போலி அனுமதிப்பத்திரத்துடன் மர வியாபார நடவடிக்கையில் ஈடுபட்டவா் கைது.!


மு.கோகிலன்

போலியாக தயாரிக்கப்பட்ட அனுமதிப் பத்திரத்தினை கொண்டு மர வியாபார நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த ஓட்டமாவடி பிரதேசத்தினை சேர்ந்த நபர் ஒருவரை கைது செய்துள்ளதுடன் அவரிடமிருந்து விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்ட நிலையில் காணப்பட்ட அறுக்கப்பட்ட மரங்களும் கைப்பற்றப்பட்டதாக வாழைச்சேனை வட்டார வன இலாகா அதிகாரி சு.தணிகாசலம் தெரிவித்தார்.

கைப்பற்றப்பட்ட மரங்களின் பெறுமதி ரூபா 5 இலட்சமாகும்.போலியாக தயாரிக்கப்பட்ட அனுமதிப்பத்திரம் இலங்கை அரச மரக் கூட்டுத்தாபணம் குருநாகலுக்குரியது என குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் இதனைக் கொண்டே அவர் குறித்த வியாபார நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார் என தெரிவித்தார்.

எனவே மேற்படி சந்தேக நபர் மற்றும் கைப்பற்றப்பட்ட பொருட்கள் அனைத்தும் வாழைச்சேனை மாவட்ட நீதிவான் நீதிமன்ற நீதிபதி எம்.எச்.எம்.பஷில் முன்னிலையில் நேற்று வியாழக்கிழமை (23) ஆஜர்படுத்தியதாக தெரிவித்தார்.

இதன்போது மேற்படி வழக்கு தொடர்பான சாட்சியங்களை கேட்டறிந்து கொண்ட நீதிபதி சந்தேக நபரை ஒரு இலட்சம் ரூபா சரரப் பிணையில் விடுதலை செய்துள்ளதுடன் பொருட்கள் அனைத்தும் அரசுடமையாக்கப்பட்டது.

இதேவேனை குறித்த போலி ஆவணம் தொடர்பாக மேலும் விசாரணைகளை
மேற்கொண்டு தமக்கு அறிக்கை சமர்பிக்குமாறு கட்டளை பிறப்பித்துள்ளதாக வட்டார வன இலாகா அதிகாரி இவ் வழக்கு தொடர்பாக மேலும் தெரிவித்தார். அத்துடன் கிரான் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள வடமுனை காட்டுப்பகுதியில் சட்டவிரோதமாக விற்பனைக்காக வெட்டப்பட்ட ஒரு இலட்சம் ரூபா பெறுமதி வாய்ந்த பாலை மர துண்டுகளை கைப்பற்றியுள்ளதாகவும் சந்தேக நபர்கள் தப்பி ஓடியுள்ளதாகவும் அவர்களை கைது செயவதற்கான நடவடிக்கையில் தாம் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.