வாகரையில் கனிய மணல் அகழ்வை நிறுத்தக்கோாி ஆா்ப்பாட்டம்




மு.கோகிலன்

மட்டக்களப்பு வாகரை பிரதேசத்தில் கனிய மண் அகழ்வு தொழிற்;சாலை அமைக்கும் திட்டத்தினை நிறுத்துமாறு வலியுறித்தி இரண்டாவது தடவையாக நேற்று புதன் கிழமை (10) காலை பிரதேச மக்களால் வாகரை பிரதேச செயலகத்திற்கு முன்பாக வீதியில் நின்று கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கதிரவெளி பிரதேச பொதுமக்கள் மற்றும் சமூக மட்டஅமைப்புக்களால் இவ் கவனயீர்ப்பு போராட்டம் மேற்கொள்ளப்பட்டது.

இன்று காலை மட்டக்களப்பு திருமலை வீதியில் கூடிய பொதுமக்கள் வாகனபேரணியாக கதிரவெளியூடாக சென்று பணிச்சங்கங்கேணி பிரதேசத்திற்கு சென்று அங்கிருந்து மீண்டும் வாகரை பிரதான வீதி ஊடாக வாகரை பிரதேச செயலகத்தினை சென்றடைந்து வீதியில் நின்று கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது வீதியில் நின்ற பொதுமக்களுக்கு கணியமணல் தொழிற்hலை அமைப்பதினால் ஏற்படும் பாதிப்பு தொடர்பான துண்டு பிரசுரமும் வழங்கப்பட்டது.

மக்கள் செறிந்து வாழும் பிரதேசங்களான பால்சேனை வடக்கு தொடக்கம் வெருகல் வரையான கதிரவெளி,புதூர்,புச்சாக்கேணி,ஆகிய கிராமங்களை உள்ளடக்கியதாக கனிய மணல் அகழ்வு மற்றும் தொழிற்சாலை அமைக்கும் ஆரம்ப வேலைகள் அண்மையில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பாக தமக்கு எந்த விதமான தெளிவூட்டல்களும் இல்லையென்றும். இவ் தொழிற்சாலை அமைப்பதனால் சூழல்பாதிப்பு, பௌதீக சூழலான நீர்ச் சூழல், நிலச் சூழல்,வளிச் சூழல், பாதிப்படைவதாகவும், கடல் வளம் பாதிப்படையும் என்றும் நிலத்தடி நீர் பாதிப்பிற்குள்ளாகி எமது எதிர்கால சந்ததியினரின் வாழ்க்கை பாதிப்படையும் என்றும் தெரிவிக்கின்றனர்.

இதன் போது அரச அதிகாரிகளே,அரசியல்வாதிகளே,எமது பிரதேச மக்களை பாதிக்க கூடிய கனிய மணல்(இல்மனைட்) அகழ்வு பணியினை உடனடியாக தடுத்து நிறுத்தங்கள்.எமது தாய் மண் எங்களை வாழ வைக்கும் மண். எங்களுக்கு சோறு போடும் மண்,விற்க்காதே விற்க்காதே தாய் மண்ணை விற்க்காதே.இல்மனைட் கம்பனியை தடை செய்,சுரண்டாதே சுரண்டாதே எங்களின் வளத்தை சுரண்டாதே என்பன போன்ற வாசகங்களை எழுதிய பதாதைகளை கையில் ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது கோரிக்கை அடங்கிய மகஜரை பிரதேச செயலாளர் எஸ்.கரனிடம் கையளித்தனர். மகஜரை பெற்றுக்கொண்ட பிரதேச செயலாளர் இது தொடர்பாக மாவட்ட அரசாங்க அதிபரின் கவனத்திற்கு மேலதிக நடவடிக்கைக்காக சமர்ப்பிப்பதாக கருத்து தெரிவித்தார். இதன்பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.