நீண்ட காலமாக பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்பு பட்டு வந்த கும்பல் கைது !




(எம்.ஏ.றமீஸ்)

நீண்ட காலமாக பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்பு பட்டு வந்த கும்பலொன்றை கைது செய்துள்ளதாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.

அக்கரைப்பற்று பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி அஜித் பண்டாரவின் வழிகாட்டலின் கீழ் பெருங்குற்றப் பிரிவு பொறுப்பதிகாரி ரி.ஜெயசீலன் தலைமையிலான பொலிஸ் உத்தியோகத்தர்கள் மேற்கொண்ட சுற்றி வளைப்பில் பலர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் குற்றச் செயலுக்காக பயன்படுத்தப்பட்ட வாகனங்களும், கொள்ளையிடப்பட்ட வாகனங்களும் இதன்போது கைப்பற்றப்பட்டுள்ளன.

வாகனங்களை கொள்ளையிட்டு விற்பனை செய்து வந்த ஆறுபேர் அடங்கிய சந்தேக நபர்களும், சட்ட விரோத மணல் அகழ்வில் ஈடுபட்டு வந்த 10 சாரதிகளும் இச்சுற்றிவளைப்பின்போது கைது செய்யப்பட்டுள்ளதுடன் இவர்கள் வசமிருந்த வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

அட்டாளைச்சேனை பிரதேசத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டியொன்று கொள்ளையிட்டதனைத் தொடர்ந்து அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதனைத் தொடர்ந்தும் குற்றச் செயல்களுடன் தொடர்பு பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்விடயம் தொடர்பில் பொலிஸார் மேற்கொண்ட தீவிர சோதனையின் பின்னர் மட்டக்களப்பு மாவட்டம் காத்தான்குடிப் பிரதேசத்தில் வாகன பழுது பார்க்கும் நிலையமொன்றை நடத்தி வந்த உரிமையாளரும் முச்சக்கரவண்டி கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்பு பட்ட மேலும் மூவரும் அக்கரைப்பற்று பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர். 

முச்சக்கரவண்டிகளின் நிறங்களையும், அதன் இயந்திரம் இலக்கத்தகடுகள்உள்ளிட்ட உதிரிப் பாகங்களையும் மாற்றம் செய்து சூட்சுமான முறையில் அம்முச்சக்கர வண்டிகளை இக்கும்பல் விற்பனை செய்ய முற்பட்டுள்ளனர். 

இக் கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்பு பட்ட இருவருடன் அம்முச்சக்கர வண்டிகளை கொள்வனவு செய்த இருவரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு அக்கரைப்பற்று நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர். இதனைத் தொடர்ந்து கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்பு பட்ட நால்வரையும் எதிர்வரும் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.

இதேவேளை அக்கரைப்பற்று பட்டின ஜும்ஆ பள்ளிவாசலுக்கு முன்னால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளொன்றை கொள்ளையிட்டு அதன் உதிரிப்பாகங்களை பகுதிகளாகப் பிரித்து பொதி செய்து விற்பனைக்கு தயார் படுத்தப்பட்ட நிலையில் இருவர் கைது செய்யப்பட்டதுடன், சந்தே நபர்களிடமிருந்து மோட்டார் சைக்கிளுக்கான உதிரிப்பாகங்கள் அடங்கிய பொதிகளும் கைப்பற்றப்பட்டதாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.
பொத்துவில் பொலிஸாரின் உதவியுடன் கைது செய்யப்பட்ட இரு சந்தேக நபர்களும் அக்கரைப்பற்று நீதிவான் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் ஆஜர் படுத்தப்பட்டபோது எதிர்வரும் 18 ஆம் திகதி வரை இச்சந்தேக நபர்களை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.

இதேவேளை அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தின் நிருவாக எல்லைக்குட்பட்ட பிரதேசங்களில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்டு வந்த 10 பேரை பொலிஸார் கைது செய்துள்ளதுடன் மணல் அகழ்விற்காகப் பயன்படுத்திய 10 வாகனங்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
அனுமதிப்பத்திரம் இன்றி மணல் ஏற்றியமை மற்றும் நிபந்தனைகளை மீறிய வகையில் மணலை ஏற்றிச் சென்றமை ஆகிய குற்றங்களின் அடிப்படையிலேயே உழவு இயந்திரங்களும் ரிப்பர் ரக வாகனங்களும் என பத்து வாகனங்கள் கைப்பற்றப்பட்டதுடன் அதனை செலுத்தி வந்த சாரதிகள் 10 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள வாகனங்களுடன் அதன் சாரதிகள் அக்கரைப்பற்று மெஜிஸ்ரேட் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படவுள்ளதாக அக்கரைப்பற்று பொலிஸார்; தெரிவித்தனர்.