குற்றம் சுமத்தாது நாட்டை கட்டியெழுப்ப முன்வர வேண்டும்


எதிர்க்கட்சியினர் மீது குற்றச்சாட்டுக்களை சுமத்திக்கொண்டிருக்காது தமது ஒத்துழைப்பையும் பெற்று நாட்டை கட்டியெழுப்புவதற்கு அரசாங்கம் முன்வர வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ வலியுறுத்தினார். தனது உத்தியோகபூர்வ இல்லம் அமைந்திருக்கும் வீதியை மூடியிருப்பதாக  முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களிலும் எந்தவித உண்மையும் இல்லையென்றும் கூறினார்.

பாராளுமன்றத்தில் நேற்று 27/2 நிலையியற் கட்டளையின் கீழ் கேள்வியெழுப்பும்போதே இந்தக் கருத்துக்களை அவர் முன்வைத்தார்.

ஏப்ரல் 21ஆம் திகதி நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதல்களால் பலர் பாதிக்கப்பட்டிருப்பதுடன், இத்தாக்குதல்கள் நாட்டின் பொருளாதாரத்துக்கு மரண அடியாகும்.

பயங்கரவாத தாக்குதல் காரணமாக மிகவும் கஷ்டத்துக்கு மத்தியில் தங்கள் அன்றாட வாழ்வாதாரத்தை கட்டியெழுப்பி வந்த சமுர்த்தி உதவியாளர்கள், சுயதொழில் முயற்சியாளர்கள் உள்ளிட்ட பலருக்கு வருமான வழிகள் தடைப்பட்டிருக்கின்றன. போக்குவரத்துத்துறை முழுமையாக பாதிக்கப்பட்டன. பஸ், முச்சக்கரவண்டி, லொறி டிப்பர் மற்றும் சுற்றுலாத்துறைக்கு செலுத்தப்பட்டிருந்த வாகனங்களுக்கான காப்புறுதி கடன் தவணையை செலுத்த முடியாமல் வியாபாரிகள் பாரிய பிரச்சினைக்கு முகம்கொடுத்துள்ளனர். மீதிப்பணத்துக்கு செலுத்த வேண்டிய வட்டிக்கு தண்டப்பணம் அதிகரிக்கப்பட்டுள்ளதால் கடன் செலுத்தும் பிரச்சினை அதிகரித்துள்ளது.

தேயிலை, இரப்பர் தேங்காய் உள்ளிட்டவற்றின் பொருட்களும் விலைகள் அதிகரித்துள்ளன. அத்துடன் சுற்றுலாத்துறை முழுமையாக பாதிக்கப்பட்டிருக்கின்றது. ஹோட்டல் ஒன்றில் ஒரு சுற்றுலா பயணியையேனும் கண்டு நீண்ட நாட்களாகின்றன.

கடந்த ஒரு மாதத்துக்கும் அதிகமான காலத்தில் விமான பயண தவணை எண்ணிக்கை 300க்கும் மேற்பட்டதாக நிராகரிக்கப்பட்டிருக்கின்றது. அதேபோன்று தேசிய வெசாக் வாரத்தை கொண்டாட பாரிய நிதி செலவழித்து, வெசாக் தோரணங்கள் உட்பட பல கலை அம்சங்களை அரங்கேற்றுவதற்கு பல தயாரிப்பாளர்கள் தயாராக இருந்தார்கள். என்றாலும் அவற்றை காட்சிப்படுத்த அவர்களுக்கு முடியாமல் போனது.

அதனால் இந்த நிலைமையில் பாதிக்கப்பட்ருக்கும் சுற்றுலாத்துறை விவசாயத்துறை சிறு தொழிற்சாலையை கட்டியெழுப்ப நடவடிக்கை எடுக்கவேண்டும்.

எனவே அரசாங்கம் எதிர்க்கட்சிக்கு குற்றம் சுமத்திக்கொண்டிருக்காமல் விழுந்துருக்கும் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப நடவடிக்கை எடுக்கவேண்டும். அதற்கு எங்களால் முடிந்த உதவிகளை செய்ய தயாராக இருக்கின்றோம் என்றார்.