சென்னை அணியை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அணி 4வது முறையாக கோப்பையை வென்றுள்ளது.


ஒன்றரை மாத காலமாக நடந்து வந்த ஐபிஎல் 12வது சீஸன் இறுதிக்கட்டத்தை தொட்டுள்ளது. பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று ஹைதராபாத் ராஜீவ் காந்தி ஸ்டேடியத்தில் நடைபெறும் பைனலில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர்கிங்ஸ் அணியும் ரோஹித் ஷர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற மும்பை அணி கேப்டன் ரோஹித் ஷர்மா முதலில் பேட்டிங் தேர்வு செய்தார். மும்பை அணியில் ஒரு மாற்றமும், சென்னை அணியில் மாற்றம் ஏதும் இல்லாமலும் களமிறங்கின. முதலில் களமிறங்கிய மும்பை அணியின் முக்கிய வீரர்கள் சொதப்ப 20 ஓவர்கள் முடிவில்  8 விக்கெட் இழப்புக்கு 149 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக பொல்லார்டு 41 ரன்கள் எடுத்தார். சென்னை அணி தரப்பில் தீபக் சஹார் 3 விக்கெட்டுகளும், ஷர்துல் தாகூர் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். கடைசி 12 பந்துகளில் 3 பவுண்டரிகள் அடித்த மும்பை அணி 3 விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது

எளிதான இலக்குடன் களமிறங்கிய சென்னை அணிக்கு வழக்கம் போல வாட்சன், டூபிளசிஸ் ஓப்பனிங் கொடுத்தனர். வழக்கத்துக்கு மாறான அதிரடியுடன் தொடங்கிய இந்த ஜோடி முதல் மூன்று ஓவர்களில் ஓவருக்கு ஒரு பவுண்டரி என அடித்தது. நான்காவது ஓவரை பிடித்த இரண்டு பவுண்டரி ஒரு சிக்ஸ் என குர்னால் பாண்டியா ஓவரை வெளுத்து வாங்கினார். ஆனால் அதே ஓவரின் கடைசி பந்தில் அவுட்டும் ஆனார். அதன்பிறகு வந்த ரெய்னா 8 ரன்களுக்கு வெளியேற அம்பதி ராயுடு ஒரு ரன்னுக்கு நடையை கட்டினார். அடுத்தடுத்த விக்கெட் வீழ்ச்சியால் தடுமாறிய சென்னை அணிக்கு கேப்டன் தோனியும் அதிர்ச்சி கொடுக்க தவறவில்லை. ஹர்திக் வீசிய 13வது ஓவரில் இரண்டாவது ரன் எடுக்க முயன்ற போது எதிர்பாராதவிதமாக தோனி அவுட் ஆக மொத்த டீமும் அதிர்ச்சியில் உறைந்தது. 8 பந்துகள் பிடித்த தோனி 2 ரன்களுடன் பெவிலியன் திரும்பினார்.

கடைசி கட்ட பரபரப்பு

இதன்பிறகு டீம் அவ்வளவு தான் என நினைத்தபோது தான் பிராவோவுடன் சேர்ந்து தனது அதிரடியை காட்டினார் வாட்சன். சீரான இடைவெளியில் பவுண்டரி, சிக்ஸர் என மும்பை பந்துவீச்சாளர்களை துவம்சம் செய்த அவர், குர்னால் பாண்டியா வீசிய 18வது ஓவரில் மட்டும் ஹாட்ரிக் சிக்ஸ் அடித்து அதகளம் செய்தார் செய்தார். கடைசி இரண்டு ஓவர்களுக்கு 18 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் 18.2வது பந்தில் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து பிராவோ வெளியேறினார். அடுத்ததடுத்த பந்துகளில் நான்கு ரன்கள் எடுக்க அந்த ஓவரின் கடைசி பந்தில் எக்ஸ்ட்ரா மூலமாக நான்கு ரன்கள் கிடைத்தது. இதனால் கடைசி ஆறு பந்துகளுக்கு 9 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் மலிங்கா பந்துவீசினார்.

முதல் இரு பந்துகளில் வாட்சனும், ஜடேஜாவும் தலா ஒரு ரன்கள் எடுத்தனர். மூன்றாவது பந்தில் இரண்டு ரன்கள் எடுத்த வாட்சன், அடுத்த பந்தில் மீண்டும் இரண்டு ரன்கள் எடுக்க முயன்று ரன் அவுட் ஆனார். இதனால் ஆட்டத்தில் கூடுதல் பரபரப்பு தொற்றிக்கொண்டது. இரண்டு பந்துகளுக்கு 4 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் ஷர்துல் தாகூர் களமிறங்கினார். ஐந்தாவது பந்தை மலிங்கா புல்டாசாக வீச அதில் இரண்டு ரன்கள் எடுத்தனர். கடைசி ஒரு பாலுக்கு இரண்டு ரன்கள் தேவை என்ற போது மலிங்காவின் யார்க்கர் பந்தில் ஷர்துல் தாகூர் எல்பிடபிள்யூ மூலம் அவுட் ஆக ஒரு ரன்னில் சென்னை அணி கோப்பையை நழுவவிட்டது.