மின்சார நெருக்கடிக்கு தீர்வு; சூரிய சக்தி மூலம் மின்சாரம்


புதிய திட்டம் மின்சார சபையிடம் ஒப்படைப்பு

மின்சார நெருக்கடிக்கு தீர்வாக நீண்டகால திட்டத்துடன் குறைந்த செலவில் சோலார் பவர் (சூரிய ஒளி சக்தி) மூலம் மின்சாரத்தைப் பெற்றுக்கொடுப்பதற்கான திட்டம் நடைமுறைக்கு வரவுள்ளது.

இதற்கான திட்டத்தை சூரிய சக்தி தொழில்நுட்ப துறையினர் சங்கம் இலங்கை மின்சார சபையிடம் ஒப்படைத்துள்ளது.

2019தொடக்கம் 2025ஆம் ஆண்டுவரையிலான நீண்டகால சோல பவர் திட்டத்தின் மூலம் 266பில்லியன் ரூபாவை சேமிக்க முடியுமெனவும் சூரிய சக்தி தொழில்நுட்ப துறையினர் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

கொழும்பு நிபோன் ஹோட்டலில் நேற்று(18) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலே இது தொடர்பில் அச்சங்கத்தினர் விளக்கமளித்தனர்.

நாளாந்தம் 4மணித்தியாலங்கள் மின்வெட்டு மற்றும் தீவிர சக்தி நெருக்கடியின் விளைவாக நாளொன்றுக்கு ஒரு பில்லியன் ரூபா நஷ்டம் ஏற்பட்டுவருகிறது. மின்சார விநியோக அளவு இடைவெளி அதிகரிப்பதால் குறைந்தபட்சம் 2022ஆம் ஆண்டுவரை (அதிகபட்சம் 2025வரை) நிலைமை மோசமடையும். 2025ஆண்டாகும் போது தேசிய மின்சாரக் கட்டமைப்பிற்கு மேலதிகமாக 5,500மெகா வோல்ட் மின்சார உற்பத்தி தேவைப்படும்.

இப்பிரச்சினை குறித்து அரசாங்கத்திடம் செயற்படுத்தத் கூடிய எந்தவொரு திட்டமும் கிடையாது. சக்தி தேவையை பூர்த்திசெய்ய அரசாங்கத்தினால் முன்னெடுக்கத் தயாரகவுள்ள தற்காலிக திட்டம் இலங்கை மின்சார சபையை பாரிய நிதிநெருக்கடிக்குள்ளாக்கும். இதன் விளைவாக பொது மக்கள் தாங்கிக்கொள்ள முடியாத மின்சாரச் செலவை எதிர்கொள்வர்.

தற்சமயம் இலங்கை மின்சார சபையின் வருடாந்த வருவாய் ஏறத்தாழ 230பில்லியன் ரூபாவாகும். அதேசமயம் 700மெகா வோல்ட் கூடுதல் அவசர மின்சக்தி கொள்வனவிற்காக இலங்கை மின்சார சபைக்கு சராசரியாக ஆண்டொன்றிக்கு 170பில்லியன் ரூபா செலவாகின்றது.

2019 – 2025ஆண்டுக்காலப்பகுதிக்குள் அவசர மின்சக்தி கொள்முதலுக்கான ஒரே சாத்தியமான மாற்றீடு சூரியசக்தியாகும். சூரியசக்தியூடான மின்சார உற்பத்தி திட்டங்களை உடனடியாக நாடுமுழுவதும் பிரந்திய அளவில் முன்னெடுக்க வேண்டும். மின்கல சேமிப்பகத்துடன் ஒருஅலகு (யுனிட்) மின்சாரம் 23.10ரூபா மற்றும் கூரைகளை சூரியமின்கலங்களாக மாற்றுவதனூடாக 22.00ரூபாய்க்கு ஒரு அலகு (யுனிட்) மின்சாரம் என்ற சூரியமின்சக்தி நிறுவன அமைப்பினால் பரிந்துரைக்கப்பட்டுள்ள திட்டம் தற்சமயம் ஏற்பட்டுள்ள மின்சக்தி பிரச்சினைகளுக்கு சிறந்த தீர்வாக அமையுமென நாம் நம்புகின்றோம். அத்தோடு இந்தத்திட்டத்திற்கு அரசாங்கம் எந்தவித முதலீட்டையும் வழங்க வேண்டியதில்லை.

இலங்கை மின்சார சபையின் உதவியுடன் 6மாதகாலப்பகுதிக்குள் ஒப்பந்த அடிப்படையில் இந்த சூரியமின் உற்பத்திக் கலங்களை மின்கட்டமைப்புக்குள் கொண்டுவர முடியும்.