சாய்ந்தமருதின் தாகத்தை முன்னிறுத்தி அபிவிருத்திகளை தடுக்க கூடாது


சாய்ந்தமருது மாளிகைக்காடு இளைஞர் தலைமைத்துவ பேரவையின் இப்தார் நிகழ்வு முன்னாள் கிழக்கு மாகாணசபை குழுத்தலைவர் கலாநிதி ஏ.எம்.ஜெமீல் அவர்களின் அனுசரணையில் இன்று சாய்ந்தமருது லீ மெரிடியன் மண்டபத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் முன்னாள் கிழக்கு மாகாணசபை குழுத்தலைவர் கலாநிதி ஏ.எம்.ஜெமீல், கல்முனை மாநகரசபை முதல்வர் சட்டத்தரணி ஏ.எம்.ரகிப் மற்றும பல மக்கள் பிரதிநிதிகள், உலமாக்கள், கல்விமான்கள் பிரதேச பொதுநல அமைப்புக்களின் பிரதிநிதிகள் பொதுமக்கள் என பெரும்திரளானோர் கலந்துகொண்டனர்.

இங்கு தலைமையுரை நிகழ்த்திய பேரவையின் தலைவரும் முன்னாள் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சாரணர் அப்துல் மஜீத் முஹம்மது தில்ஷாத் நாட்டின் தற்போதைய நிலையில் எமது பிராந்திய இளைஞர்களை சரியான வழியில் வழிநடத்தி அவர்களை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு எங்களுக்கு இருக்கிறது என்றார் மேலும் தனது உரையில்

எங்களின் பிரதேசத்தின் அபிவிருத்தி, கல்வி, விளையாட்டு,கலை இலக்கிய துறைகளின் மேம்பாட்டு நடவடிக்கைகளில் சாய்ந்தமருது மாளிகைக்காடு இளைஞர் தலைமைத்துவ பேரவை அர்ப்பணிப்புடன் பயணிக்க தம்மை தயார்படுத்தி வருவதாகவும் கடந்த காலங்களில் எமது இளைஞர்கள் முன்னின்று போராடிய எமது மக்களின் தணியாத தாகமான சாய்ந்தமருது உள்ளுராட்சி மன்ற கோசத்தை இன்னும் வலுவாக நாங்கள் முன்னெடுக்க தயாராக உள்ளதாகவும் தெரிவித்தார். மேலும்

சாய்ந்தமருதின் பெயரை உலகுக்கு அறிமுகம் செய்துவைப்பதில் பங்களிப்பு செய்த இளைஞர்களின் சக்தியை வீணடிக்காது அவர்களை பட்டைதீட்டி இந்த தேசத்தின் சக்திமிக்க தலைவர்களாக மாற்ற நாங்கள் பல வேலைத்திட்டங்களை அறிமுகம் செய்ய உள்ளோம். எதிர்காலத்தில் எமது மண்ணின் நிலைப்பாடு பற்றி எமது பிரதேச மக்களிடம் பெரிய கவலை தொக்கி நிற்கிறது. 

எங்களின் பிரதேச மக்களின் அபிவிருத்திக்கு எல்லோரும் கட்சி பாகுபாடுகளை துறந்து அரசியல் அஜந்தாக்களை மறந்து உதவிசெய்ய முன்வர வேண்டும். சகல துறையிலும் எமது ஊரை வளப்படுத்த வேண்டும். எமது ஊரின் தாகத்தை முன்னிறுத்தி அபிவிருத்திகளை நாம் தடுக்க கூடாது என தனது உரையில் வலியுறுத்திப்பேசினார்.