கல்முனை தமிழ் பிரதேச செயலகம் உருவாகுவதால் பிரிவினை ஏற்படாது


தமிழ் மக்கள் தமது கலாசாரம், பண்பாடு, பாரம்பரியத்தைப் பாதுகாக்கும் வகையில் கோரிக்கை விடுக்கும் கல்முனை தமிழ் பிரதேச செயலகத்தை உருவாக்குவதால் நாட்டில் பிரிவினை ஏற்படாது. இந்தவிடயத்தில் அரசாங்கம் வழங்கியிருந்த வாக்குறுதியை நிறைவேற்றாது தமிழ் மக்களுக்கு அநீதியிழைத்துள்ளது. கல்முனை தமிழ் பிரதேச செயலகம் உருவாக்கப்படாவிட்டால், அங்கு வாழும் தமிழ், முஸ்லிம் மக்களிடையே பிரச்சினைகள் ஏற்படலாமென மக்கள் விடுதலை முன்னணி எச்சரிக்கை விடுத்துள்ளது.  
அவர் மேலும் தெரிவித்ததாவது,  கல்முனை தொகுதியில் மூன்று பிரதேச செயலகப் பிரிவுகள் உள்ளன. இங்கு முஸ்லிம்கள் அதிகமாக வாழும் பிரதேசங்களும், தமிழர்கள் அதிகமாக வாழும் பிரதேசங்களும் உள்ளன. இவற்றுக்கு வெவ்வேறான பிரதேச சபைகள் மற்றும் நகரசபைகள் உருவாக்கப்படுவது அவசியமானது.
அவரவர் கலாசாரங்களின் தனித்தன்மையைப் பாதுகாத்து,நிர்வாகங்களை முகாமைத்துவம் செய்ய உள்ளூராட்சி நிறுவனங்கள் உருவாக்கப் படுவது கட்டாயமானது. இதனால் எவரும் பிளவுபடுவார்கள் எனப் பொருள் கொள்ளக்கூடாது.
கல்முனை தொகுதியில் பிரேதச மட்டத்தில் அபிவிருத்தியை முன்னெடுக்க உள்ளூராட்சி நிறுவனங்கள் உருவாக்கப்படுவது தவறானதல்ல. கல்முனையில் தமிழ் பிரதேச செயலகம் உருவாக்கப்படுமென பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம், முன்னாள் அமைச்சர் பைஸர் முஸ்தபா ஆகியோர் வாக்குறுதியளித்திருந்தனர். ஆனால், வழங்கிய வாக்குறுதியை  இறுதியில் எவரும் நிறைவேற்றவில்லை. அதன் காரணமாகவே பாரிய பிரச்சினை உருவாகியுள்ளது. உடனடியாக இந்தப் பிரச்சினைக்குத் தீர்வுகாண வேண்டுமென அரசுக்கு நாங்கள் பகிரங்கமாக அழுத்தம் கொடுக்கின்றோம். இல்லாவிட்டால், இது பாரிய பிரச்சினையாக மாறி அங்கு வசிக்கும் தமிழ், முஸ்லிம் மக்களிடையே பிரச்சினைகளைத் தோற்றுவிக்கலாம். அதற்கு முன்னர் இதற்குத் தீர்வுகாணப்பட வேண்டும் என்றார்.