பபுவா நியுகினியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை


இன்று செவ்வாய் மாலை பபுவா நியுகினியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது, இதனையடுத்து அந்நாட்டுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது, அருகில் உள்ள சாலமன் தீவுகளுக்கும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

முதலில் இந்த பூகம்பம் ரிக்டர் அளவுகோலில் 7.7 என்று அறுதியிடப்பட்டது, ஆனால் அமெரிக்க நிலநடுக்க புவியியல் ஆய்வு மையம் 7.5 என்று அறுதியிட்டுள்ளது. இதன் மையம் கொகோபோ என்ற இடத்த்துக்கு வடகிழக்கே 45 கிமீ தொலைவில் இருந்ததாகவும் வெறும் 10 கிமீ ஆழத்தில் ஏற்பட்டதாகவும் யுஎஸ்ஜிஎஸ் தெரிவித்துள்ளது.

ஆழம் குறைவாக ஏற்படும் நிலநடுக்கங்களினால் சேதம் அதிகமாக இருப்பது வழக்கம். ஆனால் இங்கு மக்கள் தொகை குறைவு என்பதால் நிலநடுக்கத்தினால் பெரிய சேதம் ஏற்பட வாய்ப்பில்லை என்று யுஎஸ்ஜிஎஸ் தெரிவித்துள்ளது.

பபுவா நியுகினியா நியுகினியா தீவின் கிழக்குப்பாதியில் உள்ளது, இது இந்தோனேசியாவுக்கு கிழக்கே உள்ளது.

பபுவா நியுகினியா பசிபிக் ‘நெருப்பு வளையத்தினுள்’ இருக்கும் நாடாகும், இங்கு ஏகப்பட்ட பூகம்ப உருவாக்க பாறைப்பிளவுகள் இருக்கின்றன. மேலும் நிறைய எரிமலை நடவடிக்கைகளும் இருப்பதால் பெரிய பெரிய பூகம்பங்கள் ஏற்படும் பகுதியாகும்.

பூகம்ப மையத்தின் 1000கிமீ சுற்றுப்பரப்பில் இருக்கும் பகுதிகளில் சுனாமி பேரலைகள் ஏற்படலாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

பிப்ரவரி 2018-ல் ஏற்பட்ட 7.5 ரிக்டர் அளவு பூகம்பத்தினால் 125 பேர் பலியானார்கள். சுமார் 35,000 மக்கள் வீடுகளிலிருந்து வெளியேறினார்கள். தற்போதைய பூகம்பத்தின் சேத விளைவுகள் இனிமேல்தான் தெரியவரும்