பாசிக்குடாவில் உயிரிழந்தோருக்கு ஈகைச் சுடரேற்றி அஞ்சலி



மு.கோகிலன்

கொழும்பு மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்புச் சம்பவங்களால் உயிரிழந்தோருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் கல்குடா தமிழ்; பிரதேசங்களில் வெள்ளைக் கொடி கட்டப்பட்டு துக்க தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.

அந்தவகையில் கல்குடா மற்றும் பாசிக்குடா பொது மக்களின் ஏற்பாட்டில் பாசிக்குடாவில் தொடர் குண்டுவெடிப்புச் சம்பவங்களால் உயிரிழந்தோருக்கு ஈகைச் சுடரேற்றி செவ்வாய்க்கிழமை மாலை அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதன்போது சர்வதமத குருமார்களினால் பிரார்த்தனைகள் இடம்பெற்றதுடன், கலந்து கொண்டோரினால் தொடர் குண்டுவெடிப்புச் சம்பவங்களால் உயிரிழந்தோரின் ஆத்மா சாந்தி வேண்டி பிரார்த்தனைகள் இடம்பெற்றதுடன், ஈகைச் சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.

இவ்வஞ்சலி நிகழ்வில் கல்குடா, பாசிக்குடா பிரதேச பொதுமக்களுடன் இணைந்து கல்குடா, பாசிக்குடா பொது அமைப்புக்கள், விளையாட்டுக் கழகங்கள் என்பவற்றின் பிரதிநிதிகள் மற்றும் கல்குடா பொலிஸ் உத்தியோகத்தர்கள், கல்குடா கிராம சேவை அதிகாரி க.கிருஸண்காந்த் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

தமிழ் பிரதேசங்களின் வீதிகள் வெறிச்சோடிக் காணப்பட்டதுடன், பொலிஸார் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.