இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி மாநாடு ஒத்திவைப்பு ! மேதின நிகழ்வுகள் இரத்து

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி மாநாடு ஒத்திவைப்பு, த.தே.கூ மேதின நிழகழ்வுகள் இரத்து...
தந்தை செல்வாவின் நினைவு தினத்தில் குண்டுவெடிப்பில் உயிர்நீத்தவர்களுக்கு அஞ்சலி...

(இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் - கி.துரைராசசிங்கம்)


நாட்டின் அசாதாரண நிலைமை கருதி இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மாநாடு ஒத்தி வைக்கப்படுவதோடு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மேதின நிகழ்வுகளும் இரத்துச் செய்யப்படுவதாக இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் கிருஸ்ணபிள்ளை துரைராசசிங்கம் தெரிவித்தார்.

அத்துடன், தந்தை செல்வாவின் நினைவு தினத்தையொட்டி 21ம் திகதிய குண்டுத் தாக்குதலில் உயர்நீத்த உடன்பிறப்புகளுக்கு அஞ்சலி செலுத்துமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நாட்டில் இடம்பெற்றுள்ள அசாதாரண நிலைமையில் கட்சின் மாநாடு மற்றும் மேதின நிகழ்வு என்பன தொடர்பில் கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
கடந்த 21ம் திகதி உயிர்ப்பு ஞாயிறு அன்று மட்டக்களப்பு, கொழும்பு உட்பட பல்வேறு இடங்களில் நடைபெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதலின் சோகத்தில் இருந்து மக்கள் இன்னும் மீளவில்லை. 2015 ஜனவரி 08ம் நாளுக்குப் பின்னர் நிலவிய சமாதான நிலைமை முற்றாகச் சீர்கெட்டுவிட்டது. மக்களிடையே சோகத்தோடு சேர்ந்த ஒரு அச்ச நிலைமை காணப்படுகின்றது. இந்தச் சூழ்நிலையிலே திட்டமிட்ட படி எமது இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் 16வது மாநில மாநாட்டை வரும் 26ம் நாளன்று நடாத்துவது பொருத்தமற்றது எனக் காண்கின்றோம். 

எனவே எதிர்வரும் நாட்களில் மாநாட்டுக்கான தினம் தீர்மானிக்கப்படும் வரை இந்த ஏற்பாடுகள் ஒத்திவைக்கப்படுகின்றன என்பதனைக் கட்சி அங்கத்தவர்களுக்குத் தெரிவித்துக் கொள்கின்றோம்.




இருப்பினும், மாநாட்டுச் செயற்பாடுகளில் தொய்வு ஏற்படாதவகையில் அது தொடர்பில் அக்கறையுள்ளவர்களாக இருக்கும் படியும் கேட்டுக் கொள்கின்றோம்.




இந்த சோகத்தின் மத்தியிலும் 26ம் திகதிய தந்தை செல்வாவின் நினைவு நாளை மிகவும் அடக்கமாக அந்தந்த மாவட்டங்களில் அனுஷ்டிக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கட்சிக் கிளைகளைக் கேட்டுக் கொள்வதோடு தந்தையின் அடக்கமான அல்லது அடையாளமான நினைவு நிகழ்வை உடனடுத்து 21ம் திகதிய துன்பியலில் உயிர்நீத்த எல்லா உடன்பிறப்புக்களுக்குமான நினைவஞ்சலியையும் நிகழ்த்துமாறும் கேட்டுக் கொள்கின்றேன்.




அதே நேரம் நாட்டின் நிலைமை கருதி மேதின ஏற்பாடுகள் அனைத்தும் கைவிடப்பட்டுள்ளன என்ற விடயத்தையும் கவனத்திற்கொண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மேதின நிகழ்வுகளும் நடைபெறமாட்டாது என்பதையும் தெரிவித்துக் கொள்கின்றேன் என்று தெரிவித்தார்.