பாடசாலைகளில் விடுபட்ட பாடங்களை பூர்த்திசெய்ய விசேட வேலைத்திட்டம்


பாதுகாப்பு நிலைமைகளை கவனத்திற்கொண்டு பாடசாலைகள் மூடப்பட்ட காலப்பகுதியினுள் விடுபட்ட பாடத்திட்டங்களை பூர்த்தி செய்வதற்கான வேலைத்திட்டமொன்றை முன்னெடுக்குமாறு, அதிபர்களுக்கு கல்வி அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.

இதேவேளை, எச்சந்தர்ப்பத்திலும் தவணை பரீட்சையை கைவிட வேண்டாம் என, அமைச்சின் மேலதிக செயலாளர் ஆர்.எம்.ரத்நாயக்க கேட்டுக்கொண்டுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தினமான கடந்த ஏப்ரல் 21 ஆம் திகதி கொழும்பிலும் மட்டக்களப்பிலும் இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவங்களை தொடர்ந்து, பாடசாலைகளில் கற்றல் நடவடிக்கைகள் தாமதமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இரண்டாம் தவணைக்காக பாடசாலைகளில் கற்றல் நடவடிக்கைகள் கடந்த ஏப்ரல் 22 ஆம் திகதி தொடங்கப்படவிருந்த போதும், பாதுகாப்பு நிலைமைகளை கவனத்திற்கொண்டு மே 6 ஆம் திகதியே பாடசாலைகள் தொடங்கப்பட்டன. இந்நிலையிலேயே, பாடசாலைகளில் விடுபட்ட பாடத்திட்டங்களை பூர்த்தி செய்வதற்காக விசேட வேலைத்திட்டமொன்றை முன்னெடுக்குமாறு அதிபர்களுக்கு, கல்வி அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.