கல்முனை தமிழ் பிரதேச செயலக விவகாரம்; சுமுக தீர்வு காண முயற்சி





கல்முனை, சாய்ந்தமருது உள்ளிட்ட பிரதேசங்களிலுள்ள தமிழ்-, முஸ்லிம் மக்கள் ஒற்றுமையுடனேயே வாழ்கின்றனர் என்றும் மக்கள் விடுதலை முன்னணிக்கு வன்செயல் கைவந்த கலை என்பதாலேயே அவர்கள் இந்த விவகாரம் தொடர்பில் தவறாக பேசி வருவதாகவும் என்றும் இராஜாங்க அமைச்சர் எச். எம். எம். ஹரீஸ் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

கல்முனையின் வரலாறு தெரியாமல் ஜே.வி.பி.யினர் பேசுகின்றனர் என குறிப்பட்ட அவர், நிலத் தொடர்புள்ள ரீதியில் பிரதேச செயலகம் உருவாக்கப்பட வேண்டும் என்றும் இது தொடர்பில் தமிழ்த் தேசிய கூட்டமைப்புடன் பேசி குழு ஒன்று நியமிக்கப்பட்டு அதனூடாக இந்த விவகாரத்துக்குத் தீரவு காணப்பட வேண்டும் என்றும அவர் தெரிவித்தார்.

கல்முனை பிரதேசத்தின் ஒற்றுமையைப் பாதுகாக்கும் வகையிலேயே நாம் பொறுமையாக செயற்படுகிறோம் என குறிப்பிட்ட அவர்,

புதிய பிரதேச சபை நிலத் தொடர்புடன் கூடியதாகவும் நூற்றுக்கு நூறு இன அடிப்படையற்றதாகவும் உருவாக்கப்படுவது அவசியம் என்றும் அவர் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று நீதி, சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, பொது நிர்வாக, இடர்முகாமைத்துவ அமைச்சுகளுக்கான நிதியொதுக்கீட்டு குழுநிலை விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்: கல்முனை பிரதேச சபை விவகாரம் அப்பகுதியில் வன்செயலை ஏற்படுத்தும் என அண்மையில் ஜே. வி. பி. எம். பி. ஒருவர் பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். அவர்கள் கல்முனையின் வரலாறு தெரியாமல் பேசுகின்றனர்.

1897 தொடக்கம் கல்முனை ஒரு பட்டின சபையாகவும் மூன்று கிராம சபையாகவும் இயங்கி வந்துள்ளது. எல்லை மீள் நிர்ணயம் செய்யப்பட்டு புதிய பிரதேச சபை கிராம சேவை அதிகாரிகள் பிரிவுகள் உருவாக்கப்படுவது அவசியமாகும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.