந்தபோதிலும் கடந்த பல மாதங்களாக அங்கு மின்சாரம் வழங்கப்படாமல் உள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

இதன் காரணமாக தமது விவசாய உற்பத்திகளையும் நெல் வயல்களையும் உயிருக்கு உத்தரவாதம் இல்லாத நிலையிலே இரவு பகலாக கண்விழித்திருந்து பாதுகாத்து வருவதாகவும் விவசாயிகள் கவலை வெளியிட்டனர்.

அத்துடன் இடைநிறுத்தப்பட்டிருக்கும் மின்சார வேலிக்கான மின் இணைப்பினை விரைவாக வழங்கி கிராம விவசாயிகளின் உயிர்களையும் பயிர்களையும் பாதுகாத்து உதவ உரிய அதிகாரிகள் விரைவாக முன்வர வேண்டுமெனவும் கிராமத்தின் விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.