பெரியகல்லாறு ஸ்ரீ கடல்நாச்சியம்மன் ஆலய வருடாந்த வைகாசித் திருச்சடங்கு



ரவிப்ரியா


மட்டக்களப்பு மாவட்டத்தில் பெயர் சொல்லும் கிராமமாக பெரியகல்லாறு கடந்த 500 வருடங்களுக்கு மேலாக நிமிர்ந்து நிற்கின்றது. கல்வி, கலை. கலாசாரம். பண்பாடு சமய ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டான கிராமம்.மட்டக்களப்பு மாவட்டத்தின் தெற்கு எல்லையாக சப்த தள இராஜகோபுரத்தை அடையாளப்படுத்தி;தனித்துவத்தைக் காத்து நிற்கும் இயற்கை செழிப்பு நிறைந்த கிராமம்.

இங்கு வாவியை வருடி படிக்கற்களுடன் அமையப்பெற்ற, மிகப் பழமை வாய்ந்த கிராமத்தின் ஆரம்பஆலயங்களில் ஒன்றாக இதமான இயற்கைச் சூழலில் பெரியகல்லாற்றின் கிழக்குப் பகுதியில்அமையப்பெற்றதுதான் கடல்நாச்சி அம்மன் என்னும் ஆலயம். கல்லாற்றில் ஆட்சி செய்வது கடல்நாச்சி அம்மன்என்பது தான் பல சமூகங்கள் வாழும் இக் கிராம மக்களின் மதம் கடந்த நம்பிக்கையாகும். புயங்கர இயற்கை(சூறாவளி, சுனாமி) அனர்த்தங்களுக்கெல்லாம் தாக்கப் பிடித்து நிலை குலையாமல் நிற்கும் ஒரே ஆலயம்.

ஆலய வரலாறு தொடர்பாக சரித்திர ரீதியாகவும், கர்ணபரம்பரை கதை மூலமாகவும் தெரியப்படுத்தப்படுகின்றது.இலங்கையைப் பொறுத்தவரை சரித்திர ரீதியாகவும் சமய ரீதியாகவும் தென் இந்திய தொடர்புகள் தவிர்க்கமுடியாதவை.

அந்தவகையில் காவேரிப் பூம்பட்டினம் அன்றைய கடல் வணிகத் தறையில் முக்கியத்துவம் பெறுகின்றது. இங்குபழங்குடி மக்களென பரதவர்கள் சமூகம் இருக்கின்றது. இவர்களின் முக்கிய குல தெய்வங்களில் ஒன்றாககடலம்மன் கருதப்படுகின்றது என்பது வரலாற்று நூல்களில் பதிவு செய்துள்ளன.

பரதவர் குலத்து வழித் தோன்றலான மீகாமன் என்னும் சிற்றரசன் கடல் பயணங்களில் வியாபார நோக்கமாக நன்குதேர்ச்சி பெற்றவன். அந்த சமூகத்தினருடன் இணைந்து கடற் பயணம் மேற்கொண்ட போதுதான் எதிர்பாராத கடற்கொந்தளிப்பில் சிக்க நேரிட்டது. பயங்கரமாக படகு தடுமாறிக் கொண்டிருந்தது. பதற்றம் அவர்களை முழுமையாப்பற்றிக் கொண்டது.

இனி தங்கள் கையில் எதுவுமில்லை என்ற நிலைக்கு எல்லோரும் வந்துவிட்டார்கள். தங்கள் குல தெய்வமான கடலம்மையை உளபூர்வமாக கைகூப்பி நம்பிக்கையுடன் வேண்டுதல் செய்தனர்.

அவர்கள் நம்பிக்கை வீண்போகவில்லை. கடல் கொந்தளிப்பின் மத்தியில் அங்கு ஒளிவெள்ளம் ஒன்று உருவாகிகரை நோக்கி நகர்ந்தது. அது தத்தளித்த படகைச் சமப்படுத்தி காந்தம் இரும்பை இழுப்பதுபோல் லாவகமாக இழுத்துச் செல்வதை அவர்களால் உணர முடிந்தது.

உயிரைக் கையில் பிடித்தது போல் இருந்தவர்களுக்கு அம்மன் கை கொடுத்துவிட்டார் என்ற நம்பிக்கை பிறந்தது.எவ்வித விக்கினங்களும் இன்றி படகு கரையைத் தொட்டது. அந்த இடம்தான் பெரியகல்லாறு. கடலம்மன்தங்களுக்கு அற்புதம் செய்துவிட்ட மகிழ்ச்சியில் அவர்கள் இருந்தார்கள்.

அவர்கள் அனைவரும் அரோஹரா கோஷம் போட்டபடி அந்த அரச விருட்சங்களின் கீழ் அமர்ந்து அம்மனுக்குவிசேட பொங்கல் செய்து வழிபட்டு தங்கள் நன்றியை வெளிப்படுத்தினார்கள். மறுநாள் அதிகாலை அவ்விடத்தில்ஆடிப்பாடி மகிழ்ந்தார்கள். இதுவே தற்போது செவ்வாய்ககாடுதல் நிகழ்வாக பின்பற்றப்பட்ட வருகின்றது.இவையனைத்தும் வைகாசி பூரணையை அடுத்துவரும் திங்கட்கிழமை அன்றே நடைபெற்றதாகக்கூறப்படுகின்றது.

