நண்பர்களுடன் நீராடிய இளைஞர் சுரியில் சிக்கி மரணம்! காப்பாற்ற போனவர் வைத்தியசாலையில்


(ரவிப்ரியா , விஜயரெத்தினம் )
களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெரியகல்லாறு கடல்நாச்சி அம்மன் ஆலயத்திற்கு முன்பாக உள்ள நீரோடையில் இன்று  ஞாயிறு (19) பிற்பகல் நண்பர்களுடன் நீராடிய இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவத்தால் கிராமமே சோகத்தில் ஆழ்ந்துள்ளது. 
இதுபற்றி மேலும் தெரியவருவதாவது.

பெரியகல்லாறு கடல்நாச்சி அம்மன் ஆலய வருடாந்த சடங்கிற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருந்ததால் ஆலயத்தில் மக்கள் ஓரளவு கூடியிருந்த வேளையிலேயே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது. இளைஞர்களுக்கும் சிறுவர்களுக்கும் அம்மன் படிக்கட்டில் இறங்கி நீராடுவதில் அலாதிப் பிரியம். எனவே இளைஞர் குழு ஒன்று செல்பி எடுத்தவாறே நீரோடையில் இறங்கி ஆனந்தமாக நீராடிக்கொண்டிருந்த வேளையிலேயே இந்த அபத்தம் ஏற்பட்டது.

நண்பர்களுடன் நீராடிக் கொண்டிருந்த தே.திமோத்தி ஆகாஷ் என்ற இளைஞர் சற்று தள்ளி தனியே நின்று நீராட முயன்ற போது அந்த இடம் சுரி நிறைந்ததாக காணப்பட்டதால் அதில் சிக்கி  தத்தளித்துக் கொண்டிருந்தததை அவதானித்த அவரது நண்பர் அக்ஷே அவரைக்காப்பாற்ற முயற்சித்தபோது அவரும் சுரியில் சிக்க தவிக்க நேர்ந்தது. அவ்வேளை ஒருவர் அவரைப் பாதுகாத்து கரைசேர்த்து உடன் கல்லாறு வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். பின்னர் கல்முனை ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டு அவர் காப்பாற்றப்பட்டுள்ளார்.

ஆனால் ஆகாஷ் நீண்டநேர தேடுதலின் பின்னரே சுரியில் இருந்து மீட்கப்பட்டார். குற்றுயிராய் இருந்த அவர் கல்லாறு வைத்தியசாலைஊடாக உடன் கல்முனை ஆதாரா வைத்தியசாலைக்கு அனுப்ப பட்ட போதும் அவர் உயிரிழந்துள்ளார். இவர் இந்த வருடம் உயர்தரப்பரீட்சைக்கு தோற்ற இருந்தவர்.

களுவாஞ்சிக்குடி பொலிசார் உடன் குறித்த இடத்திற்கு வருகை தந்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். பிரேதம் கல்முனை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

வருடாந்த அம்மன் சடங்கினால் களைகட்டியிருந்த கல்லாறு எதிர்பாராத இந்த துர்அதிஸ்டவசமான சம்பவத்தினால் சோபை இழந்தகாணப்படுகின்றது. அவரது நண்பர்களும் குடும்பத்தினரும் அந்த துயரில் இருந்து மீள முடியாதவர்களாக பரிதவித்துக்கொண்டிருக்கின்றார்கள்.