கலாபூஷண விருதுக்கு விண்ணப்பம் கோரல்



2019 ஆம் ஆண்டிற்கான கலாபூஷண அரச விருதுக்காக விருது பெறுபவர்களை தெரிவு செய்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

35 ஆவது முறையாக இடம்பெறும் இத்தேசிய அரச விழாவுக்கு, 60 வயதுக்கு மேற்பட்ட சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் ஆகிய மூவினத்தையும் சார்ந்த கலைஞர்கள் விண்ணப்பிக்க தகுதி பெற்றுள்ளனர்.

ஒவ்வொரு சமயத்தவர்களும் அந்தந்த சமய திணைக்களங்களில் தமது விண்ணப்பங்களை உரியவாறு பூர்த்தி செய்து வழங்க வேண்டும். அந்த வகையில் முஸ்லிம் கலைஞர்களிடமிருந்து விண்ணப்பங்களை முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் கோருவதாக திணைக்களத்தின் பணிப்பாளர் எம்.ஆர்.எம். மலிக் தெரிவித்துள்ளார்.

அதேபோன்று இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தில் அல்லது அதன் இணையத்தளத்தில் (www.hindudept.gov.lk) முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் இணையத்தளத்தில் (www.muslimaffairs.gov.lk) விண்ணப்பங்களை பதிவிறக்கிக் கொள்ளலாம்.

அதற்கமைய குறித்த பிரதேசத்தில் தற்போது நிரந்தரமாக வசித்துவருபவரும், 2018 டிசம்பர் 15 ஆம் திகதி, 60 வயதைப் பூர்த்தி செய்த கலைஞர்களின் விண்ணப்பங்களை மேற்படி விருது வழங்குவதற்கு சமர்ப்பித்தல் வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கலாபூஷண அரச விருது விழா சம்பந்தமாக, குறித்த துறையில் சிரேஷ்டத்துவ அடிப்படையில் ஒரு பிரதேச செயலகத்திலிருந்து மூன்று பேரின் பெயர்கள் சிபாரிசு செய்யப்பட்டு, அந்தந்த பிரதேச கலாசார அதிகார சபையின் சிபாரிசுடன், கலாசார உத்தியோகத்தர்/ கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர்/ அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் சிபாரிசுடன், பிரதேச செயலாளரின் அனுமதியுடன் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

நாட்டின் கலைத் துறைக்கு உன்னத பங்காற்றியவர்களை கௌரவிப்பதற்காக இந்த விருது வழங்கள் விழா ஒவ்வொரு வருடமும் டிசம்பர் மாதம் 15ஆம் திகதி ஜனாதிபதி தலைமையில் இடம் பெற்று வருகின்றது. இவ்வாறு விருதுக்காக தெரிவு செய்யப்படும் கலைஞர்கள் விஷேட அரச நினைவுச்சின்னம், பொற்கிளி மற்றும் சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.