அரசாங்கம் உண்மைகளை மறைக்க முயற்சிக்கிறது – மஹிந்தானந்த


அரசாங்கம் உண்மைகளை மறைத்துச் செயற்படுவதால் மக்களுக்கு அரசாங்கம் மீதான நம்பிக்கை இல்லாது போயுள்ளதாக மஹிந்த ஆதரவு நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “மக்களுக்கு தகவல்களை அறிந்துகொள்ளும் வகையிலேயே தகவல் அறியும் சட்டம் கொண்டுவரப்பட்டதாக அரசாங்கம் தெரிவித்து வந்தது. ஆனால் இப்போது அரசாங்க தகவல் திணைக்களப் பணிப்பாளரோ சுற்றிவளைப்பிலும் தேடுதலிலும் பிடிபடுபவற்றை காட்சிப்படுத்த வேண்டாம் எனக்கூறுகின்றார்.

அரசாங்கம் உண்மையை வெளியிடாத காரணத்தினாலேயே மக்கள் அரசாங்கத்தின் மீது நம்பிக்கையின்றி இருக்கிறார்கள்.

இந்த அரசாங்கத்திற்கு மக்கள் வாக்களித்தது அந்த சுதந்திரத்திற்காகவே. எவ்வாறாயினும் ஊடகங்களுக்கு தடைகளை விதிக்க வேண்டாம் எனக்கேட்டுக்கொள்கின்றோம்.

இந்த அரசாங்கம் பாரிய பொருளாதார நெருக்கடிக்கு முகம் கொடுத்துள்ளது. இந்த அரசாங்கத்தில் பல திருடர்கள் இருக்கின்றார்கள். ஒருவர் இருவர் நல்லவர்கள் இருக்கலாம். எனினும் இங்கு இடம்பெறும் கொள்ளைகளை தடுத்து நிறுத்த வேண்டும்” என வலியுறுத்தினார்.