ஜனாதிபதியின் பதவிக்காலத்தை அதிகரிக்கும் சுதந்திரக்கட்சியின் முயற்சி தோல்வியடையும்: ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது.



ஜனாதிபதியின் பதவிக்காலத்தை அதிகரிப்பதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி, எந்ததொரு முயற்சியை மேற்கொண்டாலும் அது நிச்சயம் தோல்வியிலேயே முடியுமென ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது.

ஐனாதிபதியின் பதவிகாலத்தை அதிகரிப்பது குறித்து எழுந்துள்ள சர்ச்சை தொடர்பில் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல கொழும்பு ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது,

“அரசியலமைப்பின் 19ஆவது திருத்தச் சட்டத்தில் ஜனாதிபதி ஒருவரின் பதவிக்காலம் 5 ஆண்டுகள் ஆகும். அந்தவகையில் தற்போதைய ஜனாதிபதியும் 5 ஆண்டுகள்தான் பதவி வகிக்க முடியுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதன்படி 2020 ஆம் ஆண்டு ஜுலை 21 ஆம் திகதியுடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பதவிகாலம் நிறைவடைகின்றது.

ஆனாலும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி உயர் நீதிமன்றத்தினை நாடி அதனூடாக பதவி காலத்தினை அதிகரிக்க முயற்சி மேற்கொள்வதாக தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது.

இதற்கு மக்கள் விடுதலை முன்னணி, ஐக்கிய தேசியக்கட்சி உள்ளிட்ட சில கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புக்கள் எதிர்ப்பினை வெளியிட்டு வருகின்றன.

இந்நிலையில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் இத்தகைய செயற்பாடு நிச்சயம்
தோல்வியிலேயே முடியும்” என லக்ஷ்மன் கிரியெல்ல குறிப்பிட்டுள்ளார்.