தேசிய தவ்ஹீத் ஜமாத்துடன் கிழக்கு மாகாண ஆளுநருக்கு இருக்கும் தொடர்புகள் பல கேள்விகளை எழுப்புகிறது

சட்டத்திற்கு முரணான வகையில் பொலிஸ் திணைக்களத்தை ஜனாதிபதி தனது மேற்பார்வையின் கீழ் வைத்திருந்தார் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.


இது குறித்து நாடாளுமன்றில் கருத்து தெரிவித்த அவர், 19 ஆவது திருத்தத்திற்கு பின்னர் ஜனாதிபதி சட்டம் மற்றும் ஒழுங்கினை பொறுப்பேற்க முடியாது என்றும் சுட்டிக்காட்டினார்.

அத்தோடு 19 திருத்த சட்டத்தின் பிரகாரம் ஜனாதிபதி ஒருவர் பாதுகாப்பு மகாவலி மற்றும் சுற்றாடல் அமைச்சு பதவியையே தன்கீழ் வைத்திருக்க முடியும் என்றும் அவர் கூறினார்.

இதன் காரணமாக தவிர்த்திருக்கப்பட வேண்டிய இந்த கொடூர தாக்குதலுக்கு அவரே பொறுப்பேற்க வேண்டும்
இந்த தாக்குதல்கள் குறித்து எந்த ஒரு தனி சமூகத்தையும் விமர்சிக்க கூடாது. அவர்கள் மீது பிரயோகிக்கப்பட்டபோதும் இந்நாட்டு முஸ்லிம்கள் வன்முறையில் ஈடுபட்டதில்லை.அதனை நாங்கள் மதிக்கிறோம் எனவும்  சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த சம்பவத்தை அடுத்து அஞ்சலி செலுத்தும் வகையில் கூட்டமைப்பு சார்பாக வடக்கு மற்றும் கிழக்கில் ஒரு நாள் துக்க தினம் அனுஷ்டிக்கப்பட்டது.

துரதிருஷ்டவசமாக, கிழக்கு மாகாண ஆளுநர் இதனை ஹர்த்தால் என்று அறிவித்தார், இது ஹர்த்தால் அல்ல என்பது மிகவும் தெளிவாகத் தெரிகிறது என்றும் கூறினார்.

தொடர்ச்சியாக இந்த தவறான நடவடிக்கைகள் தொடர்பாக முஸ்லீம் மக்கள் முறைப்பாடுகளை மேற்கொண்டு வந்தார்கள் என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

கடும்போக்காளராக மாற்றும் நடவடிக்கை தொடர்பாக அரசாங்கத்தின் புலனாய்வு பிரிவினரிடம் முஸ்லீம் குழுக்கள் பல ஆண்டுகளாக முறைப்பாட்டினை வழங்கி வந்தனர்.

2017 ஆம் ஆண்டு ஷஹாரனை கைது செய்ய வேண்டும் என கோரி காத்தான்குடியில் மக்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றினையும் நடத்தியிருந்தார்கள்.

கபீர் ஹாஷிமின் துணிச்சலான செயற்பாட்டினை தான் பாராட்டுவதாகவும் அவர் சிறந்த முன்னுதாரணமாக செயற்பட்டுள்ளார் என்றும் கூறினார்.

கிழக்கு மாகாண ஆளுநர் பற்றியும் தேசிய தொஹித் ஜமாத்துடனான அவருடைய தொடர்புகள் பற்றியும் தற்போது பாரிய கேள்விகள் எழுகின்றன.

இதுபற்றியும் இந்த குழுவினர் ஏனைய அரசியல்வாதிகளுடன் வைத்திருந்த உறவுகள் மற்றும் பாதுகாப்பு தரப்பினருடன் வைத்திருந்த உறவுகள் பற்றியும் விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.