அவசரகால சட்டம் நீடித்தால் தமிழரின் பூர்வீகம் இராணுவம் வசமாகும்: கூட்டமைப்பு


அவசரகால சட்டம் நீடித்தால் தமிழர்களின் பூர்வீக நிலங்கள் இராணுவத்திற்கு சொந்தமாகும் நிலை ஏற்படும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

ஈஸ்டர் தின தாக்குதலை தொடர்ந்து அமுல்படுத்தப்பட்ட அவசரகால சட்டத்தை தொடர்ந்து ஒரு மாதக் காலத்திற்கு நீடிப்பது தொடர்பாக இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற நாடாளுமன்ற விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”ஐ.எஸ். செயற்பாடுகளுக்கு எதிராக அவ்வமைப்பை அழித்தொழிக்கும் நோக்கில் இப்பிரேரணை கொண்டு வரப்பட்டுள்ளது.

ஆனால், இதனை பயன்படுத்தி முஸ்லிம், சிங்கள மக்கள் செறிந்து வாழும் கிழக்கு மாகாணத்தைவிட, வடக்கிற்கே அதிக நெருக்கடி கொடுக்கப்படுகிறது. எனவே, அவசரகால சட்டத்தை நீடிப்பதற்கு ஆதரவளிக்க போவதில்லை.

அவசரகால சட்டத்தை பயன்படுத்துவதன் மூலம் ஒவ்வொரு பிரதேசங்களுக்கும் ஏற்படும் விளைவுகள் குறித்து ஜனாதிபதி ஆராய வேண்டும். இதற்கு புதிய விதிமுறைகளும், கட்டுப்பாடுகளும் அவசியம்.

அவசரகால சட்டம் நீடிப்பதால் இனப்பிரச்சினை தீர்க்கப்படுவது தள்ளிவைக்கப்படுகிறது. எமது நிலம் இராணுவத்திற்கு சொந்தமாகும் நிலை ஏற்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.