இரவுநேரப் பயணங்களில் சாரதியை மட்டும் நம்பாமல் பொறுப்புடன் செயற்படுங்கள்



இரவு நேரப் பயணங்களின்போது சாரதியை மட்டும் முழுமையாக நம்பியிராமல் பயணிகளும் பொறுப்புடன் செயற்பட வேண்டுமெனப் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அத்தியட்சகர் ருவன் குணசேகர நேற்று தெரிவித்தார்.

பயணிகளை கவனமாக கொண்டு சேர்க்க வேண்டியது சாரதியின் பொறுப்பு என்கின்றபோதும் இரவுப் பயணங்களில் அவருக்கு நித்திரை ஏற்படாமல் அவருடன் கதைத்துக் கொண்டு வரவேண்டியதை பயணிகள் வழக்கமாக்கி கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

சாரதிக்கு நித்திரை ஏற்படுவதை தவிர்க்கும் வகையில் பயணிகள் இடையிடையே வாகனத்தை நிறுத்தி அவருக்கு தண்ணீர் அல்லது தேநீரை பருகக் கொடுக்க வேண்டுமென்றும் அல்லது அவரது முகத்தை கழுவுமாறு

கேட்டுக் கொள்ள வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார். அதேபோன்று நித்திரை வருமாயின் வாகனத்தை ஓரத்தில் நிறுத்தி ஓய்வெடுத்துச் செல்ல வெண்டியது சாரதிகளின் பொறுப்பு என சுட்டிக்காட்டிய பொலிஸ் பேச்சாளர், அவ்வாறு இடம்பெற்றிருக்குமாக இருந்திருந்தால் நேற்றைய விபத்தில் பத்து உயிர்களை காப்பாற்றியிருக்கலாமென்றும் அவர் கூறினார்.