படகில் வந்தவர்களில் சிலர் இங்கேயே தங்கியிருந்து அம்மனை வழிபட்டு வந்ததாகவம் கூறப்படுகின்றது.

இது ஆலய வரலாறாக இருந்தபோதும் கடலம்மனுக்கான வரலாறு மிக நீண்ட சரித்தரமாக உள்ளது. சிவனின்திருவிளையாடல்களில் அம்மன் வரலாறும்; முக்கியமானதொன்றாகக் சித்தரிக்கப்படுகின்றது.

மற்றொரு கர்ண பரம்பரை கதையின்படி தற்போது ஆலயம் அமைந்துள்ள பகுதியானது ;முன்பு அடர்ந்தகாட்டுப்பகுதியாகவே காட்சியளித்தது. மாலை வேளைகளில் குடும்ப பெண்கள் இங்கு விறகு பொறுக்கச் செல்வதுவழக்கம். அன்றும் அப்படித்தான் அவர்கள் விறகு பொறுக்கச் சென்றபோது ஒரு மரத்தின் கீழ் தலைவிரி கோலமாய்அறிமுகமற்ற ஒரு பெண் அமர்ந்திருப்பதைப் பார்த்து அதிர்ந்து போனார்கள். தலைவிரி கோலமாய் அழகின்வரைவிலக்கணமாய் வடித்த சிலைபோல் அவள் புன்னகையால் வசீகரித்து இருந்தாள்

அவளை அவர்கள் அணுகி விசாரித்ததில். தான் நெடுந்தூரம் இருந்து வருவதாகவும் இந்த இடம் தனக்கு மிகவும்பிடித்துவிட்டதால் இங்கு அமர்ந்திருப்பதாகவும் வாய் மலர்ந்தாள். உண்ண ஏதாவத கிடைக்குமா என்று கேட்டாள்.அவளை தங்கள் வீட்டுக்க அழைக்க, அவள் மறுக்க உணவு எடுத்தவர அவர்கள் வீட்டுக்குச் சென்றார்கள்.

உணவுப் பொதியுடன் குறித்த இடத்திற்கு அவர்கள மீண்டும்; வந்தபோது அங்கு அவள் இல்லை. எங்கு தேடியும்அவள் தென்படவில்லை. அவ்வேளை கடல் பகுதியில் இருந்து ஒரு ஒளிப் பிழம்பு தெளிவாகத் தெரிந்தததைக்கண்டு வியந்தார்கள். தொடர்ந்து கடலில் இருந்து அசரீரீ ஒலித்தது.
“நான் அமர்ந்திருந்த இடமும் சூழலும் இயற்கை வனப்பும் என்னை வெகுவாகக் கவர்ந்துவிட்டது. பிடித்துவிட்டது.நான் தேடிவந்த இடத்திலும் பார்க்க எல்லா விதத்திலும் பொருத்தமாகி என்னை ஈர்த்துவிட்டது.

எனவே இந்த அதே இடத்தில் என்னை நினைத்து ஒவ்வொருவருடமும் வைகாசிமாத பூரணையை அடுத்துவரும் திங்கட்கிழமை நள்ளிரவு வணங்கினால் உங்களனைவரையும் ஆசீர்வதிப்பேன்”

அசரீரீ அவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. அம்மனின் தரிசனமும், அற்புதமும் அவர்களை உற்சாகப்படுத்தியது.கிராமமே கூடியது. பந்தல் ஆலயமாக ஆரம்பிக்கப்பட்டு நீண்டகாலமாக அவ்வாறே தொடர்ந்தது. பின்னர் பக்தர்களின் பங்களிப்புடன் ஆலயம் அமைக்கப்பட்டு இன்று இயற்கையும் செயற்கையும் சங்கமிக்கும் ஆலயமாக வளர்ச்சி பெற்றுள்ளது.

இங்கு குடி மரபிற்கமைய கம்பிளியாகுடி சமூகத்தை சேர்ந்த ஒருவரே பூஜை செய்வார். பூஜை முறையும் வித்தியாசமானது. வாய் கட்டி சுலோகங்கள் இல்லாமல் தீபம் காட்டி மானசீகமான வேண்டுதலாகவே பூஜை நடைபெறுவது வழக்கமாகும்.

ஆலய வருடாந்த வைகாசித் திருச்சடங்கு எதிர்வரும் (20) திங்களன்று அதிகாலை ஆரம்பமாகி மறுநாள்செவ்வாய்க்கிழமை அதிகாலை செவ்வாய்க்காடுதல் சமுத்திரத்தில் கும்பம் சொரிதல் நிகழ்வுகளுடன் நிறைவுபெறும்.

19ந் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 8.00 மணிக்கு வாஸ்து சாந்தியுடன் கிரியைகள் ஆரம்பிக்கப்படும். மறுநாள்திங்கள் காலை திருக்கதவு திறத்தலும், அதனைத் தொடர்ந்து பூஜைகளும் இடம்பெறும்